

கேட்ஜெட் பிராண்டுகளுக்கெல்லாம் மாஸ்டராக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ‘ஏர்பவர்’ என்ற வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஒன்றை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. 2017 லிருந்தே இதற்கான அறிவிப்புகள், படங்கள் எல்லாம் வெளியாகி வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால், இந்தத் தொழில்நுட்பம் முழு தரத்துடன் இல்லாததால் அதன் உற்பத்தி திட்டத்தை நிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது. ஏற்கெனவே, பல சீன, கொரிய நிறுவனங்கள் வயர்லெஸ் சார்ஜிங் கேட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்தி சந்தையில் விற்பனை செய்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஆப்பிள் தனது முயற்சியில் தோல்வி கண்டிருப்பது ஆப்பிளுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
வீட்டை கண்காணிக்கும் கூகுள்
கூகுள் நிறுவனம் மென்பொருள் சேவைகளைத் தாண்டி கேட்ஜெட்டுகளையும் தீவிரமாகக் களமிறக்கி வருகிறது. ஸ்மார்ட் போன் முதல், ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகள் வரை அனைத்தும் அதில் அடங்கும். இதில் கூகுள் நெஸ்ட் செக்யூரிட்டி தயாரிப்பும் ஒன்று. இது வீட்டினுள் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா ஆகும். இதில் கூகுள் அசிஸ்டென்ட் வசதியும் உள்ளது.
கடந்த 18 மாதங்களாகச் சந்தையில் இருக்கும் இந்த தயாரிப்பில், மைக்ரோபோன் வசதி இருப்பதையே கூகுள் நிறுவனம் குறிப்பிட மறந்துவிட்டது. இதனால், கூகுள் ரகசியமாக தகவல்களை ஒட்டுக்கேட்க நினைக்கிறதா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து கூகுள் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டு, ஸ்பெசிஃபிகேஷனில் மைக்ரோபோன் இருப்பதைக் குறிப்பிட மறந்துவிட்டோம், வேறு எந்த ரகசியமும் இதில் இல்லை எனக் கூறியுள்ளது.
ஸ்மார்ட் ஃபேன்
ஓட்டோமேட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் 700 வீடுகளில் 16 மாத காலம் ஆய்வு நடத்தி ஸ்மார்ட் ஃபேன்களை உருவாக்கி இருக்கிறது. இது புளூடூத் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக ஆப் வழங்கப்படுகிறது. இந்த ஆப் மூலம் ஃபேனை இயக்கலாம். வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் செய்யலாம். விரைவில் இதில் வைஃபை வசதி மூலம் இயக்கும் தொழில்நுட்பத்தையும் இணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் விலை ரூ.3,999.