

உங்களுக்கு நேர்முகத் தேர்வுகளில் (Interviews) கலந்து கொண்ட அனுபவம் இருக்கிறதா? என்னதான் அந்தப் பதவிக்கான எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும், நேர்முகத் தேர்வு அல்லவா விண்ணப்பித்த வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்குமா என்பதை இறுதியில் உறுதி செய்யும்?
தேர்வில் உட்காரவைத்து கேள்வித் தாளைக் கொடுத்து பதில் எழுதச் சொன்னால், எந்தக் கடினமான கேள்விகளுக்கும் பதில் எழுதி விடும் பலர், இந்த நேர்முகத் தேர்வு என்று வந்து விட்டால் தொடை நடுங்குவதைப் பார்த்து இருப்பீர்கள்.
பலர், முதலில் தங்கள் தோற்றம், உயரம், பருமன், நிறம் போன்றவற்றில் ஏதாவது ஒரு குறையை நினைத்துக் கவலைப்படுவார்கள். தமக்குள்ள சிறிய குறையும் கூடப் பெரிதாகவே தோன்றும். அதை மறைக்க, மாற்ற நிறைய முயற்சிப்பார்கள்.
இதற்கென்றே நிறைய வழிகாட்டி நூல்களும் உள்ளனவே. குட்டையாய் இருப்பவர் உயரவாக்கில் கோடு போட்டசட்டை அணிந்தால், உயரமாய்த் தெரிவார், நிறம் குறைவாய் இருப்பவர் வெள்ளை போன்ற வெளிர் நிறங்களில் உடை அணிவது நல்லது என்பது போல!
‘இத்தனை வருடங்களில், நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். தன்னம்பிக்கை மிக்கவர்கள் தங்கள் பலவீனங்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவர்கள் தங்கள் பலங்களைப் பெருக்கிக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள்' என்கிறார் அமெரிக்க மத போதகர் திருமதி ஜாய்ஸ் மேயர்!
இந்த விஷயத்தில் அந்தக் காலத்தில் எனது நண்பர் ஒருவர் சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘அங்கே கேள்வி கேட்க உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் என்ன கமலஹாசன் மாதிரி இருப்பார்களா என்ன? சரி, அதை விடு. சென்ற ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லாம் மன்மதன்களா, அல்லது இந்த வருடம் போட்டிக்கு வருபவர்கள் எல்லாம் அழகு ராஜாக்களா?' எனச் சொல்லித் தைரியம் கொடுப்பார் அவர்.
சரி, தோற்றத்தைச் சிறப்பாய் செய்து கொண்டு விடலாம் என்றவுடன் அடுத்த கவலை தொற்றிக் கொள்ளும். நேர்முகத் தேர்வு அறையுனுள் சென்றால், அங்கே உட்கார்ந்து இருப்பவர்கள் என்ன என்ன கேள்வி கேட்பார்கள் என்று சொல்ல முடியாது.
பல சமயங்களில் இது குற்றம் சாட்டப்பட்ட கைதியிடம் நடக்கும் காவல் துறை விசாரணை போலவே நடக்கும். அல்லது, நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டவரிடம் நடக்கும் குறுக்கு விசாரணை போல இருக்கும்!
அதுவும் இந்தப் பொது அறிவுக் கேள்விகள் என்றால் கேட்கவே வேண்டாம். சில தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகளே மற்றவர்கள் பாராட்டும்படி இருக்கும். வந்த ஆள் நுனிப்புல் மேய்பவரா அல்லது புரிந்து படிப்பவரா என்று தெரிந்து கொள்வதற்காக அவை வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
சும்மா, ‘மிஷன் சக்தி' என்றால் என்னவென்று கேட்டால் படித்து மனப்பாடம் செய்ததை யாரும் சொல்லி விடுவார்கள். இது என்று நடந்தது என்றாலும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக இந்தியப் பிரதமர் மார்ச் 27ம் தேதி அறிவித்தார் எனபதில் கொடுத்து விடுவார்கள்.
ஆனால் அதில் இதுவரை எந்தெந்த நாடுகள் வெற்றி கண்டுள்ளன, இதனால் விண்வெளியில் குப்பைகள் அதிகரிக்குமா, அக்குப்பைகளினால் ஆபத்தா என்றெல்லாம் கேட்டால் பதில் சொல்பவரின் ஆழம் புரிந்து விடும்.
இதற்கும் ஒரு வழி சொல்கிறார்கள் அனுபவசாலிகள். பதில் சொல்லும் பொழுது அடுத்து வரும் கேள்விகளுக்கு வழிகாட்டும் அதாவது அடுத்த கேள்விக்கு கொண்டு செல்லும் பதிலாகச் (leading answers) சொல்ல வேண்டுமாம்.
செயற்கைக் கோள் பற்றிக் கேட்டால், ஓரளவிற்கே தெரியும் என்று பதில்களைச் சொல்லிவிட்டு, கொஞ்ச நாட்களாக GST பற்றி படித்துக் கொண்டிருந்தேன் எனச் சொல்வது! அப்புறம் என்ன, பெரும்பாலான தேர்வாளர்கள் அதில் கேள்விகள் கேட்க இறங்கி விடுவார்கள்! இனி பந்து உங்கள் கையில்.
உங்களின் ஆழமான அறிவை, புரிதலைகாட்டி அசத்த வேண்டியது தான்! அமெரிக்க எழுத்தாளர் திருமதி மாரிலின் ஓஸ் ஸ்வான்ட் சொல்வது போல, வெற்றி கிடைப்பதற்கு நம்மிடம் பலவீனங்களே இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. அதற்கு, நாம் நமது பலங்களை வளர்த்துக் கொண்டாலே போதும்!
இதையே தான் நம்ம ஐயன் வள்ளுவரும் ‘மேவற்க மென்மை பகைவர் அகத்து' என்றார். அதாவது நம் குறைபாட்டை பகைவர்கள் முன் காட்டிக் கொள்ளக் கூடாதாம்! ‘வாழ்க்கையில் வெற்றி பெற எப்பொழுதும் நம் பலவீனத்தை வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது' என்கிறார் சாணக்கியர். பின்னே என்னங்க, அது பல சமயம் எதிராளிக்கு தெரியாமலே கூட இருக்கலாம்.
நாமாகப் போய் அதை அவருக்கு எடுத்துக் கொடுக்கலாமா? வாழ்க்கைப் போராட்டம் என்பது நமக்கு அனுதினமும் நடக்கும் தேர்வு.அதில் வெற்றி பெற வேண்டுமெனில் நம்மிடம் இருக்கும் பலங்களை வைத்தே வெற்றி பெற முடியும், வெற்றி பெற்றாக வேண்டும். நம்மிடம் சில தகுதிகள் இல்லை என்னும் பல வீனத்தை மறக்கத்தான் வேண்டும், அறம் வழுவாது மறைக்கவும் வேண்டும். என்ன, சாணக்கியர் சொல்வது சரி தானே?
- somaiah.veerappan@gmail.com