ஹீரோவின் புது வரவு: இம்பல்ஸுக்கு பதில் எக்ஸ்பல்ஸ்

ஹீரோவின் புது வரவு: இம்பல்ஸுக்கு பதில் எக்ஸ்பல்ஸ்
Updated on
1 min read

மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் புதிய வரவாக சந்தைக்கு வர உள்ளது எக்ஸ்பல்ஸ். ஏற்கெனவே இந்நிறுவனத்தின் இம்பல்ஸ் மோட்டார் சைக்கிளுக்குப் பதிலாக இதை அறிமுகம் செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் இரண்டு மாடல்கள் மே 1-ம் தேதி அறிமுகமாகின்றன. எக்ஸ்பல்ஸ் 200டி மாடலானது நீண்ட தூர பயணத்துக்காக வடிவமைக்கப்பட்டது. சாகச பயணத்துக்கென வடிவமைக்கப்பட்டது எக்ஸ்பல்ஸ் 200.இந்த இரண்டு மாடல் மோட்டார் சைக்கிளுமே 199.6 சிசி திறன் கொண்டவையாகும். ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜினைக் கொண்டவை.

இது பியூயல் இன்ஜெக்ஷன் மாடலைக் கொண்டது. ஏபிஎஸ், எல்இடி விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவற்றைக் கொண்டது. இதில் சாகசப் பயணத்துக்கான எக்ஸ் பல்ஸ் 200 மாடலின் எக்ஸாஸ்ட் பைப் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 அதேசமயம் எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலின் சக்கரங்கள் வயர் ஸ்போக்ஸ் மாடலாகும். முன் சக்கரம் 21 அங்குலம் கொண்டதாகவும், பின் சக்கரம் 18 அங்குலம் கொண்டதாகவும் உள்ளது. ராயல் என்பீல்டு இமாலயன் மாடலில் உள்ளதைப் போன்ற டயர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. டெலஸ்கோப்பிக் போர்க் முன்புறத்திலும் மோனோ ஷாக் அப்சார்பர் நடுப்பகுதியிலும் உள்ளன.

 வழக்கமான மோட்டார் சைக்கிளை விட இதன் உயரம் அதிகம்.எக்ஸ்பல்ஸ் 200டி மாடல் ஏற்கெனவே ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது எக்ஸ்பல்ஸ் 200 மாடலைக் காட்டிலும் 30 மி.மீ உயரம் குறைவு. இதில் 17 அங்குல அலாய் சக்கரம் எம்ஆர்எப் நைலோகிரிப் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இம்பல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டபோது சாகச வாகனங்கள் மீதான விருப்பம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்றும் கிடையாது. இதனால் இந்த மாடல் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இதன் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று. மேலும் அதன் செயல்பாடும் அவ்வளவாக திருப்திகரமாக இல்லை.

ஆனால் தற்போது அறிமுகமாக உள்ள இரண்டு மாடல்களுமே சந்தையின் நிலவரத்தை முழுமையாக அறிந்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவில் இது எடை குறைந்த வாகனமாக இருக்கும்.

ஏற்கெனவே சாகச மோட்டார் சைக்கிள் பிரிவில் ராயல் என்பீல்டு இமாலயன், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் ஆகியன உள்ளன. எடை குறைவு, சிறப்பான பிக் அப் ஆகியன இதற்கு பெருமளவு வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in