

மோட்டார் வாகனங்களின் பயன்பாடு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகிவருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய வாகனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பொதுமக்களும் வங்கிகள் அளிக்கும் சுலப தவணை திட்டத்தின் மூலம் வாகனங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
டெல்லியில் பெருகிவிட்ட வாகன பெருக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது அரசு. ஒற்றை இலக்க வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க வாகனங்கள் ஒரு நாளும் செயல்படுத்த விதி முறைகள் கொண்டு வந்தும் பலன் கிடைக்கவில்லை.
வாகனப் புகை அதிகரிப்பை கட்டுப்படுத்த 2000 சிசி வாகனங்கள் விற்பனைக்கு தடையும் விதிக்கப்பட்டது. அதுவும் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.
வாகனப் பயன்பாட்டையும், மாசுபெருக்கத்தையும் குறைக்க எடுக்கும் முயற்சிகள் எதுவுமே வெற்றியடைவதாகத் தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மிக எளிமையான, மலிவான தீர்வு ஒன்று உள்ளது. ஆனால், அதைப் பின்பற்ற நம்மில் யாரும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். அதுதான் சைக்கிள்.
சமீபத்தில் சக்தி மற்றும் வளம் சார்ந்த மையமான தெரி (TERI) அமைப்பு அகில இந்திய சைக்கிள் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்போடு ஒரு ஆய்வை இந்தியாவில் நடத்தியது.
அதில் இந்தியர்கள் குறைந்த தூரத்துக்கு செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்த ஆரம்பித்தாலே ஆண்டுக்கு ரூ. 1.80 லட்சம் கோடி மிச்சமாகும் என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். உடல் நலனும் நன்றாக இருக்கும்.
நம்மில் பெரும்பாலானோர் சைக்கிளைப் பயன்படுத்தினால், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும். பயன்பாடு குறைந்தால், கச்சா எண்ணெய்யின் தேவை குறையும்.
தானாகவே அதன் இறக்குமதி அளவும் குறையும். இப்படி ஒருபக்கம் நேரடியான பொருளாதார பலன்கள் கிடைப்பதோடு, உடல்நலன் பாதுகாக்கப்படுவதன் மூலம், தனிநபர்களின் மருத்துவ செலவும் குறையும்.
இவ்விதம் மிச்சமாகும் தொகை 2015-16-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 1.6 சதவீதம் ஆகும். குறைந்தது 8 கி.மீ. பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது குறைந்தாலே மிச்சமாகும் எரிபொருள் தொகை ரூ.2,700 கோடியாகும்.
இதேபோல கார் உபயோகத்துக்குப் பதிலாக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதால் உடல் நலன் காக்கப்படும். இதனால் மிச்சமாகும் மருத்துவ செலவு தொகை ரூ.1,43,500 கோடியாகும்.
வாகன புகையால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்க செலவாகும் ரூ.24,100 கோடியும் மிச்சமாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இப்போதுதான் முதல் முறையாக ஆதார பூர்வமாக இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளின்படி, சராசரியாக ஒருவர் 3.5 கி.மீ. தூரம் நடந்தால் ரூ.11,200 கோடி மிச்சமாகுமாம். மேலும் 10 லட்சம் டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படும். மிச்சமாகும் தொகை ரூ.1.80 லட்சம் கோடியானது சுகாதாரத் துறைக்கு அரசு ஓர் ஆண்டுக்கு செலவிடும் தொகையை விட அதிகமாகும்.
2001-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் இந்தியாவில் சைக்கிள் வைத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கை ஒரு சதவீத அளவுக்கே வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் கிராமப்பகுதிகளில் இந்த வளர்ச்சியானது 3.4 சதவீதமாக இருந்தது. நகர்ப்பகுதிகளில் சைக்கிள் உபயோகம் 4.1 சதவீதம் சரிந்துள்ளது.
சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்றான கருத்து மேலோங்கியதும் சைக்கிள் உபயோகம் குறைந்ததற்கு முக்கியக் காரணமாயிற்று. மேலும் மாநில அரசுகள் இலவசமாக சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கத் தொடங்கின.
பெரும்பாலும் இவை தரமற்றவையாக இருந்ததால் சைக்கிள் மீதான அபிப்ராயம் சரிந்தே போனது. முன்பெல்லாம் தாத்தா உபயோகித்த சைக்கிளை பேரன் வரை பயன்படுத்தினர். ஆனால் இப்போது ஒரு குழந்தையே மூன்று நான்கு சைக்கிளை பயன்படுத்தும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு உள்ளது சைக்கிள்களின் தரம்.
சைக்கிள் நமக்கு மட்டுமல்ல நமது சமூகத்துக்கும் பயனளிக்கும் வாகனம் என்ற எண்ணம் அதிகரிக்கும்போதுதான் சைக்கிள் உபயோகம் அதிகரிக்கும். அதுவரை வாகன நெரிசலும், சூழல் மாசையும் அதற்கு விலையாகத்தான் தர வேண்டியிருக்கும்.