Published : 18 Mar 2019 12:34 PM
Last Updated : 18 Mar 2019 12:34 PM

இது கார் காலம், தள்ளுபடி காலம்!

நிதி ஆண்டின் இறுதி மாதம். மாதாந்திர சம்பளதாரர்கள் வரி பிடித்தம் போக எவ்வளவு கைக்கு வரும் என்று கையை பிசைந்து கொண்டிருக்கும் நேரமிது. இருந்தாலும் சலுகை விலையில் அபரிமித தள்ளுபடியில் கார்கள் கிடைக்கும் போது நம்மையும் அறியாமல் நமது நீண்ட நாள் கார் வாங்கும் கனவை நனவாக்கிக் கொண்டால் என்ன என்று ஆழ் மனது கேட்கும்.

உங்களது மைண்ட் வாய்ஸ் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு கேட்டுவிட்டதோ என்னவோ... ஹோண்டா, டொயோடா, மஹிந்திரா என முன்னணி நிறுவனங்கள் வரிசை கட்டி தள்ளுபடி சலுகைகளை அள்ளி வழங்குவதாக அறிவித்துள்ளன. பிப்ரவரி மாதம் கார் விற்பனை சற்று மந்தம். நிதி ஆண்டு இறுதியில் அதிக சலுகைகளை அளித்து கார் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

அவர்களின் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சாதகம்தானே. எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு சலுகைகளை அள்ளி வழங்குகின்றன என்பதைப் பார்க்கலாம்.

டொயோடா யாரிஸ் (ரூ. 1.35 லட்சம்): மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுக்குப் போட்டியாக விளங்கும் யாரிஸ் மாடல் காருக்கு ரூ. 1.35 லட்சம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் 2019 மாடலாயிருந்தால் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி தருவதாகவும் விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். இது 107 ஹெச்பி திறனுடன், 1.5 லிட்டர் இன்ஜினுடன் வந்துள்ளது.

கொரோலா ஆல்டிஸ் (ரூ. 1.30 லட்சம்): செடான் பிரிவில் வந்துள்ள இந்த மாடலின் மேம்பட்ட ரகம் 2017-ல்தான் அறிமுகமானது. இது 88 ஹெச்பி திறன், 1.4 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வந்துள்ளது. சமீபத்தில் அறிமுகமான ஹோண்டா சிவிக் மாடலுக்கு கடும் சவாலாக இது இருக்கும். அதேபோல ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலன்ட்ரா ஆகியவற்றுக்கும் இது கடும் போட்டியை அளிக்கக் கூடியது.

இனோவா கிரைஸ்டா (ரூ.60 ஆயிரம்): இந்நிறுவ னத்தின் பிரபல மாடல் இது. இதற்கு ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 166 ஹெச்பி திறன், 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 150 ஹெச்பி திறன், 2.4 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 174 ஹெச்பி திறன், 2.8 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வந்துள்ளது. மஹிந்திராவின் மராஸோ மற்றும் மாருதி சுஸுகி எர்டிகாவுக்குப் போட்டியாக இது உள்ளது.

டொயோடா எடியோஸ் (ரூ. 55 ஆயிரம்): சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் அதிகம் உபயோகிப்பதால் தனி நபர் உபயோகத்துக்கு வாங்குவோர் எடியோஸை தேர்வு செய்வது குறைந்துள்ளது. ஆனாலும் தனி நபர் உபயோகத்துக்கு மிகவும் ஏற்ற மாடல். 68 ஹெச்பி திறன், 1.4 லிட்டர் டீசல் மோட்டாருடன் வந்துள்ளது. பெட்ரோல் மாடலானது 90 ஹெச்பி திறன் 1.5 லிட்டர் இன்ஜினைக் கொண்டது. நடுத்தர ரக செடான் மாடலான இதற்கு ரூ. 55 ஆயிரம் சலுகை அளிக்கப்படுகிறது.

டொயோடா பார்ச்சூனர் (ரூ. 45 ஆயிரம்): 7 பேர் சவுகர்யமாக பயணிக்கும் வகையில் விசாலமான இருக்கைகளைக் கொண்ட கம்பீரமான வாகனம். 177 ஹெச்பி திறன், 2.8 லிட்டர் டீசல் மோட்டாருடன் 4 சக்கர சுழற்சியைக் கொண்டது. ஃபோர்டு எண்டேவர், இசுஸூ எம்யு- எக்ஸ் போன்றவற்றுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எடியோஸ் லிவா (ரூ. 35 ஆயிரம்): சர்வதேச கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர குறியீட்டைப் பெற்ற அதிக பாதுகாப்பு நிறைந்த காராகும். ஹேட்ச்பேக் மாடலான இந்த கார் நகர்ப்புற போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றது. 80 ஹெச்பி திறன், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 68 ஹெச்பி திறன், 1.4 லிட்டர் டீசல் என்ஜினில் இது கிடைக்கிறது.

ஹோண்டா பிஆர்வி (ரூ.1 லட்சம் வரை): ஹோண்டா நிறுவனம் தனது பிஆர்-வி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது. இது 119 ஹெச்பி திறன், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடனும், 100 ஹெச்பி திறன், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடனும் இது வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது.

ஹோண்டா சிட்டி (ரூ. 75 ஆயிரம்): நடுத்தர ரக செடான் ரகமான இந்த கார் சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னாவுக்கு போட்டியாகும். பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடலுக்குமே இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

ஹோண்டா ஜாஸ் (ரூ. 60 ஆயிரம்): சுஸுகி பலெனோ, ஹூண்டாய் ஐ 20, டாடா அல்ட்ரோஸ் ஆகிய மாடலுக்கு போட்டியாக இது கருதப்படுகிறது. 90 ஹெச்பி திறன், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 100 ஹெச்பி திறன், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இது கிடைக்கிறது. 5 பேர் சவுகர்யமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

ஹோண்டா பிரையோ (ரூ. 55 ஆயிரம்): பிரையோ உற்பத்தியை இந்நிறுவனம் நிறுத்திவிட்டது. இருப்பில் உள்ளவற்றை விற்றுத் தீர்க்க விலை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. ஹேட்ச்பேக் மாடலான இந்த கார் ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஹோண்டா டபிள்யூஆர்-வி (ரூ. 50 ஆயிரம்): ஜாஸ் அடிப்படையிலான கிராஸ் ஓவர் வாகனம். இது 90 ஹெச்பி திறனில் பெட்ரோல், 100 ஹெச்பி திறனில் டீசல் வாகனங்களைக் கொண்டது. இதில் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி இல்லை.

ஹோண்டா அமேஸ் (ரூ. 35 ஆயிரம்): மாருதி சுஸுகி டிஸயர், ஃபோர்டு ஆஸ்பயர், ஹூண்டாய் எக்ஸென்ட் ஆகியவற்றுக்குப் போட்டியானது. அதிக இடவசதி கொண்டது. இந்த மாடலுக்கு இலவச காப்பீடு வசதியும் அளிக்கப்படுகிறது.

மஹிந்திரா எஸ்யுவிக்களுக்கு ரூ. 77 ஆயிரம்: எஸ்யுவி தயாரிப்புகளில் முன்னணியில் உள்ளது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா. இந்நிறுவனம் கேயுவி100 என்எக்ஸ்டி வாகனத்துக்கு அதிகபட்சமாக ரூ. 77 ஆயிரம் தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது. இது 78 ஹெச்பி திறன், 1.2 லிட்டர் இன்ஜினைக் கொண்டது. ஃபோர்டு பிரீஸ்டைல், மாருதி சுஸுகி இக்னிஸ் ஆகியவற்றுக்கு கடும் சவாலாக இது இருக்கும் என்று தெரிகிறது.

இதில் கே 2 மாடலுக்கு ரூ. 20 ஆயிரமும், கே 4 மாடலுக்கு ரூ. 26 ஆயிரமும் தள்ளுபடி தருவதாக விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர். இதில் உயர் மாடலான கே 6, கே 8 ஆகியவற்றுக்கு ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி தரப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து ரூ. 77 ஆயிரம் தள்ளுபடி தரப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யுவி 500 (ரூ. 64 ஆயிரம்): நிறுவனத்தின் பிரதான மாடல். இது 155 ஹெச்பி திறன், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வந்துள்ளது. தள்ளுபடி சலுகையானது ரொக்கம், எக்ஸ்சேஞ்ச், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் என்கிற ரீதியில் அளிக்கப்படும்.

ஸ்கார்பியோ (ரூ. 60 ஆயிரம்): நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் மாடல். போட்டிகள் அதிகரித்ததால் தற்போது இதன் விற்பனை சரிந்துள்ளது. இதை சரி செய்யும் வகையில் ரொக்க தள்ளுபடி அளிக்கிறது. இது 2.5 லிட்டர் இன்ஜின், 5 கியர்களைக் கொண்டது. இதில் எஸ் 5, எஸ் 7 மற்றும் எஸ் 11 மாடலுக்கு அதிகபட்ச தள்ளுபடி சலுகை கிடைக்கும்.

பொலேரோ பவர் பிளஸ் (ரூ. 34 ஆயிரம்): காம்பாக்ட் எஸ்யுவி. 1.5 லிட்டர் இன்ஜின் 71 ஹெச்பி திறன், 195 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை ஆகியவற்றோடு கிராமப்புற மக்களைக் கருத்தில் கொண்டு கரடுமுரடான சூழலை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

நுவோ ஸ்போர்ட் (ரூ. 30 ஆயிரம்): 100 ஹெச்பி, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியோடு வந்துள்ளது.  இதில் மானுவல் டிரான்ஸ்மிஷன் வாகனத்துக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

மராஸோ (ரூ. 20 ஆயிரம்): கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமானது. 7 பேர் மற்றம் 8 பேர் பயணிக்கும் வகையில் இரண்டு மாடல்கள் உள்ளன. 123 ஹெச்பி திறன், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது. சுஸுகி எர்டிகா, ஹோண்டா பிஆர்-வி, டொயோடா இனோவா கிரைஸ்டா ஆகிய மாடலுக்கு கடும் போட்டியாக இது திகழும்.

வெரிடோ வைப் (ரூ 20 ஆயிரம்): இந்நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மாடல் தயாரிப்பில் முதல் முயற்சியில் உருவானது. 65 ஹெச்பி திறன், 1.5லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டது.

மஹிந்திரா தார்: சாகச பயணத்திற்கேற்ற வாகனம். எஸ்டேட் உள்ளிட்ட வனப் பகுதிகளில் பயணம் செய்வோருக்கு ஏற்றது. நான்கு சக்கர சுழற்சி கொண்டது. போர்ஸ் நிறுவன குர்கா மாடலுக்கு போட்டியாக இது வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x