

ஒரு குட்டிக் கதை. நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் சில மேல்தட்டுப் பெண்கள் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தனர். அது சமயம் திடீரென்று ஒரு கரப்பான்பூச்சி பறந்து வந்து அவர்களில் ஒரு பெண்மணியின் கையில் அமர்ந்தது.
உடனே அந்தப் பெண் அலறினாள், ஆடினாள், ஓடினாள்! அந்தப் பூச்சியோ அவளை விட்டுப் பறந்து சென்று வேறு ஒரு பெண்ணின் மேல் உட்கார்ந்தது. உடனே அந்தப் பெண்ணும் கத்தினாள், குதித்தாள், அதை வேகமாக வேறு ஒரு பெண்ணின் மேல் தட்டி விட்டாள்!
இதே விளையாட்டு மீண்டும் தொடர்ந் தது. இதனால், அங்கு மற்ற மேசைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் பதறி எழுந்து ஓட, பல பீங்கான் தட்டுக் கள் உடைந்தன. உணவுப் பொருட்கள் சிந்தின, கொட்டின. பலரது உடைகளும் வீணாயின!
இந்தக் களேபரத்தைப் பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தப் பூச்சி, விடுதிப் பணி யாளர் ஒருவரின் வலது கையில் போய் அமர்ந்தது. அவரோ உடனே அமைதியானார். அசையாது நின்றார். நிதானித்தார். தனது இடது கையால் அந்தக் கரப்பான் பூச்சியைப் பிடித்து, விடுதியின் தோட்டம் வரை சென்று அதைப் பறக்கவிட்டு வந்தார்!
ஐயா, சற்றே யோசியுங்கள். அங்கு நடந்த பிரச்சினைகளுக்கு உண்மையான காரணம் என்ன? அந்தக் கரப்பான் பூச்சியா அல்லது அந்தச் சூழ்நிலையை அந்தப் பெண்கள் கையாண்ட தவறான முறையா? அந்தப் பூச்சியை விடுதியின் பணியாள் பிடித்து வெளியே விட்டது போல் அந்தப் பெண்களும் நடந்து கொண்டிருந்தால் பல நஷ்டங்களைத் தவிர்த்து இருக்கலாமே!
தம்பி, நம் அன்றாட வாழ்க்கையிலும் அப்படித்தானே? அலுவலகத்தில் மேலா ளர் ஒருவரைத் திட்டலாம். ரயிலில் பயணிக்கும் பொழுது ஒருவருக்கு பணம் தொலைந்து போகலாம். அல்லது செய்யும் தொழிலில் நஷ்டம் வரலாம். இவை ஏற்படுத்தும் பாதிப்பு என்பது, அதை அந்த நபர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது அல்லவா? படபடவென்று எதிர்ப்பைக் காட்டாமல் (react), நிதானமாக சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் (respond) அல்லவா? தீதும் நன்றும் பிறர் தர வாரா! என்பது அதுதானே.
அமெரிக்க நடிகை வலேரி பெட்ரி னேலி சொல்வது போல, எந்தச் சூழ்நிலை யிலும் மகிழ்ச்சியாய் இருப்பதா இல் லையா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வாழ்க்கையில் மனஅழுத்தம் தருபவை நடக்கத்தான் செய்யும். ஆனால், அவைகள் உங்களைப் பாதிக்க விடுவதும் விடாததும் உங்கள் கையில் தான் இருக்கிறது! உண்மை தானே?
சிலர் எல்லாவற்றுக்கும் படபடத்து காரியத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள் என்றால், வேறு பலரோ மகிழ்ச்சியின் அளவுகோல் பணம்தான் என நினைத்துக்கொள்கின்றனர்!
இணையத்தில் படித்த இந்த அனு பவத்தைக் கேளுங்கள். ஒரு பணக்கார அப்பாவிற்கு ஒரே மகன். 8 வயது. தந்தை பணம் பணம், வேலை வேலை என்று அலைபவர். இரவு அவர் வீடு திரும்பும் முன்பு மகன் தூங்கி விடுவான். காலை யிலும் பேச நேரமிருக்காது. அவன் அப் பாவைப் பார்ப்பதே அரிதாகி விட்டது.
ஒரு நாள் அதிசயமாக அப்பா மாலை 6 மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டார். சிறுவனுக்கு ஏக மகிழ்ச்சி. அப்பாவுடன் வெளியில் சென்று விளையாட ஆசைப்பட்டான். ஆனால், அவரோ 8 மணிக்கு விமான நிலையம் செல்ல வேண்டுமென்றார். போகா விட்டால், ஓர் முக்கியமான நபரைப் பார்க்க முடியாமல் போய்விடுமென்றும், அதனால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்றும் கூறி அவனுடன் விளையாட மறுத்து விட்டார்.
முகம் வாடிப்போன மகன், தந்தை யிடம் ‘‘ஓர் ஆண்டுக்கு நீங்கள் எவ் வளவு சம்பாதிக்கிறீர்கள்? ’' எனக் கேட்டான். அவரோ அது பெரிய தொகை என்றும் அவன் வய தில் அவனுக்கு அது புரியா தென்றும் சொல்லிவிட்டார்!
ஆனாலும் சிறுவன் விட வில்லை. ‘‘அப்பா, நீங்கள் 2 மணி நேரத்தில் எவ்வளவு சம் பாதிக்கிறீர்கள் என்பதையாவது சொல்லுங்களேன்'’ எனக் கேட் டான். சிறிது யோசித்த அவர், ‘‘என்ன, சுமார் 2000 ரூபாய் இருக்கும்’' என்றார் பெருமையாக!
அதைக் கேட்ட சிறுவனோ உடனே உள்ளே ஓடினான். தன் அறையிலிருந்து அவனது உண்டியலை எடுத்து வந்தான். தந்தையிடம், ‘‘அப்பா இதில் இரண்டாயி ரம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இதை நீங்களே வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் என்னுடனேயே இருந்து விளையாடுங்களேன்’' என்றான்!
அதைக்கேட்ட தந்தை அதிர்ந்து போனார். அந்தப் பிஞ்சு உள்ளத்தின் வலியை, ஏக்கத்தைப் புரிந்து கொண்டார். ஞானம் பிறந்தது. பணம் சம்பாதிப்பதற்கு நேரம் செலவழிப்பதைப் போலவே மக னுக்கும் மனைவிக்கும் நேரத்தை ஒதுக் கிப் பயன்பெறத் தொடங்கினார்.
நம்மில் பலரும் இப்படித் தானே, பணம் பணமென நமது நேரத்தை அதைப் பெருக்கு வதிலேயே செலவழித்து விட்டு, வாழ்வின் பல இனிய அனுபவங் களை இழந்து விடுகிறோம்.
‘நமது மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நாமே காரணம். மேலும் மகிழ்ச்சியான வாழ்விற்கு செல்வத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளும் குணத்தைக் கைவிட வேண்டும்' என்கிறார் சாணக்கியர். நீங்களும் அனுபவத்தில் பார்த்து இருப்பீர்களே!
- somaiah.veerappan@gmail.com