

இளைஞர்களின் ஆதர்ச மோட்டார் சைக்கிள் யமஹா என்றால் அது மிகையில்லை. தட்டினால் சீறிப் பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே யமஹா மீதான ஈர்ப்பு அதிகரிக்கக் காரணமாகும். இப்போது யமஹா நிறுவனம் ‘எம்டி 15’ எனும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடலான எம்டி9-ஐ காட்டிலும் இது பல சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும் அதைவிட இதன் விலை ரூ. 3 ஆயிரம் குறைவாகும்.
இது 149 சிசி திறன் கொண்ட லிக்விட் கூல்டு இன்ஜினைக் கொண்டது. இதில் பியூயல் இன்ஜெக்டட் முறை உள்ளதால் எரிபொருள் சிக்கனமானது. 19.3 ஹெச்பி திறனை 10 ஆயிரம் ஆர்பிஎம் வேகத்திலும், 14.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 8,500 ஆர்பிஎம் வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.
6 கியர்களுடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியைக் கொண்டது. டெல்டா பாக்ஸ் பிரேம், டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பரைக் கொண்டது. இதில் கூடுதலாக ஏபிஎஸ் வசதி உள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதன் எடை 138 கிலோவாகும்.
இதே பிரிவில் டிவிஎஸ் அபாச்சே ஆர்டிஆர் 400 4வி, பஜாஜ் பல்சர் என்எஸ் 200 ஆகிய மாடல்களின் போட்டியை இது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதே பிரிவில் கேடிஎம் 125 மோட்டார் சைக்கிளும் இதற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. மற்ற மாடல்களின் விலை இதைவிடக் குறைவாக இருந்தாலும் யமஹா அதன் பிராண்டுக்காகவே விரும்பப்படும் மாடலாக இருக்கும் எனலாம்.