

இந்திரா நூயி. 2006 முதல் 2018 வரை பெப்ஸி குழுமத்தின் உலகத் தலைவராக இருந்து, தான் பிறந்த சென்னைக்கும், தமிழகத்துக்கும், குறிப்பாக நம் ஊர்ப் பெண்மைக்கும் பெருமை சேர்த்தவர். இவர் போட்ட பாதையில் இன்று, அமெரிக்காவில் பல பெண்கள் பிரம்மாண்டக் கம்பெனிகளை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மகளிரைப் பணிக்கு அமர்த்தவே தயங்கிய எஞ்சினீயரிங் நிறுவனங்களின் கடிவாளம் இப்போது இவர்கள் கைகளில் இருப்பது நம்பமுடியாத ஆச்சரியம்.
மேரி பாரா (Mary Barra - கார்கள் தயாரிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்), ஸாஃப்ரா காட்ஸ் (Safra Catz - கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் உலக ராட்சசன் ஆரக்கிள் - Oracle), மரிலின் ஹ்யூஸன் (Marillyn Hewson - போர் விமான உற்பத்தி முன்னணி நிறுவனம் லாக்ஹீட் மார்ட்டின்- Lockheed Martin), விக்கி ஹோலுப் (Vicki Hollub - ஆக்சிடன்ட்டல் பெட்ரோலியம் - Occidental Petroleum), வர்ஜீனியா ரோமெட்டி (Virgina Rometti - ஐ.பி.எம் - கம்ப்யூட்டர் சேவைகள்) - பெண்கள் வழிநடத்தும் வகை வகையான நவீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள்.
இந்தியாவிலும், டிராக்டர்கள் தயாரிக்கும் டாஃபே தலைவராக மல்லிகா ஸ்ரீனிவாசன்; உயிரியல் மருந்து உற்பத்தி செய்யும் பயோகான் (Biocon) நிறுவனர் கிரண் ஷா மஜூம்தார்; லிமிடெட்; கம்ப்யூட்டர் உலக ஹெச். சி. எல். கார்ப்பரேஷன் சி.இ.ஓ. ரோஷ்னி நாடார். ஜொலிக்கும் புதுமைப் பெண்கள்.
பெண்கள் ஆண்களைவிடப் பல மடங்கு திறமைசாலிகள் என்கிறார், கரீன் தாபர்ன் (Karin Thorburn) என்னும் நார்வே நாட்டு நிதித்துறைப் பேராசிரியர். இவரின் ஆய்வுகளின்படி, பெண்கள் சி.இ.ஓ- க்களாக இருக்கும் கம்பெனிகள் ஆண்கள் நடத்தும் போட்டிக் கம்பனிகளைவிட, 42 சதவிகிதம் அதிக லாபம் காட்டுகிறார்கள்.
ஆனாலும், பிசினஸ் இன்னும் ஆண்களின் சாம்ராஜ்ஜியமாகத்தான் இருக்கிறது. இதோ ஆதாரங்கள்;
அமெரிக்காவின் பார்ச்சூன் பத்திரிகை ஒவ்வொரு வருடமும், அந்நாட்டுக் கம்பெனிகளை, அவர்களின் விற்பனை அடிப்படையில் பட்டியலிடுகிறது. இந்த 500 கம்பெனி சி.இ.ஓ - க்களில் வெறும் 24 பேர் மட்டுமே பெண்கள்!
சம திறமைகள் கொண்ட ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் எடுத்துக்கொண்டால், வாழ்நாளில், ஆணைவிடப் பெண் 7,13,0000 டாலர்கள் குறைவாகச் சம்பாதிக்கிறார்.
பெண்களின் உலகம் குடும்பம்தான் என்னும் பாரம்பரியப் பிம்பத்தை இந்தியாவில் உடைத்தவர்களுள் முக்கியமானவர் அனு ஆகா (Anu Aga). புனே நகரைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்கும் தெர்மாக்ஸ் (Thermax) கம்பெனியின் தலைவராக இருந்த 1996 - 2004 காலகட்டத்தில் நிறுவனத்தின் தலைவிதியை மாற்றி எழுதியவர்.
விசித்திரம் என்னவென்றால், பிசினஸ் உலகில் நுழைவோம் என்று இவர் கனவில்கூட நினைக்கவில்லை. சொந்த வாழ்க்கைச் சோகங்கள் தலைமையை இவர் மேல் திணித்தன.
*****************
ஆகஸ்ட் 3, 1942. அனு மும்பையில் பார்ஸி வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். அப்பா அர்தேஷிர் பத்தீனா (Ardeshir Bhathena), பெல்ஜிய நாட்டுக் கூட்டுறவோடு வான்ஸன் (Wanson) என்னும் தொழிற்சாலை நடத்தினார். மின்சார உற்பத்திக்கான கொதிகலன்கள் (Boiler) தயாரிப்பு. திருச்சி பி.ஹெச்.இ.எல். போல. ஆனால், சின்னக் கம்பெனி. சராசரிக்கும் மேல் வசதியான குடும்பம்.
அனுவுக்கு இரண்டு அண்ணன்கள். நன்றாகப் படிக்கும் மாணவி. ஆனால், சிறுவயதிலேயே அம்மாவும், அப்பாவும் கண்டிப்பாகச் சொன்னார்கள், “பெண்களுக்கு பிசினஸ் தோதுப்படாது. உன் கடமை, திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது மட்டுமே. நீ வேலைக்குப் போக ஆசைப்பட்டால், டாக்டர், நர்ஸ், பள்ளி ஆசிரியை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்.”
அனுவிடம் சிறு வயதிலேயே தலைமைக் குணங்கள் பளிச். பள்ளியில் மாணவர் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பையின் பாரம்பரியம் மிக்க புனித சேவியர் கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம், அரசியல்) படிப்பில் சேர்ந்தார். அங்கே. சோஷியல் சர்வீஸ் லீக் என்னும் சமூக சேவை இயக்கத்தில் ஈடுபாட்டோடு பங்கெடுத்தார்.
வாழ்வின் குறிக்கோளையே கண்டுபிடித்துவிட்ட மனத்திருப்தி. இதுதான் தன் வருங்காலம் என்று முடிவு செய்தார். இந்தத் துறையில் பிரபலமான மும்பையின் டாடா இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் படிப்பை முடித்தார். குழந்தைகள் காப்பகங்களில் ஆலோசகராகச் சேவை தொடக்கம்.
ரோஹின்ட்டன் ஆகா (Rohinton Aga) என்னும் இளைஞர் வான்ஸன் கம்பெனியில் எஞ்சினீயராக வேலை பார்த்தார். இங்கிலாந்தில் படித்தவர். திறமைசாலி. துடிப்பானவர். அனுவும், இவரும் அடிக்கடி சந்தித்தார்கள். காதல் மலர்ந்தது. 1965-ல் திருமணம்.
கணவன், மாமனார், மாமியாரோடு அனுவின் கூட்டுக் குடித்தனம். மாமனார் கண்பார்வை இல்லாதவர். மாமியார் வயதானவர். இருவரையும் கவனித்துக்கொள்வதே அனுவின் முழுநேர வேலை. புன்முறுவலோடு இதைத் தொடர்ந்தார்.
அடுத்த வருடமே, அனுவுக்கு முதல் குழந்தை. பெண். பெயர் - மெஹெர் (Meher). தொடர்ந்த சில வருடங்களில் இரண்டாவது பெண் குழந்தை. என்னவென்றே கண்டுபிடிக்கமுடியாத நோய் வந்தது. பிஞ்சு கருகியது. மதச்சடங்குகள் செய்ய அனு மறுத்துவிட்டார். குழந்தையின் நினைவுகள் நெஞ்சை அறுக்கும் என்பதால்.
இந்தச் சோகம் மறையும் முன்னே, இன்னொரு இடி. 1972 - இல் மகன் பிறந்தான். அவன் இதயத்தில் ஓட்டை. சிகிச்சை எதுவும் செய்ய முடியாது, உயிருக்கு ஆபத்தில்லை, வயதாக ஆகக் குணமாகும், ஆனால், அடிக்கடி ஆஸ்துமா என்னும் மூச்சுத் திணறல் வரும் என்று டாக்டர்கள் எச்சரிக்கை மணி அடித்தார்கள்.
மகா துணிச்சலோடு அனு எதிர்கொண்டார். அவர் நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த நாட்களைப்பற்றிச் சொல்கிறார், ‘‘சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள், மனிதர்கள் ஆகிய எந்த எதிர்மறை சக்திகள் வந்தாலும், அவை உங்களைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள். அப்போது உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று அனு அடிக்கடி சொல்லுவார்.”
வான்ஸன் கம்பெனியின் தயாரிப்புப் பொருட்களின் தரம் ஆர்டர்களைக் குவித்தது. மும்பைத் தொழிற்சாலையில் இடம் போதவில்லை. ஆகவே, புனேவுக்கு மாற்றினார்கள். அனுவின் அப்பா நிறுவனத்தை மருமகன் ஆகாவிடம் ஒப்படைத்தார். அடுத்த 15 ஆண்டுகள். எஞ்சினீயரிங் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஆகா உயர்த்திக் காட்டினார். கம்பெயின் பெயரையும், தெர்மாக்ஸ் என்று மாற்றினார். மகன், மகள் வளர்ப்பில் கவனம் செலுத்திய அனு கம்பெனியிலிருந்து விலகியே நின்றார்.
“பிசினஸ் ஆண்களின் உலகம் மட்டுமே” என்று சிறுவயதில் பெற்றோர் பதித்த பாடம். நேரம் கிடைக்கும்போதெல்லாம், சமூக சேவையில் செலவிட்டார்.
விதி சிலர் வாழ்க்கையோடு இரக்கமில்லாமல் விளையாடும். சரியான ஓய்வும், தூக்கமும் இல்லாமல் உழைத்ததாலோ அல்லது யார் கண் பட்டதோ? 1982. ஆகா வயது 40. திடீர் மாரடைப்பு. அனு கணவரை இங்கிலாந்துக்கு அழைத்துப்போனார். இதய அறுவை சிகிச்சை. எதிர்பாராத சிக்கல். அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் போது, ஆகாவைப் பக்கவாதம் தாக்கியது. பேச்சு, நினைவு அத்தனையையும் முழுவதுமாக இழந்தார்.
அனுவைக்கூட அடையாளம் தெரியவில்லை. “அத்தனை திறமைகள் ஜொலிக்கும் என் கணவர் கண்களின் முன்னால் ஜடமாக.” அனு கணவரை இந்தியாவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். பல மாதங்கள் படுக்கையில்.
மெல்ல மெல்ல நினைவு திரும்பத் தொடங்கியது. A, B, C, D, 1, 2, 3, 4 என அகரவரிசையும், நம்பர்களும் குழந்தையைப்போல் பாலபாடம். ஆகா சாதாரண மனிதரல்ல. ``ஆஹா” என்று வியக்கவைக்கும் வைரநெஞ்சுக்காரர். இரண்டே வருடங்கள். மறுபிறவி எடுத்தார். பழைய மனிதரானார்.
தொழிற்சாலைக்குப் போனார். நடந்தது கனவா, நனவா என்று எல்லோரும் ஆச்சரியப்படும்படி, முந்தைய திறமை, தலைமை. வெறியோடு உழைத்தார். அனு தன் கணவருக்கு முடிந்த அளவு கைகொடுக்க விரும்பினார். ஹெச். ஆர். இலாகாவில் உதவியாளராகச் சேர்ந்தார். அடுத்த பத்து வருடங்கள். அனு ஹெச். ஆர். இலாகா தலைவர். ஆகா மனம் நிறையக் கனவுகள். மூலதனம் தேவை. 1995. தெர்மாக்ஸ் தன் பங்குகளைச் சந்தைக்குக் கொண்டுவந்தது. கேட்டதைவிட ஏழு மடங்கு அதிகப் பணம்.
அனுவின் மகள் மெஹெர் திருமணமாகிக் கணவரோடு இங்கிலாந்தில் இருந்தார். தலைப் பிரசவம். மகளுக்கு உதவிக்காக அனு அங்கேபோனார். மகளோடு தங்கினாலும், கணவரின் உடல்நலம் பற்றி எப்போதும் கவலை. சுகப்பிரசவம் முடிந்த சில நாட்களில் மும்பை புறப்பட்டார். இதோ, இதோ, இன்னும் கொஞ்ச நேரத்தில் மும்பையின் தரையைத் தொடப்போகும் ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தை நோக்கிப் புனேயிலிருந்து பறந்துவரும் கணவனின் கார்.
எதிர்பார்ப்புகள் எகிறும் இரண்டு இதயங்கள். கார் நெடுஞ்சாலையில் சடன் பிரேக். காரின் பின் சீட்டில் மாரடைப்பில் சடலமாய்ச் சரிந்து விழுந்தார் ஆகா. அனு வாழ்க்கையில் இன்னொரு கண்ணீர் அத்தியாயம். குரூர விதியே, இந்தப் பெண்மணிக்கு இன்னும் என்னென்ன சோகங்கள் பாக்கி வைத்திருக்கிறாய், அவர் வருங்காலத்தை எப்படியெல்லாம் மாற்றப்போகிறாய்?
(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com