Published : 18 Mar 2019 01:05 PM
Last Updated : 18 Mar 2019 01:05 PM

விட்டில் பூச்சிகளா டெபாசிட்தாரர்கள்?

“ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்” இந்த வாசகம் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்தியாவில் அவ்வப்போது நிகழும் நிதி மோசடிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக டெபாசிட் திட்டம், நகை சேமிப்பு திட்டம், ஈமு கோழி, சிட்பண்ட்ஸ் ஆகிய திட்டங்களில் விதவிதமான மோசடிகளைப் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

அங்கீகாரமற்ற சில தனியார் நிறுவனங்களில் அதிக வட்டி மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்களால் ஈர்க்கப்பட்டு ஏராளமான சாமானியர்கள் வாழ்நாள் சேமிப்பை டெபாசிட் செய்து அடிக்கடி ஏமாந்து போகிறார்கள். சிட்பண்டு நிறுவனங்களிலும் அவ்வப்போது இத்தகைய மோசடிகளில் டெபாசிட்தாரர்கள் பணத்தை இழந்து வருகிறார்கள்.

சமீபத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி இந்திய நிதிஅரங்கை உலுக்கியது. அடிக்கடி நடைபெற்று வரும் இத்தகைய நிதி மோசடியில் சுதாரித்து உடனடியாக துரிதகதியில் அரசு இயந்திரங்கள் முடுக்கப்படும்.

ஆனால், “பொதுமக்களின் நினைவாற்றல் குறைந்த காலமே” என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப மீண்டும் கவர்ச்சி திட்டங்களால் கவர்ந்து  அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு விட்டில் பூச்சிகளைப் போல பொதுமக்கள் டெபாசிட்டுகளை கோட்டைவிடுகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் சிறு முதலீட்டாளர்கள்தான்.

இத்தகைய டெபாசிட்தாரர்களைப் பாதுகாக்கும் வகையில் “அங்கீகாரம் பெறாத டெபாசிட்டுகள் வாங்க தடை” என்கிற ஓர் அவசரச் சட்டத்தை சமீபத்தில் அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே டெபாசிட் வாங்குவது குறித்து ஒவ்வொரு வியாபார அமைப்புக்கும் விதவிதமான கண்காணிப்பு இயந்திரங்கள் இருந்து வந்தாலும் ஒருங்கிணைந்த சட்டமாக இது அமைகிறது.

புதிய சட்டம் ஏன்?

NB F C கம்பெனிகள், நிதிநிறுவனங்கள், சிட்பண்ட் கம்பெனிகள் ஆகியவற்றை கண்காணிக்க ரிசர்வ் வங்கி, கம்பெனி இலாகா, செபி, IRDA போன்ற பல்வேறு அரசு அமைப்புகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.  தவிர, சிட்பண்ட்ஸ் கம்பெனிகள் மாநில அரசுகளின் கண்காணிப்பில் உள்ளன. இருந்தாலும் தற்போதைய சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் அதிக வட்டி கொடுத்து டெபாசிட்டுகளைத் திரட்டி வருகின்றன பல நிறுவனங்கள்.

அவற்றில் சில நிறுவனங்கள் மோசடி வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே” – பட்டுக்கோட்டையாரின் குரல், ஆட்சி மையத்தை சுண்டிவிட்டதுபோல, ஓர் ஒருங்கிணைந்த சட்டமாக “அங்கீகாரம் பெறாத டெபாசிட் தடைச்சட்டம்” அவசரப் பிரகடனமாக பிப்ரவரி 13ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய சட்டம் என்ன சொல்கிறது?

அங்கீகரிக்கப்படாத நபர்கள் டெபாசிட் பெற புதிய சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விளம்பரம் செய்பவர்களோ, டெபாசிட் பெறுபவர்களோ கண்டுபிடிக்கப்பட்டால் அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் செலுத்தும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

டெபாசிட் என்பது என்ன ?

டெபாசிட் என்பது கடனாகவோ, முன் பணமாகவோ பெறப்பட்டு வட்டியுடனோ அல்லது வட்டி இல்லாமலோ திருப்பிக்கொடுக்கப்படும் என்கிற உறுதியுடன் பெறப்படும் அனைத்துப் பணமும் இதில் அடங்கும். ஆனால், கீழே சொல்லப்பட்டவை இதற்குப் பொருந்தாது.

1. வங்கிகளில் இருந்து பெறப்படும் டெபாசிட் அல்லது கடன்

2. பொது நிதி நிறுவனங்களில் இருந்து (Public financial institutions) பெறப்படும் பணம்

3. அரசாங்கத்திலிருந்து பெறப்படும் பணம் மற்றும் வெளிநாட்டு வங்கி மற்றும்

a. அந்நிய செலாவணிச் சட்டங்கள் அனுமதிக்கும் முன் பணங்கள்

4. பங்குதாரர்கள் கொண்டு வரும் மூலதனம்

5. பங்குதாரர்களின் உறவினர்களிடமிருந்து பெறப்படும் பணம்.

6.  சொத்தை விற்கும் போது வாங்கும் முன்பணம்.

7.  வியாபாரத்துக்காக வாங்கப்படும் பாதுகாப்பு வைப்பு (Security Deposit ) அசையா சொத்துகளை வாங்குவதற்கான முன்பணம், நீண்ட கால கட்டமைப்புத் திட்டம் முன்பணம் போன்றவை இவை யாவும் டெபாசிட் வகையில் சேராது.

யாருக்கு பொருந்தும் ?

இது தனி நபர், கூட்டு வியாபாரம், கம்பெனிகள், டிரஸ்டுகள் போன்ற அனைத்து வகையான அமைப்புகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். அவசரச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட தேதியிலிருந்து அங்கீகாரம் பெறாத டெபாசிட்டுகள் பெற தடை செய்யப்பட்டுள்ளன. நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரமும் செய்ய முடியாது.

வியாபார அபிவிருத்திக்காகவும் தனிப்பட்ட முறையில் வாங்கும் அட்வான்ஸ் அல்லது கடன் இதில் அடங்காது. டெபாசிட் வாங்கி அதனை ஒரு வியாபார அங்கமாக்கி செயல்படுபவர்களுக்கு இது பொருந்தும். அங்கீகாரம் பெறாத பெரும்பான்மையான நகை சேமிப்புத்திட்டம், நிதி கம்பெனிகளில் போடப்படும் டெபாசிட்களுக்கு இந்தச் சட்டத்தால் பாதிப்பு ஏற்படலாம். அரசிடம் இருந்து இது குறித்து கூடிய விரைவில் விளக்கம் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

எதிர்நோக்கும் சவால்கள்:

சராசரி மனிதனை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. இதன் வெற்றி இதனை நடைமுறைப்படுத்துவதில்தான் உள்ளது. இந்தியாவில் பல சிறுதொழில் நிறுவனங்கள் வங்கியை முழுமையாக நம்பியிருக்காமல் அருகில் இருக்கும் நிதி நிறுவனங்களிடம் தேவையான கடனை பெற்று வியாபாரம் செய்கின்றனர். இந்த நிறுவனங்களிடம் டெபாசிட் செய்பவர்களும் பலர். ஆண்டாண்டாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த நிதி நிறுவனங்களில் பல அங்கீகாரம் பெறாதவை.

சில ஏமாற்று நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் அச்சம் காரணமாக பல காலமாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். பல நகரங்களில் சிறு தொழில் அமைப்புகளுக்கு கடன் கொடுக்க வங்கிகள் இன்றும் தயக்கம் காட்டி வருகின்றனர். உடனடி கடன் வழங்கி வருவதாலும் தங்களது பிணைய சொத்துக்கள் கேட்காததாலும் வங்கிக்கு மாற்றாக உள்ள நிதி நிறுவனங்களைச் சிறுதொழில் அமைப்பினர் அணுகுகின்றனர்.

உதாரணமாக, தமிழ்நாட்டில் சிறு நகரங்களான கரூர், நாமக்கல், சிவகாசி போன்ற தொழில் நகரங்களில் இத்தகைய நிதி நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டுவருகின்றன. இவற்றில் பதிவு செய்யப்படாமல் மக்கள் நம்பிக்கையின் படி பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தும் நிதி நிறுவனங்கள் பல உள்ளன. அனைத்துப் பதிவுகளையும் செய்து ஏமாற்றிய சில நிறுவனங்களும் உள்ளன. இதை வித்தியாசப்படுத்தி தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்தின் பங்கு அதிகமாகவே உள்ளது.

- karthikeyan.auditor@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x