

தொழில் துறையில் சமீபத்திய சர்ச்சைகளில் சிக்கியுள்ள மைண்ட்ட்ரீ நிறுவனத்துக்கு அறிமுகமே தேவையில்லை. ஏனெனில், இந்நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணம் என்பது ஒரு அழகான குடும்பத்தின் கதை போன்றது.
தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த 1999-2000-ம் ஆண்டுக் காலகட்டத்தில், விப்ரோ, லுசென்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் டெக்னாலஜி உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களில் அனுபவம் பெற்ற 10 சிறப்பான தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் இந்த மைண்ட்ட்ரீ.
வெறும் 10 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா? ரூ. 13 ஆயிரம் கோடிக்கும் மேல். ஆனால், இந்த வளர்ச்சியை நினைத்து இன்று அவர்களால் பெருமைப்பட்டுக்கொள்ள முடியவில்லை. காரணம், இன்று மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் நிர்வாகம் பெரும்குழப்பத்தில் உள்ளது.
மைண்ட்ட்ரீ நிறுவனத்துக்கு விதை போட்டவர், காபி டே நிறுவனத்தின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா. மைண்ட்ட்ரீ நிறுவனத்தைத் தொடங்க தேவையான முதலீடுகளை வழங்கியவர். சித்தார்த்தா ஏற்பாடு செய்த இரண்டே இரண்டு அறையில் தான் மைண்ட்ட்ரீ நிறுவனம் தொடங்கப்பட்டது.
ஆனால், இன்று, இந்நிறுவனத்தில் தன் வசம் உள்ள 20 சதவீத பங்குகளை விற்றுவிட்டு, நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவெடுத்துவிட்டார்.
வி.ஜி.சித்தார்த்தா பங்குகளை விற்பது எல் அண்ட் டி நிறுவனத்திடம். எல் அண்ட் டி நிறுவனமும் மைண்ட்ட்ரீ நிறுவனத்தைக் கையகப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருக்கிறது. சித்தார்த்தாவிடமிருந்து வாங்கும் 20 சதவீத பங்குகள் போக, 15 சதவீத பங்குகளை பங்குச் சந்தையிலிருந்தும், 31 சதவீத பங்குகளை நிறுவனத்தின் பிற புரொமோட்டர்களிடமிருந்தும் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்குதான் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் சிலருக்கு சிக்கல் இருக்கிறது.
மைண்ட்ட்ரீ நிறுவனர்கள், அதன் நிர்வாகிகள் அனைவருமே, மைண்ட்ட்ரீயை ஒரு நிறுவனத்தைப் போல பாவிக்கவில்லை. முதலாளி, தொழிலாளி என்பது போன்ற கலாச்சாரம் இல்லாமல். அனைவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒரு குடும்பத்தைப் போன்ற கலாச்சாரத்தை நிறுவனத்துக்குள் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அதன் பலனே மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் வளர்ச்சி.
ஒரு சின்ன உதாரணம், “இந்தியாவில் நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளர் ஆன்லைன் வணிக நிறுவனமான ஃபேப்மார்ட் தான். எப்படியாவது ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்துடன் தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தனர் மைண்ட்ட்ரீ நிறுவனர்கள். யுனிலிவர் தலைவரிடம் பேசி, பிரசன்டேஷனுக்கு ஒப்புதல் வாங்கிவிட்டனர்.
ஆனால், அவர்களிடம் எந்த தொழில் ஆய்வும் இல்லை, வாடிக்கையாளர்கள் பரிந்துரையும் இல்லை. எதுவுமே இல்லாமல் அவ்வளவு பெரிய நிறுவனத்தின் முன் சிறு பூச்சியைப் போலவும், நிர்வாணமாக இருப்பதைப் போலவும் உணர்ந்தார்கள். ஆனால், அன்று யுனிலிவர் ஆர்டரை வெற்றிகரமாகக் கைப்பற்றினார்கள். அதன் பிறகு நிறுவனத்துக்கு ஏற்றம் தான்.
மைண்ட்ட்ரீ தனது பணியாளர்களை, பணியாளர்களாகவோ அல்லது தொழில் வளர்ச்சிக்கு உதவும் ஆதார மையங்களாகவோ பார்க்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரையும் ‘எழுச்சிமிக்க மனங்களாக’ பார்த்தது. ஒவ்வொரு பணியாளரும் நிறுவனத்தில் சேரும்போது தனிப்பட்ட முறையில் நிறுவனத்தின் சிஇஓ, சிஓஓ-க்களைச் சந்தித்து ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொள்வார்கள். நிறுவனத்தின் நோக்கம், கலாச்சாரம், மதிப்புகள் உள்ளிட்ட பலவற்றையும் புதியவர்களுக்கு அறிவுறுத்துவார்கள்.
இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு புதிய தொழில் திட்டங்களின் அறிமுகத்தின் போதும் நிறுவனர்கள் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே அதை முடிவு செய்வார்கள். எல்லோருடைய கருத்துக்கும், சிந்தனைகளுக்கும் மதிப்பு அளிக்கும் நிறுவனமாக இருந்தது மைண்ட்ட்ரீ. அதேசமயம் எல்லோருமே நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்தித்தனர்.
பொறுப்புகளைப் பிரித்துக்கொள்வது, திறமைகளைக் கண்டறிந்து வேலை ஒதுக்குவது என அனைத்திலும் மைண்ட்ட்ரீ வித்தியாசம் காட்டியது. நிறுவனர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரும் 2011-வரை உற்சாகத்தின் விளிம்பில்தான் நிறுவனத்தில் பணிபுரிந்தார்கள். 2011-க்குப் பிறகுதான் நிறுவனத்தில் ஒவ்வொரு பிரச்சினையாகக் கிளம்பியது.
ஒவ்வொரு முறை பிரச்சினைகள் வரும்போதும் சித்தார்த்தா தான் தீர்த்துவைப்பார். ஆனால், இன்று அவரே நிறுவனத்திலிருந்து விலக நினைப்பது விசித்திரமாகவே உள்ளது. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் வி.ஜி.சித்தார்த்தா அனைத்தையும் எல் அண்ட் டி நிறுவனத்திடம் விற்றுவிட்டு ஒதுங்குகிறார்.
எல் அண்ட் டி 80 ஆண்டு பழமை கொண்ட நிறுவனம் என்றாலும், அதன் தொழில் கலாச்சாரம் வேறாகவே இருக்கும். அப்படிப்பட்ட வேறொரு கலாச்சாரத்தைக் கொண்ட நிறுவனத்திடம் தஞ்சமடைய மைண்ட்ட்ரீ நிர்வாகம் தயங்குகிறது. எல் அண்ட் டி,யோ தான் மைண்ட்ட்ரீ நிறுவனத்தை அபகரிக்க முயற்சிக்கவில்லை, சித்தார்த்தா அவராகத்தான் பங்குகளை தங்களிடம் விற்றுள்ளார் என்கிறது.
மேலும், மைண்ட்ட்ரீ நிர்வாகத்தில் எந்தவித மாற்றங்களையும் செய்யமாட்டோம். மைண்ட்ட்ரீ சுதந்திரமாக இயங்கும் என்றும் எல் அண்ட் டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் அண்ட் டி-மைண்ட்ட்ரீ இணைப்பு விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.