

பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோமோட்டிவ் நிறுவனமான அல்ட்ராவயலெட் எலெக்ட்ரிக் பைக்குகளைத் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், 2017-ம் ஆண்டு இறுதிவரை இந்த நிறுவனம் பற்றி பெரிதாக யாருக்குமே தெரியாது. ஆனால், இந்நிறுவனத்துக்கு டிவிஎஸ் நிறுவனத்திடமிருந்து முதலீடு கிடைத்துள்ளது என்ற செய்தி வெளியான பிறகு இந்நிறுவனத்தின் மீது பலரது பார்வை திரும்பியது.
மேலும், தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், இந்நிறுவனம் ஸ்பாட்லைட்டில் உள்ளது. வெறும் இரண்டு பேர் மட்டுமே இருந்த இந்நிறுவனத்தில் இப்போது 50 பேர் பணிபுரிகின்றனர். இந்நிறுவனத்தில் டிவிஎஸ் தனது பங்கு சதவீதத்தை 15-லிருந்து 25 சதவீதமாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் 200 முதல் 250 சிசி வரை திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கும் முனைப்பில் உள்ளது. ஏற்கெனவே சந்தையில் உள்ள செயல்திறன் குறைவான ஸ்கூட்டர் மாடல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும், பலரும் உருவாக்க திட்டமிட்டு கொண்டிருக்கும் உயர் திறன் உள்ள ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கும் இடையில் உள்ள செக்மன்ட்டில் இருசக்கர வாகனத்தை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டதால் 200 சிசி அளவில் தனது உற்பத்தியைத் திட்டமிட்டுள்ளது.
இதன் புரோட்டோ டைப் குறித்த விவரங்கள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இதன் வடிவமைப்பு கிட்டத்தட்ட கேடிஎம் டியூக் போலவே உள்ளது.
இன்ஜின் உள்ள இடத்தில் பேட்டரி பேக்அப் வழங்கப்பட்டுள்ளது. ஏர் கூல்டு மோட்டார், இதன் பேட்டரி திறன் 25 கிலோவாட், டார்க் திறன் 90 என்எம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் புரோட்டோ டைப் எடை 138 கிலோ, இறுதி ஃபினிஷ்டு பைக்கின் எடை 150 கிலோவாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இது விற்பனைக்கு வர உள்ளது. விலை ரூ. 2 - 2.5 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளது.