

இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹோண்டா நிறுவனம் பாரத் 6 புகை விதி சோதனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தனது தயாரிப்புகளில் மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் இன்ஜினில் தற்போது கார்புரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குப் பதிலாக எரிபொருள் இன்ஜெக்ஷன் (Fuel Injection) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்நிறுவனம் 8 ஸ்கூட்டர்கள் மற்றும் 16 மாடல்களில் பைக்குகளைத் தயாரிக்கிறது. ஒட்டுமொத்தமாக 18 மாடல்களில் இப்போது வரை கார்புரேட்டர்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. 110 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டராயிருந்தாலும் சரி, 125 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் சரி அவற்றில் கார்புரேட்டர்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இவை அனைத்திலும் எரிபொருள் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தை புகுத்த உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இவ்விதம் உருவாக்கப்படும் எரிபொருள் இன்ஜெக்ஷன் மாடல் அனைத்துமே, தற்போதைய கார் புரேட்டர் மாடலை விட விலை சற்று அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கெனவே ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் மோட்டார் சைக்கிள் விலை ரூ. 68,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிராண்டின் கார்புரேட்டர் மாடல் விலை ரூ. 62,700 ஆகும். அந்த வகையில் பார்க்கும்போது ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் ரூ. 5 ஆயிரம் வரை விலை அதிகமாக இருக்கும் என தெரிகிறது. புகை மாசைக் கட்டுப்படுத்த நமது பங்களிப்பாக இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ளலாமே.