எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ‘செக்’

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ‘செக்’
Updated on
1 min read

இறக்குமதி செய்யப்படும் லித்தியம் அயான் செல்களுக்கு இறக்குமதி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு பூஜ்யமாக இருந்த வரி இப்போது 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பாதிக்கும் எனத் தெரிகிறது.

மேலும் இந்த நடவடிக்கை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு எதிரானது என்றும் பலர் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி, சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். 

அதைத் தொடர்ந்து பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான திட்டங்களையும் முதலீடுகளையும் திட்டமிட்டுவந்தன. இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் லித்தியம் அயான் செல்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பேட்டரிகள் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனால் பேட்டரி கார்களின் விலையும் அதிகரிக்கும் என எலெக்ட்ரிக் கார்களின் முன்னோடி சேத்தன் மைனி கூறியுள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று நினைக்கும் அரசு, இறக்குமதி செய்யப்படும் பேட்டரி செல்கள் மீது வரி விதிப்பது முரணாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். லித்தியம் அயான் செல்களுக்கு விலக்கு அளித்து, லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்தலாம் என அவர் ஆலோசனை கூறுகிறார்.

அதேசமயம் பல நிபுணர்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். வரி விதிக்கப்பட்டதன் மூலம், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத் துறை முறைப்படுத்த முடியும் எனக் கூறுகின்றனர். இது எலெக்ட்ரிக் வாகனத் துறைக்கான ஆரம்பம் தான் என்பதால், இந்த வரி விதிப்பு நடவடிக்கை, நாளடைவில் தளர்த்தப்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in