சபாஷ் சாணக்கியா: வேண்டிய விருந்தாளி...

சபாஷ் சாணக்கியா: வேண்டிய விருந்தாளி...
Updated on
2 min read

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிற்கும், பிரமல் குழுமத்தின் ஆனந்துக்கும் சென்ற டிசம்பரில் வெகு விமரிசையாகத் திருமணம் நடந்ததே, காணொளி காட்சியெல்லாம் பார்த்தீர்களா?

ஒவ்வொருவருக்கும் ஒரு தனி நாற்காலி, மேசை என இருக்கைகளில் விருந்தினர்கள் அமர்ந்திருக்க, பெரிய வெள்ளித்தட்டு வைத்து, அதில் ஏகப்பட்ட வெள்ளிக்கிண்ணங்களில் வகைவகையாய் உணவு! என்ன, அந்த பஞ்சு போன்ற மிருதுவான, மஞ்சள் நிற ‘டோக்ளா' சாப்பிட ஆசையா?

விருந்தினர்களுக்கு அதையெல்லாம் விட அதிக மகிழ்ச்சி அளித்தது என்ன தெரியுமா? அங்கு உபசரித்தவர்கள் தான்! பின்னே என்னங்க? பாலிவுட்  நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், அமீர்கான், ஷாருக் கான்,அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் உணவு பரிமாரினார்களாம்! அதாவது பெண்வீட்டாரின் சார்பாக  வந்திருந்த விருந்தினர்களை உபசரித்தார்களாம்.

குஜராத்தில் இந்தப் பாரம்பரியத்தை ‘சஜ்ஐன் கோட்' என்று அழைப்பார்களாம். ‘உங்களால் முடிந்த வழிகளில் எல்லாம் உபசரித்து, வந்தவரை திக்குமுக்காடச் செய்வதே உண்மையான விருந்தோம்பல்' என்கிறார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் மனைவி இலியனார்!

நீங்களே நினைத்துப் பாருங்கள். உங்கள் நண்பர் வீட்டிற்குச் சென்றால், அவரது சமையற்காரர் கொண்டுவரும் உணவுப்பண்டத்தை, தேநீரை, அந்தப் பணியாளர் கொடுப்பது எப்படி, அல்லது உங்கள் நண்பரே அதை வாங்கி உங்களிடம் கொடுப்பது எப்படி? ‘விருந்தோம்பல் என்பது வேறு ஒன்றும் இல்லை! கட்டவிழ்த்து விடப்பட்ட அன்பு தான் அது' என அமெரிக்கப் பாதிரியார் சிட்டிஸ்டர் சொல்வது சரி தானே!

இந்த விருந்தோம்பல் தமிழர்களின் சிறப்புமிக்க பண்பாடுகளில் ஒன்றாயிற்றே! அன்பு, அறம், கருணை, செய் நன்றி மறவாமை, வீரம், கற்பு என்பவற்றைப் போல இதையும் பாராட்டி, கொண்டாடி வாழ்ந்து வருபவர்களாயிற்றே நாம்.

இதனால் தான் நம்ம  வள்ளுவர் ‘விருந்தோம்பல்' எனத் தனி அதிகாரம் அமைத்து 10 குறள்களில் அதற்கு இலக்கணமும் வகுத்துள்ளார். இந்த அதிகாரம் அன்புடமைக்கும்  இனியவை கூறலுக்கும் இடையில் அமைந்திருப்பது பொருள் பொதிந்தது!

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து அதாவது, அனிச்சம்பூ முகர்ந்து பார்த்தால் வாடிவிடுமாம்; விருந்தினர்களோ உபசரிப்பவரின் பார்வை சரியில்லையென்றாலே முகம் வாடி விடுவார்களாம்!

இன்றைய அவசர உலகில் நமது இந்த உயரிய பண்பை மறந்து விட்டோமோ எனத் தோன்றுகிறது. சிலர் வீடுகளில் நாம் கதவைத் தட்டினால், வழியை அடைத்துக் கொண்டு நிற்பார்கள். நாம் உள்ளே எப்படியாவது சென்று விட்டால், நம்மை உட்கார வைத்துவிட்டு, ‘இதோ  வந்து விடுகிறேன்' என்று சொல்லி உள்ளே போவார்கள். வெகுநேரம் காணாமலும்  போய் விடுவார்கள்! சில புண்ணியவான்கள் அப்படி நம்மைத் தனியே தவிக்க விட்டு விடமாட்டார்கள். நம் எதிரிலேயே உட்கார்ந்து கொள்வார்கள்.

ஆனால், அன்றைய தினத்தாளை தேடி எடுத்து கவனமாகப் படிக்கத் தொடங்கி விடுவார்கள்! வந்தவர் படிப்பதற்கு ஒரிரு பக்கங்களை எடுத்துக் கொடுப்பவர்களும் உண்டு! எனக்குத் தெரிந்த ஒருவர், வந்த விருந்தினருக்காக தொலைக்காட்சியில் ‘பிரியமானவள்' போன்ற நெடுந்தொடர்களைப் போட்டு விடுவார். மரியாதை நிமித்தம் வந்தவர் கையில் ரிமோட்டைக் கூடக் கொடுத்து விடுவார்!

வந்தவரை வரவேற்பதில், உபசரிப்பதில் முக்கிய அம்சமே அவர்களுடன் நேரம் செலவிடுவது தானேங்க? அதைச் செய்யாமல், மற்றதைச் செய்வது வந்தவர்களை அவமரியாதை படுத்துவதுதானே? சில மகானுபாவன்களோ, உள்ளே நுழைந்ததுமே ‘காப்பியா, டீயா?' எனக் கேட்பார்கள். அது சாப்பாட்டு நேரமாக இருந்தாலும் அதே கேள்விதான். அதாவது ‘இதைக் குடித்து விட்டு நீ கிளம்பு' எனச் சொல்லாமல் சொல்வார்கள்!

அறிவியலாளர்கள், மனிதனை சமூகமாக வாழும்  விலங்கு ( social animal ) என்று அல்லவா சொல்கிறார்கள்? தம்பி, மனித வாழ்க்கையில் உணவு, உடை, உறையுள் போலவே உறவுகளும் அவசியமானவை அல்லவா? எவ்வளவு பணம் இருந்தாலும், வசதிகள் இருந்தாலும், நல்ல நண்பர்கள், உறவினர்கள்,  சமூக சுற்றுவட்டாரம் இல்லாத வாழ்க்கை பாலைவனம் போல வறட்சியானதுதானே?

அதனால் தானே, நம் ஊரில் இந்த நவராத்திரி விழா போன்றவற்றில் நம் பெண்கள் தெரிந்தவர்களை அழைத்து, பாடச் செய்கிறார்கள். வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துணி கொடுப்பதெல்லாம் கூட வருகிறவர்களிடம் காட்டும் அன்பு, மரியாதை தானே? உறவினர்களை சந்தித்து அளவளாவுதற்காகவே ‘காணும் பொங்கலை'க்  கொண்டாடுகிறோமே! தற்போதைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் இந்த வழக்கங்களின் மறுபதிப்புகள்தானே?

ஐயா, நமக்கு ஒருவரை எவ்வளவு மதிக்கிறோம், அவரது நட்பை, உறவை எவ்வளவு வேண்டுகிறோம், அவர் நமக்கு எவ்வளவு அன்பானவர் என்பதையெல்லாம், அவர் நம் வீட்டிற்கு வரும் பொழுது நாம் அவரிடம்  நடந்து கொள்ளும் விதத்தை வைத்துத்தானே அவர் புரிந்து கொள்வார்? அதைத் தான் சாணக்கியர் இப்படிச் சொல்கிறார். “நாம் ஒருவரது வீட்டிற்குச் செல்லும் பொழுது, அவர் நம்மை வரவேற்று உபசரிக்கும் விதம், நம்மிடம் அவர் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்!".

- somaiah.veerappan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in