

பிரிட்டன் நிறுவனமான ட்ரயம்ப், தனது இரண்டு சூப்பர் பைக் மாடல்களான ஸ்ட்ரீட் ட்வின், ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளை மேலும் மேம்படுத்தி சந்தையில் களமிறக்கியுள்ளது.
முந்தைய மாடல்களைக் காட்டிலும் புதியவற்றில் கூடுதலாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த பைக்குகளின் பவர் 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 65 பிஹெச்பி என்ற அளவில் உள்ளது. மேலும் இதன் இருக்கைகள், பக்கவாட்டு பேனல் வடிவமைப்பு போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவற்றிலும் முன்னேற்றங்கள் உள்ளன. முன்பக்க டயரில் 310 எம்எம் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 255 எம்எம் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக்கில் கூடுதலாக ஆஃப் ரோடு டிரைவிங் மோடு தரப்பட்டுள்ளது.
ஸ்ட்ரீட் ட்வின் ரூ. 7.45 லட்சத்திலும், ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் ரூ. 8.55 லட்சத்திலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரண்டு பைக்குகளும் ஒன்று போல தெரிந்தாலும், இரண்டும் அதனதன் செயல்திறனில் தனித்துவமானவையாக உள்ளன. இந்த வாகனங்களுக்கு இரண்டு வருடத்துக்கு அன்லிமிட்டட் கிலோமீட்டர் உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது. உலகில் எங்கு வேண்டுமானாலும் இந்த வாரன்ட்டி செல்லும்.
2013-ல் பத்து மாடல்களுடன் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கியது. தற்போது இந்தியாவில் 500 சிசிக்கு மேல் திறன்கொண்ட பைக்குகளின் பிரிவில் 16 சதவீத சந்தை பங்களிப்பை ட்ரயம்ப் வைத்துள்ளது. இந்தியாவில் பிரீமியம் பைக் விற்பனையில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் 16 டீலர்ஷிப்களைக் கொண்டுள்ளது. 2020-ல் 20 டீலர்ஷிப்கள் இருக்கும் வகையில் திட்டமிட்டு வருகிறது.