

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது முதல் மாடலாக எம் ஜி ஹெக்டார் என்ற எஸ்யுவியைக் களமிறக்குகிறது. இப்போது எஸ்யுவிகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருப்பதால், பெரும்பாலான நிறுவனங்களிடமிருந்து எஸ்யுவி மாடல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
எத்தனை நிறுவனங்கள் எத்தனை மாடல்களை அறிமுகப்படுத்தினாலும், ஒவ்வொன்றின் திறன், ஸ்டைல், லுக் ஆகியவற்றுக்கேற்ப கணிசமான ரசிகர்களைப் பெற்றுவிடுகின்றன. ஆனால், எம்ஜி ஹெக்ட்ரா இந்தியாவில் அதிகாரபூர்வமாக அறிமுகமாவதற்கு முன்பே
கார் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது. எம்ஜி மோட்டார் தனது வியாபார உத்தியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ரோட்ஷோக்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் அறிமுகமாவதற்கு முன்பே மக்களைச் சென்றடைகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருப்பது டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும். ஜீப் காம்பஸ் காருக்கு அடுத்து டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தரப்பட்டுள்ள கார் இதுதான். இதன் செயல்திறனை சோதிக்க, உலகம் முழுவதும் 26 லட்சம் கிலோமீட்டருக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு முக்கிய அம்சங்கள் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது.
360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, ஹர்மான் இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம், புஷ்பட்டன் ஸ்டார்ட், சாவியில்லாமல் காரை திறக்கும் வசதி, க்ரூஸ் கண்ட்ரோல் என பல ஆஹா அம்சங்கள் இதில் உள்ளன. இந்த ஆண்டின் பாதியில் எம்ஜி ஹெக்டார் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம்.