அலசல்: பொருளாதார வளர்ச்சியின் முதல் பலிகடா?

அலசல்: பொருளாதார வளர்ச்சியின் முதல் பலிகடா?
Updated on
1 min read

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாம் வாழ அவசியமாக உள்ள சூழலுக்கும் பொருந்தும். சூழல் சிறப்பாக இருந்தால்தான், மனிதகுலமும் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆரோக்கியமாக உள்ள ஒருவரால்தான் அதிகம் சிந்திக்கவும், உருவாக்கவும் முடியும். ஆனால், நாம் வாழும் சூழல் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

உலகில் மாசுபட்ட முதன்மையான 12 நகரங்களில் 11 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. லேன்செட் பிளானட்டரி ஹெல்த் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி இந்தியர்கள் அதிகளவில் உயிரிழக்க காரணமாக காற்று மாசுபாடு உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் காற்று மாசுபாடு அளவானது உலக அளவில் ஒப்பிடுகையில் மிகவும் அதிகம். இதனால் ஏற்படவிருக்கும் ஆபத்தைப் பற்றி இதுவரை நாம் முழுமையாக உணரவில்லை.

சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு மிக முக்கியமான காரணம் மரங்கள் அழிப்பு. ஒருபக்கம் காடுகள் யாருக்கும் தெரியாமல் அழிக்கப்பட்டு சுரண்டப்படுகின்றன. ஒருபக்கம் தெரிந்தே மரங்களை வெட்டி சாய்த்துக்கொண்டே இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியின் முதல் பலிகடா மரங்கள் என்று நிச்சயமாக சொல்லலாம். நகரங்களின் விரிவாக்கம், உட்கட்டமைப்பு துறையின் வளர்ச்சி ஆகியவற்றின் விளைவால் மரங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இதுகுறித்து யாருக்கும் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை.

காடுகளையும் மரங்களையும் பாதுகாக்க சட்டங்களும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நகரங்களில், சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்பட வேண்டுமென்றால் அதற்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், பல நேரங்களில் எந்த அனுமதியும் பெறாமலேயே வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதும் அவ்வளவு எளிதாகிவிட்டது. எந்த விதிமுறைகளையும் பார்க்காமல் அனுமதிகள் வழங்கப்பட்டுவிடுகின்றன.

பெரும்பாலும், வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்பட வேண்டி வரும்போது, மரங்களை அப்படியே வேறு இடத்துக்கு மாற்றுவதை தீர்வாக முன்வைக்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாக வளர்ந்து நிற்கும் பெரிய மரங்களை அப்படியே வேறு இடத்தில் நடுவதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. உட்கட்டமைப்பு வசதிகளுக்காக அப்படி தோண்டி எடுக்கப்படும் மரங்கள் எங்கும் நடப்படுவதே இல்லை.

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வாசகங்களை எல்லா வாகனங்களிலும் அச்சடித்து வைத்திருக்கிறோம். ஆனால், அதை எவரும் மனதில் ஏற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை. வளர்ச்சி என்பதை நாம் ஒவ்வொருவரும் எப்படி புரிந்துகொள்கிறோமோ அதன் பின்னணியில் தான் நம்முடைய செயல்பாடுகளும் இருக்கும்.

காடுகள் அல்லாத இடங்களில் இருக்கும் மரங்களைக் காப்பதற்கான சட்டங்களில் சீர்திருத்தங்கள் வேண்டும். மரங்களைக் காப்பதற்கான சட்டவிதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். மனிதன்  இங்கு வாழ எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ, அத்தகைய உரிமை மரங்களுக்கும் உண்டு. நாம் மரங்களைக் காப்பாற்றினால் அது நம்மை காப்பாற்றும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in