Last Updated : 07 Jan, 2019 11:40 AM

 

Published : 07 Jan 2019 11:40 AM
Last Updated : 07 Jan 2019 11:40 AM

ஒரு கோடி இளைஞர்களுக்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

2015 - ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதல்வர் ஜெய லலிதாவின் முயற்சியில் நடத்தப் பட்டது முதலாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு. மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்த முதலீடு ரூ. 2.42 லட்சம் கோடி. 5 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

இவற்றில் தற்போது 62 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ரூ. 62,738 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உருவான வேலை வாய்ப்பு 96,341 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது மாநாடு வெற்றிகரமாக நடை பெற்றதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாநாட்டை நடத்துவது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.

2016-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் ஆண்டு இறுதியில் ஜெயலலிதா உயிரிழந்ததால் 2017-ல் நடத்த வேண்டிய முதலீட்டாளர் மாநாடு, அவரது கட்சியே ஆட்சியில் இருந்தபோதிலும் நடத்த முடியாத அரசியல் சூழல் நிலவியது.

பிறகு ஒரு வழியாக 2017-ம் ஆண்டு பட்ஜெட்டில் 2-வது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்த முடிவு செய்து அதற்கு ரூ. 75 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு இந்த ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

இந்த மாநாட்டில் ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளனர். ராணுவ தளவாடம், விமான உதிரி பாக தயாரிப்பு ஆலைகளை தமிழகத்தில் அமைக்க முதலீட்டாளர்களை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்க 1,500 ஏக்கர் நிலத்தை சிப்காட் ஏற்கெனவே கையகப்படுத்தி தயாராக வைத்துள்ளது. முதலாவது மாநாட்டைக் காட்டிலும் கூடுதல் முதலீடுகளை ஈர்க்கவும், 200 புரிந்துணர்வு ஒப் பந்தங்களைப் போடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத் யேக இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள வளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. முதலீட்டாளர் கள் விரும்பும் மாநிலமாக தமிழகத்தை உருவாக் குவது, தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்பு கள், முதலீட்டாளர்களுக்கேற்ற தொழில்கள், தொழில் தொடங்க எளிமையான விதிமுறை கள், தேசிய, சர்வதேச அளவிலான நிபுணர்கள் மூலம் துறை சார்ந்து பின்பற்றப்படும் சர்வதேச நெறிமுறைகளை வெளி உலகுக்கு தெரிவித்தல், மாநிலத்தின் மிகவும் பாரம்பரிய கலாசாரத்தை பறை சாற்றுவது என ஐந்து முக்கிய லட்சியங் களை இலக்காகக் கொண்டு மாநாட்டு ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த மாநாட்டில் உணவு பதப்படுத்தல், ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாக உற்பத்தி, ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனம், மின்னணு மற்றும் ஹார்ட்வேர், கன ரக தொழில் கள் மற்றும் தகவல் தொழில் நுட்பத் தொழில் களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக மரபு சாரா எரிசக்தி, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக் கும் முக்கியத்துவம் தரவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

எதார்த்தநிலை

தமிழகத்தில் படித்த இளம் வயதுப் பிரிவு இளைஞர்கள், திறன் மிக்கவர்கள் அதிகம் உள் ளதாக அரசு பெருமைபட கூறுவதில் தவறில்லை. ஆனால் உண்மையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் உள்ளது.

தமிழக வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியாகும். ஆண்டுக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேருக்குத்தான் நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மறைமுக வேலை வாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சமாகும். 2017-ம் ஆண்டில் அரசு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை வெறும் 802. இதே காலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றவர்கள் எண்ணிக்கை 20,778.

எண்ணூர் எல்என்ஜி திட்டம் என்னவாகும்

புதிய வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கு சர்வ தேச மாநாடு நடத்துவது வரவேற்கத்தகுந்ததுதான். ஆனால் 2012-ம் ஆண்டில் தமிழக அரசு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ஐஓசி- யுடன் இணைந்து எண்ணூரில் திரவ எரிவாயு நிரப்பு நிலையம் அமைக்க உத்தேசித்த திட்டத் தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி அருகே எண்ணூர் துறைமுகத்தில் ரூ. 4,320 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படுவதாக அப்போது ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் தமிழக அரசின் டிட்கோ 5 சதவீத முதலீடு செய்துள்ளது.

இந்த எரிவாயு நிரப்பு நிலையம் ஆண்டுக்கு 5 லட்சம் டன் எரிவாயுவைக் கையாளும் திறன் கொண்டது. இதை 10 லட்சம் டன்னாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது இந்தத் திட்டப் பணியின் மதிப்பு ரூ. 5,151 கோடியாகும்.

இந்தத் திட்டப் பணிகள் நிறைவடைந்து விரைவில் செயல்பாட்டுக்கு வரப் போவதாக ஐஓசி தலைவர் சஞ்ஜீவ் சிங் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு எண்ணூர் டெர்மினல் மட்டுமே தயார். அதாவது திரவ வடிவிலான வாயுவை இறக்குமதி மட்டுமே செய்ய முடியும். அதை சப்ளை செய்வதற்கு குழாய்ப் பாதை போட வேண்டும். இந்தப் பணிகள் இன்னமும் பல இடங்களில் மேற்கொள்ளப்படவில்லை.

பெட்ரோல், டீசலாக இருந்தால் அதை டேங்கு களில் இருப்பில் வைக்கலாம். திரவ எரிபொரு ளாக வருவதை மீண்டும் வாயுவாக மாற்றி குழாயில் அனுப்ப வேண்டும். ஆனால் அந்தப் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.

குழாய் பதிப்பது, எண்ணெய் அகழ்வு என்று எந்தப் பணியைத் தொடங்கினாலும் அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்புவதால் குழாய் பதிக்கும் பணிகள் தேக்கமடைந்துள்ளன.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் எண்ணெய் அகழ்வு, எரிவாயு கிடங்கு உள்ளிட்ட பெரிய முதலீட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார். எண்ணெய் அகழ்வு, எரிவாயு குழாய்ப்பாதை அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து வெளிப்படையான உறுதியான கொள்கை எதையும் அரசு இதுவரை வெளியிடவில்லை. புதிதாக மீத்தேன் எடுப்பது அல்லது எண்ணெய் எடுப்பது போன்ற திட்டங்கள் தொடங்காதது ஒரு புறம் இருந்தாலும், குழாய் பதிப்பதால் எவ்வித பாதிப்பும் நேராது. ஆனால் அதற்கு அரசின் முழு ஒத்துழைப்பு அவசியம் என்கின்றனர் ஐஓசி நிர்வாகிகள்.

முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகும், அதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும், தமிழகம் தொழில் துறையில் வளர்ச்சி பெறும் என்பதால், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அதேவேளையில் கிடப்பில் உள்ள திட்டங்களையும் முடுக்கிவிட்டால்தான் வளம் சாத்தியமாகும்.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x