

தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம் என்று ஒரு கிராமம். வருடம் 1990. அங்கு பிறந்த பிரேம் கணபதி 10-வது வரையே படித்திருந்தாராம். ஏழ்மையான குடும்பம். எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் எனத் தன் ‘நண்பன்' கொடுத்த தைரியத்தில் பம்பாய்க்கு அவரோடு ரயில் வண்டி ஏறி இருக்கிறார். ஆனால் அவரிடமிருந்த 200 ரூபாயையும் திருடிக்கொண்டு காணாமல் போய்விட்டானாம் அந்தப் புண்ணியவான்!
17 வயதே ஆகியிருந்த கணபதியிடம் மிச்சமிருந்தது தன்னம்பிக்கை மட்டும்தானாம். பின்னர் நல்ல தமிழர் ஒருவர் உதவியுடன் ஒரு பேக்கரியில் பாத்திரங்களைக் கழுவும் வேலையில் சேர்ந்து இருக்கிறார். அடுத்து வண்டியில் இட்லி விற்றாராம். அவரது கடையின் சுத்தத்தைப் பார்த்துத் தானாகச் சேர்ந்ததாம் கூட்டம். கல்லூரி மாணவர்கள் அவரது 26 வகையான தோசைகளுக்கு அலை மோதினராம். 2002-ல் அவரிடம் இருந்த தோசை வகைகள் 105. நாக்கில் நீர் ஊறுகிறதா?
மனுஷன் பெரிய மால் போன்ற ஒரு நல்ல இடத்தில் கடை போட வேண்டும் என ஆசைப்பட்டு இருக்கிறார். அவரது தோசை ரசிகர்களே இதற்கு உறுதுணையாக இருந்து மும்பை வாஷியில் சென்டர் ஒன் மாலில் அவரது ‘தோசா பிளாசா'வுக்கு franchise ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்! அப்புறம் என்ன? வளர்ச்சியோ வளர்ச்சி தான்! 2012-ல் 11 மாநிலங்களில் 45 இடங்கள் அவரின் தோசை தேசம் ஆகிவிட்டனவாம்!
இப்பொழுது அவர்களிடம் இருப்பது 104 தோசை வகைகள்! அவற்றில் 27 வகைகள் வர்த்தக முத்திரை (trade mark) உரிமம் பெற்றவையாம்! இவர்களது தோசையை நியூசிலாந்து, ஓமன் போன்ற வெளிநாடுகளையும் சேர்த்து 72 இடங்களில் ருசிக்கலாமாம்!
ஐயா, அவர்களது தோசையை வேண்டுமானால் துரித உணவு (fast food ) எனலாம். ஆனால் அவர்களது வளர்ச்சியை துரித வளர்ச்சி (fast growth) என சொல்ல முடியாதே! இது சுமார் 30 ஆண்டு வளர்ச்சி. படிப்படியான வளர்ச்சி அல்லவா? பின்னே என்னங்க? அரச மரத்தை சுற்றும் போதே குழந்தை உண்டாகிவிடாதா என அடிவயிற்றைத் தடவிப்பார்த்தால் எப்படி? பூ விதையாகவும், விதை காயாகவும், காய் கனியாகவும் அதற்கான கால அவகாசம் வேண்டுமில்லையா?
பெங்களூருவின் ரமேஷ் பாபுவின் கதையும் இதைப் போன்றது தான். 13 வயதில் தினசரித் தாள்களும் பாலும் போடும் பையனாக இருந்தவர் பின்னர் முடிவெட்டுபவராக வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடங்கினாராம். அதைச் செவ்வனே செய்ய விரும்பி சிங்கப்பூருக்குச் சென்று சிகை அலங்காரக் கலையில் பிரத்யேகப் பயிற்சி பெற்றாராம்.
1993-ல் சிறிய கார் ஒன்றை வாடகைக்கு விட ஆரம்பித்தவர் அதில் படிப்படியாய் வளர்ந்து இன்று நூற்றுக்கணக்கான கார்களை வாடகைக்கு விடுகிறார். அவற்றில் ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், பிஎம் டபிள்யூ எல்லாம் அடக்கம். தன் தொழில் பக்தி காரணமாக வாரத்தில் மூன்று முறை முடிவெட்டவும் தவறுவதில்லை என்கிறது இவரைப் பற்றிய கட்டுரை ஒன்று!
உடற்பயிற்சி செய்தால் நல்ல உடல்வாகு கிடைக்கும் என்பது உண்மையே. ஆனால் ஒருநாள் செய்துவிட்டு உடனே கண்ணாடியைப் பார்க்கலாமா? தொடர்ந்து பல நாட்கள் செய்தால் தானே பலன் கிடைக்கும்? மேலும் தினமும் ஒரு மணி நேரம் செய்ய வேண்டியதை ஒரே நாளில் பல மணி நேரம் செய்வதால் அந்தப் பலன் கிடைத்துவிடாதே!! ஒரு நாளைக்கு ஒன்று வீதம் சாப்பிட வேண்டிய மாத்திரையை ஒரே நாளில் சாப்பிடக் கூடாதல்லவா?
வணிகமோ, விளையாட்டோ, நெடு நாள் முயற்சியே நீடித்த பலன் அளிக்கும் இல்லையா? ஜமைக்கா நாட்டின் ‘மின்னல்' உசேன் போல்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் வரிசையாக அடுத்தடுத்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் எனப் பல ஒட்டப் பந்தயங்களில் உலக சாதனை படைத்தவர். ஆனால், அந்த 9.58 மற்றும் 19.19 வினாடி வெற்றி ஓட்டங்களுக்குப் பின்னே எத்தனை ஆண்டுகள் பயிற்சி இருந்திருக்கும்?
தம்பி, வாழ்க்கையில் முன்னேற சிலவற்றைச் சிறுகச்சிறுகச் செய்ய வேண்டியதிருக்கும்; அவற்றை விடாமல் தொடர்ந்து செய்யணும். அப்பொழுது தானே அதற்கான முழுமையான பலன் கிடைக்கும். இதைத் தான் சாணக்கியர் இப்படிச் சொல்கிறார்.
‘ஒரு துளி நீர் பானையை நிரப்பிவிடாது. பல சிறு துளிகள் சேர்ந்தால் தான் பானை நிரம்பும். அது போல, நாம் அறிவு, செல்வம், தர்மம் போன்றவற்றை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும்' உண்மை தானே?
அறிவு வாழ்நாள் முழுவதும் பெற வேண்டியது; பெறக் கூடியது. செல்வம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்வது. தர்மமோ வாழ்வின் கடைசி நாட்கள் வரை காத்திராமல் இளவயது முதலே தொடர்ந்து செய்ய வேண்டியது!
- somaiah.veerappan@gmail.com