

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றில் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தேர்வுகளில் ஒன்று Test of Reasoning. அதில் இந்த மாதிரி கேள்விகளைக் கேட்பார்கள்.
கீழ்காணும் எண்களில் வித்தியாசமான ஒன்று எது? 1 , 2 , 3 , 4 , 5. கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் வேறுபட்டு நிற்கும் ஓர் எழுத்து எது? M , N , O , P , Q என்ன, விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? மகிழ்ச்சி! ஓ, இல்லையா, எல்லாம் வரிசையாகத் தானே வருகின்றன எனக் குழப்பமாக இருக்கிறதா? பரவாயில்லை, பக்கத்தில் வேறு யாரும் இருந்தால் , அவர்களைக்கேட்டுப் பாருங்கள். என்ன இன்னமும் தெரியவில்லையா?
முதல் கேள்விக்கான பதில் 4. அதில் உள்ள ஐந்து எண்களில் மற்றவை எல்லாம் வகுபடா எண்கள் (prime numbers). ஆனால் 4 மட்டும் வகுபடும் எண். அதை 2×2 எனலாமே. அங்குள்ள மற்ற எண்களை 1ன் பெருக்கமாக மட்டுமே கூற முடியும்!
இரண்டாவது கேள்விக்குப் பதில் 'O' . அந்த ஐந்து எழுத்துக்களில் இது மட்டுமே உயிரெழுத்து (vowel). நம் அன்றாட வாழ்க்கையிலும் இப்படித்தானே? சரியான ஆட்களும், தவறான மனிதர்களும் கலந்து இருக்கும் இந்த உலகத்தில் யார் நல்லவர், யார் கெட்டவர் எனக் கண்டுபிடிப்பது நம்மில் பலருக்குச் சிரமமான வேலை. சிலருக்கோ விடை கண்டுபிடிப்பதற்குள் தேர்வு நேரம் முடிந்து விடும்; அதாவது அந்தப் பொல்லாதவன் காரியத்தைக் கெடுத்த பின் தான் உண்மை நிலையே விளங்கும்.
சற்றே யோசியுங்கள். அலுவலகமோ, வீடோ, பொருள் விற்கும் கடையோ, பிரயாணம் வந்த இடமோ, உணவுவிடுதியோ, திரையரங்கோ மனிதர்களை அடையாளம் கண்டு கொள்வது தானேங்க பிரச்சினை? யார் எப்படியென்று தெரியாது, வசமாக மாட்டிக் கொண்டு விடுவோம்.
'No one killed Jessica' எனும் இந்திப்படம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். டெல்லி உணவு விடுதி ஒன்றில் 'நேரமாகி விட்டது, மது கொடுக்க இயலாது' என்று சொன்னதற்காகவே ஒரு இளம்பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரை விட்ட உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் அது. ஆமாங்க, மது குடிக்கக் கேட்டவனுக்கு கொடுக்க முடியாததால், தன் உயிரையே பறி கொடுக்க வேண்டியதாயிற்று அந்த அப்பாவிப் பெண்ணிற்கு!
இரவு நேரத்தில் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்க வருபவன் ஒருவன், தன்னைக் கொல்லக் கூடும் எனும் ஐயம் அந்தப் பெண்ணிற்கு வந்திருக்காது. யாருக்குத் தான் வரும்? ஆனால் 'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' உலகமாயிற்றே இது!
தம்பி, மனிதர்களின் அறிவை மூன்று விதமாகப் பிரிக்கலாமாம்.
முதலாவதாக இயற்கை அறிவு. அதாவது பிறந்ததிலிருந்தே இருப்பது. கெட்டிக்காரத்தனம். பிழைத்துக் கொள்ளும் புத்திசாலித்தனம்.
இரண்டாவதாக கல்வியறிவு. படிப்பதனால், கேட்பதனால் கிடைப்பது கற்றுக் கொள்வது. இது தான் வாங்கிய பட்டங்கள் மூலமும், பதவிகள் மூலமும் வெளிப்படையாகத் தெரிவது.
மூன்றாவதாக அனுபவ அறிவு, உலக அறிவு. நமது செயல்கள், முடிவுகள் ஒவ்வொன்றும் இந்த மூன்றினாலும் பாதிக்கப்படுகின்றன அல்லவா?
வஸந்த் இயக்கத்தில் அஜித் நடித்து, 1995-ல் வெளிவந்த ‘ஆசை ' திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா? மனிதர்களைப் பற்றிய தவறான புரிதல் எங்கு போய் விட்டு விடும் என்பதை இத்திரைப்படம் நன்றாக படம் பிடித்துக் காட்டியது.
பிரகாஷ்ராஜ் டெல்லியில் ஓர் இராணுவ மேஜர். அவர் மனைவி ரோகிணி. பிரகாஷ்ராஜின் மைத்துனி சுவலட்சுமியும் அஜீத்தும் காதலர்கள். ஆனால், பிரகாஷ்ராஜுக்கு மைத்துனி மீது ஆசை. தன் மனைவியை நோயாளி என ஒதுக்கி விட்டு மைத்துனியை அடைய எண்ணுவார்.
பின்னர் மனைவியைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு அதற்கு திட்டங்கள் பல போட்டு, தன் மாமனார் பூர்ணம் விசுவநாதனிடம் அஜீத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உருவாக்குவார். அஜீத்தை வேலையில்லாதவராக, பொறுப்பில்லாதவராக, பணமில்லாதவராகச் சித்தரிப்பார். அத்துடன் தன்னை மிக நல்லவனாகவும் காட்டிக்கொள்வார்.
அந்த அப்பாவி மாமனார் எப்படி பிரகாஷ்ராஜை நம்பிக் கெடுகிறார் என்பது மிக சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கும். பூர்ணம் விசுவநாதன் நடிப்பைச் சொல்லவா வேண்டும்? யாரையும் நல்லவரா, கெட்டவரா என்று பார்த்தவுடன் சொல்லி விடுவேன் என்பார். ஆனால் உண்மையில் எவரையும் மிகச் சரியாகத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியவராக இருப்பார். எளிதில் ஏமாறுவார். நியாயமாக எழ வேண்டிய சந்தேகங்கள் எதுவுமே அவருக்கு வராது.
இதனால் தான் நம்ம ஐயன் வள்ளுவரும் அறிவுடமை என தனி அதிகாரம் வைத்து 10 குறட்பாக்கள் எழுதினார் போலும். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதை அனுபவத்தில் பார்க்கிறோமே! ‘நல்லவைகளையும், தீயவைகளையும் பிரித்து பார்க்கும் அறிவு தான் ஒருவனைக் காப்பாற்றும்' என்கிறார் சாணக்கியர்!
புரிந்து கொண்டால் நல்லது!
- somaiah.veerappan@gmail.com