

எப்போதுமே தொழில்நுட்பத்தில் ஒரு படி முன்னே நிற்பது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கம். எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதில் பெரும்பாலான நிறுவனங்கள் இப்போதுதான் மும்முரமாக இறங்கியுள்ளன. ஆனால், டிரைவர் இல்லாத காரை உருவாக்குவதில் ஆப்பிள் 2016லேயே தீவிரமாக இறங்கியது.
இந்த காருக்கான ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேரை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தது. ஆனால், 2017-ல் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் ‘புராஜக்ட் டைட்டன்’ எனப் பெயரிடப்பட்ட டிரைவர் இல்லாத கார் உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை என்று பொதுவெளியில் அறிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகளை மீண்டும் எடுப்போம் என்றும், இது சற்று கடினமான திட்டம்தான் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் டிரைவர் இல்லாத கார் தயாரிக்கும் திட்டத்தில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்டோர் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால், டெஸ்லா நிறுவனத்தில் இன்ஜினியராகப் பணிபுரிந்த டக் ஃபீல்ட் என்பவரை ஆப்பிள் நிறுவனம் அமர்த்தி, மீண்டும் டிரைவர் இல்லாத கார் உருவாக்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது.
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை சிலர் முழுவதும் தானாக இயங்கக்கூடிய காரைத் தயாரிக்கலாம் என்று சொல்கிறார்களாம். வேறு சிலர் பகுதியளவு தானாக இயங்கக்கூடிய கார் தயாரிக்கலாம் என்கிறார்களாம். இதுபோன்ற தெளிவில்லாத விவாதங்களால் டிரைவர் இல்லாத கார் தயாரிக்கும் திட்டம் தாமதமாகிக்கொண்டே வருகிறது.
எப்போது டிரைவர் இல்லாத காருக்கான தொழில்நுட்பம் தயாராகும் என்பது ஆப்பிள் நிறுவனத்துக்கே இன்னும் தெளிவாகவில்லை.