Last Updated : 28 Jan, 2019 12:20 PM

 

Published : 28 Jan 2019 12:20 PM
Last Updated : 28 Jan 2019 12:20 PM

வரி விலக்கு பெற பல வழிகள்

வரி விலக்கு என்றாலே மாதாந்திர சம்பளதாரர்களுக்கு 80 சி பிரிவின் கீழ் கிடைக்கும் வரிக் கழிவுகள்தான் பெரும்பாலும் நினைவுக்கு வருகிறது. இதில் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரைதான் வரி விலக்கு பெற முடியும். இது தவிர பல்வேறு சேமிப்புகள் மூலமும் வரி விலக்கு பெற வழிகள் உள்ளன. அதேபோல செலவுகளுக்கும் வரி விலக்கு பெறலாம். அவை எவை என்று பார்க்கலாம்:

பிரிவு 80சிசிடி (தேசிய ஓய்வூதிய திட்டம் –என்பிஎஸ்)

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மேற்கொள்ளப்படும் சேமிப்புகளுக்கு 80 சி தவிர்த்து வரி விலக்கு பெற முடியும். இந்த வகையில் ரூ. 50 ஆயிரம் வரை விலக்கு பெறலாம். பொதுவாக குழந்தைகளின் கல்விச் செலவு, திருமணம் போன்ற நெடு நாளைய திட்டங்களுக்குத்தான் திட்டமிடுவர். இந்த ஓய்வூதிய திட்டமானது 60 வயதுக்குப் பிறகு நிரந்தரமான ஓய்வூதியம் கிடைக்க வழி செய்கிறது.

பிரிவு 80 டி (மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்)

தற்போது இந்தியாவில் மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன. ஒரு சாதாரண நோய் கூட ஒருவரின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கரைத்துவிடும். இதைக் கருத்தில் கொண்டால் மருத்துவக் காப்பீடு அவசியம் என்பது அனைவருக்கும் புரியும். மருத்துவக் காப்பீடுக்கு செலுத்தும் பிரீமியம் தொகைக்கு 80 டி பிரிவு மூலம் விலக்கு பெறலாம். குடும்பத் தலைவர், மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு எடுக்கும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.

பெற்றோருக்கு எடுக்கும் காப்பீட்டு பிரீமியத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை விலக்கு பெற வழிவகை உண்டு. அதேபோல 80 டிடி பிரிவின் கீழ் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் செலவிடும் மருத்துவ தொகைக்கு வரி விலக்கு உண்டு. அந்த வகையில் நீங்கள் அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரை பெறலாம். நோயின் தீவிரம் அதாவது 80 சதவீதத்துக்கு மேற்பட்ட ஊனமாயிருந்தால் ரூ. 1.25 லட்சம் வரை விலக்கு கிடைக்கும். அதேபோல உங்களை சார்ந்தவர்களுக்கு மேற்கொள்ளும் மருத்துவ செலவுக்கு அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரை விலக்கு கிடைக்கும்.

பிரிவு 80இ (கல்விக் கடனுக்கான வட்டி)

குழந்தைகள் மேற்கொள்ளும் மேல்படிப்புக்காகப் பெறப்படும் கல்விக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு. இது 80 இ பிரிவின் கீழ் வரும். தொடர்ந்து 8 ஆண்டுகள் வரை செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு பெறலாம். அதாவது கல்விக் கடனின் அசல் தொகை செலுத்தத் தொடங்கும் காலம் வரையில் இந்த வரி விலக்கு சலுகையைப் பெறலாம். செலுத்தப்படும் அசல் தொகைக்கு வரி விலக்கு கிடையாது.

பிரிவு  24 பி (வீட்டுக் கடனுக்கான வட்டி)

வீடு வாங்குவது என்பது மிகப் பெரும் முதலீடாகும். இதில் செலுத்தப்படும் வட்டி மற்றும் அசல் தொகை ஆகியவற்றுக்கும் வரி விலக்கு உண்டு. அசல் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். செலுத்தப்படும் வட்டிக்கு 24 (பி) பிரிவின் கீழ் விலக்கு உண்டு. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும்.

பிரிவு 80 ஜி (நன்கொடைகள்)

தற்போது மக்களின் வருமானம் அதிகரித்துள்ள அதேசமயம் தாராள சிந்தனையும் அதிகரித்துள்ளது. மக்களின் தாராள சிந்தனைக்கு அரசும் வரி விலக்கு அளிக்கிறது. அந்த வகையில் குறிப்பிட்ட அறக்கட்டளைக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80ஜி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். பதிவுபெற்ற அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு இவ்விதம் விலக்கு கிடைக்கும்.

இதேபோல பிரிவு 80 யு பிரிவின் கீழ்  ஊனம் ஏற்பட்டால் ரூ. 75 ஆயிரம் வரை வரி விலக்கு கிடைக்கும். நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ. 1.25 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 80 ஜிஜி பிரிவின் கீழ் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் அல்லது மொத்த சம்பளத்தில் 25 சதவீதம் வரை வரி விலக்கு பெறலாம்.

பிரிவு 80 டிடிஏ-ன் கீழ் சேமிப்புக்கு பெறப்படும் வட்டிக்கு ரூ. 10 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும். அதேசமயம் நிரந்தர சேமிப்பு மூலம் கிடைக்கும் வட்டித் தொகையாக இருப்பின் ரூ. 50 ஆயிரம் வரை விலக்கு பெறலாம். அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வரம்பு கிடையாது. 80ஜிஜிசி-யின் கீழ் நீங்கள் அளிக்கும் தொகை முழுவதற்கும் வரி விலக்கு பெறலாம்.

பொதுவாக மார்ச் மாதத்தின் இறுதிக்குள் பெரும்பாலான சம்பளதாரர்கள் செலுத்த வேண்டிய வரிதொகையை பிடித்தம் செய்து விடுவார்கள். அதற்கு முன்பாகவே எந்தெந்த வழிகளில் வரி விலக்கு பெற போகிறீர்கள் என்ற விவரத்தை அளித்தால் உங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்வதை தவிர்க்கலாம். ஆண்டு தொடக்கத்திலேயே இது குறித்து திட்டமிட்டால் வரி பிடித்தம் செய்யப்படுவதை சமயோசிதமாக குறைக்கலாம்.

- ramesh.m@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x