

எல்லோருக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வழி செய்யும் முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் சதானந்த கவுடா கடந்த வாரம் கூறினார்.
ஆனால், அதற்கு அடுத்த நாளே ஒரு அதிர்ச்சிகரமான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதாவது, வெளிநாட்டு நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் புதுமையான மருந்துகளுக்கு இந்தியாவில் விலை வரம்பு விதிப்பதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இதன்படி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் மருந்துகளுக்கு இனி அவர்கள் இஷ்டப்பட்ட விலையை நிர்ணயிக்க முடியும். இந்த உத்தரவு மருந்துகளை வணிக ரீதியாக விற்பனை செய்ய தொடங்கும் நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய மருந்துகளை இந்தியாவிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியக் காப்புரிமை சட்டம் 1970 பிரிவு 39-ன் கீழ் காப்புரிமை பெறும் மருந்துகளுக்கு விலை வரம்பு விதிப்பதிலிருந்து ஐந்தாண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய மருந்துகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மருந்துகள் அனைத்தும் விலை வரம்பு விதிக்கும் நடைமுறைக்குள்தான் தொடரும் எனவும் மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் இந்திய நோயாளிகளுக்கு சில முக்கியமான வெளிநாட்டு மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது. ஆனால், இந்த முடிவு எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசு மறந்துவிட்டது என்று கூறும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் இந்த முடிவுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். காரணம், அரசின் இந்த முடிவு இனிவரும் காலங்களில் உயிர் காக்கும் மருந்துகள் பலவற்றின் விலை உயர்வதற்குக் காரணமாகும் என்பதால்தான்.
ஏற்கெனவே, மருந்து விலைகளும், மருத்துவ சிகிச்சை செலவுகளும் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களின் மருந்துகளுக்கு ஐந்தாண்டுகள் வரை விலை வரம்பு ஏதும் கிடையாது என்று அறிவித்திருப்பது, உயிர் காக்கும் பல்வேறு மருந்துகளின் விலையை மேலும் மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் நடக்கவுள்ள இந்தப் புதிய ஆண்டில் அரசு இப்படியொரு முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என்று அனைத்திந்திய மருந்து நடவடிக்கை கூட்டமைப்பின் (All India Drug Action Network) துணை ஒருங்கிணைப்பாளர் மாலினி அய்சோலா தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மருத்துவ உபகரணங்களில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவ சிகிச்சை செலவுகள் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே போகின்றன. இந்தியாவிலேயே பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள் நிறுவனங்கள் உள்ளன. அவற்றை ஊக்குவித்து தரமான மருத்துவம் பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யலாம்.
உயிர்காக்கும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளுக்கு உதவலாம். ஆனால், அதை தவிர்த்து, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியச் சந்தைகளில் அனுமதிப்பதால் இந்திய மருத்துவ சந்தையில் விலை ஏற்றம் இருக்குமே தவிர, தரமான மருத்துவம் எல்லோரும் பெறும் வகையில் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.