Published : 31 Dec 2018 11:40 AM
Last Updated : 31 Dec 2018 11:40 AM

2019?! நிகழ்காலத்தில் எதிர்காலம்...

காலச் சக்கரம் அது பாட்டுக்கு ஆட்டோ பைலட்டில் சுற்றுகிறது. ‘மானிடப் பதரே, நீ எக்கேடு கெட்டு போ, நான் சிவனே என்று என் பணி செய்கிறேன்’ என்கிறது. பிறந்தது முதல் காலம் இப்படி இருக்க, நாம் தான் புது வருடம் பிறக்கும்போதெல்லாம் ஏதோ பொற்கால ஆட்சி பிறந்து தெருக்களில் தேனும் தினை மாவும் பெருக்கெடுத்து ஓடி, ஊரில் சுபிட்சம் பிரவாகமாய் பீற்றியடிக்க, வாழ்க்கை சிலபஸ் மாறி, வீட்டுக்கு வீடு நூற்றுக்கு நூறு எடுக்கப்போவது போல், தானாய் பிறக்கும் புது வருடத்தை கோலம் போட்டு, கோயில் சென்று, பட்டாசு கொளுத்தி காணாததை கண்டது போல் கன்னத்தில் போட்டு கொண்டாடுகிறோம்.

நிற்க.

புது வருடம் அதுவுமாய் ஏன் இவன் நெகட்டிவாய் பேசுகிறான் என்று நினைக்காதீர்கள். நெகட்டிவாய் ஏதும் கூறவில்லை. அப்படியே கூறினாலும் என்ன குடிமுழுகப்போகிறது? ‘பாசிட்டிவாய் நினைப்பவன் பிளேனை கண்டுபிடித்தான். நெகட்டிவாய் நினைப்பவன் பாராசூட் கண்டுபிடித்தான்’ என்பார்கள். என்ன தான் பாசிட்டிவாய் இருந்தாலும், பாராசூட் இல்லாமல் பிளேனில் ஏறுவீர்களா? இறங்கும் உத்தேசம் இருந்தால்!

யோசித்துப் பாருங்கள். 2018-ல் என்ன கிழித்தோம், தினக் காலண்டர் தேதியைத் தவிர. 2019 மட்டும் என்ன வித்தியாசமாய் இருந்துவிடப் போகிறது. நாம் பிடித்து வைத்த பிள்ளையார் போல் இருந்துவிட்டு புத்தாண்டு மட்டும் பிரகாசமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பது சற்று ஓவராய் தெரியவில்லை. நம்மை மாற்றிக்கொள்ளாமல், புதிய சிந்தனைகள் பெறாமல், புதிய இலக்குகளை நிர்ணயிக்காமல், அதை அடைய பிரயத்தனப்படாமல் புது வருடம் பிறக்கும், உலகம் மாறும், ஊர் திருந்தும், வாழ்க்கை வளம்பெறும் என்று நினைப்பதே கூட ஒருவித கையாலாகத்தனம் இல்லையா!

அதற்காக புது வருட ரெசல்யூஷன் எடுத்து, சிகரெட்டை ஒழித்து, பாட்டிலை உடைத்து, உண்மையே பேசி, உழைத்து முன்னேறுங்கள் என்று அறிவுரை கூறவில்லை. லாகிரி வஸ்துக்களும் சிலபல கெட்ட பழக்கங்களும் வாழ்க்கை சுவாரசியப்பட இருந்து தொலைக்கட்டும். நான் கூற வந்தது அதுவல்ல. ‘கிழிஞ்சுது போ, நீ இன்னும் விஷயத்துக்கே வரலையா’ என்கிறீர்கள். வருகிறேன்.

2019 எப்படி இருந்தது என்று பார்ப்போமே? `2018: ஒரு அலசல் ரிப்போர்ட்’ என்று கடந்து போன ஆண்டை போஸ்ட் மார்ட்டம் செய்து நடந்த காரியங்களின் கதையை காரணத்தை தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது. இம்முறை ப்ரீ மார்ட்டம் (Pre-Mortem) செய்வோம். நடந்து முடியாத செயலை முடிந்துவிட்டது என்று கற்பனை செய்து என்ன நடந்திருக்கும் அது எப்படி நடந்திருக்கும் என்று முன்கூட்டியே அனுமானிப்பது தான் ப்ரீ மார்ட்டம். 2019-ன் கடைசி நாள் அமர்ந்திருக்கிறோம் என்று நினையுங்கள். பாரில் அமர்ந்து, பாட்டிலை ஓபன் செய்து 2019-ல் நாம் கடந்து வந்த பாதை பற்றி கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம்.

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை எழுந்தருளும் பாராளுமன்ற தேர்தல் இந்த வருடம் ஆரவாரத்துடன் அவதரித்து சென்றது. சேராதவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு காலத்தில் கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்தவர்களை கழுவி ஊற்றி கழுவிலேற்றினார்கள். முன்னொரு காலம் காரித் துப்பி கடித்து குதறியவர்களின் கையைப் பிடித்து கண்ணே மணியே என்று கொஞ்சிக் குலாவினார்கள். இதையே நீங்களும் நானும் செய்தால் பச்சோந்தி என்று கூறும் சமூகம் அரசியல் கட்சிகள் செய்த போது ராஜதந்திரம் என்று பாராட்டியது. 2020-ல் நமக்கு கொஞ்சத்துக்கு கொஞ்சம் வெட்கம் மானம் இன்ன பிற வளர வேண்டிக்கொண்டால் தேவலை.

வழக்கம் போல் அறிக்கைகள் அருவியாய் கொட்டின. இருந்தும் ரஜினிகாந்த் எப்பொழுது பேசுவார் என்று தெரியவில்லை. கமலஹாசன் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. லெட்டர் பாட் கட்சிகள், விசிடிங் கார்ட் அரசியல்வாதிகளுக்கு கூட ஏக டிமாண்ட். பத்திரிகைகளுக்கு பசி. மக்களுக்கு தாகம். காய்ந்த மாடு கம்பு காட்டில் நுழைந்தது.

கட்சிகள் போட்டி போட்டு ஓட்டுக்கு பணம் தந்தார்கள். பெற்றுக்கொண்டவர்களுக்கு ரெவன்யூ ஸ்டாம்ப் ஒட்டி ரசீது தராததுதான் குறை. அடுத்த தேர்தலில் பேசாமல் இந்த பணப் பட்டுவாடாவை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரலாம். அரசாங்கத்திற்கு வருமானமாவது பெருகும்.

தோற்ற தொகுதிகளில் வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டிருந்தன. வெற்றி பெற்ற தொகுதிகளில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கு மக்கள் ஓட்டுப் போட்டிருந்தார்கள். மக்கள் விரோத போக்குகளுக்கு எதிராக ஓட்டுப் போட்ட அதே மக்கள் மற்ற தொகுதிகளில் குடும்ப அரசியலுக்கும் சாவு மணி அடித்ததாக செய்திகள் கூறின. நம் வாழ்க்கையை பிரதானமாய் பாதிப்பது பொருளாதார கொள்கைகள் என்பதை புரிந்துகொண்டால் நாடு இன்னமும் வேகமாக வளரும். புதிய வருடம் முதல் பொருளாதார அறிவை லவலேசம் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம். குறைந்த பட்சம் திங்கள் தோறும் ‘வணிக வீதி’ படிக்கலாம்!

தேசிய கட்சிகள் முதல் சில்லறை சங்கங்கள் வரை போட்டி போட்டு கடன் தள்ளுபடி அறிவித்தன. உங்கள் வீட்டு கடன், என் விட்டு கடன் அல்ல. விவசாய கடன் துவங்கி, பாங்க் கடன், பர்சனல் லோன் என்று அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. நல்ல காலம். காலை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. அடுத்த தேர்தலில் அதையும் எதிர்பார்க்கலாம். கட்சிகள் அனைத்தும் கடன் வாங்கியவர்கள் வயிற்றில் பாலை வார்த்து நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கு பால் ஊற்றினார்கள். கடனை ஒழுங்கு மரியாதையாய் திருப்பி தந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான ‘இளிச்சவாய ரத்னா’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசியல் விளையாட்டு போதாதென்று, உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெகு விமரிசையாக நடந்தது. டிக்கெட் புக்கிங் கொஞ்சமும், மாட்ச் ஃபிக்சிங் நிறையவும் நடந்ததாம். ஸ்டம்ப், அம்பயர் தலை பத்தாதென்று இம்முறை கிரிக்கெட் பாலிலேயே காமிராவை வைத்ததால், பாட்ஸ்மென் அடித்த போதெல்லாம் நமக்கு வலித்தது. இந்திய டீம் இங்கிதம் தெரியாதவர்கள், அசிங்கமாக ஹிந்தியில் திட்டுகிறார்கள், எங்களுக்கு புரியமாட்டேன் என்கிறது என்று மற்ற அணிக்காரர்கள் மாட்ச் ரெஃபரியிடம் புகார் மனு அளித்தார்கள்.

விக்கெட் விழுந்தபோதெல்லாம் காட்டு கத்தல் கத்தி முகத்தை அஷ்டகோனலாக்கி விராட் கோலியின் முகமே மாறிவிட்டது, அவரை எனக்கே அடையாளம் தெரியவில்லை என்று அவர் மனைவி வருத்தம் தெரிவித்தார். கோலியின் முகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப அடுத்த தொடர்களிலிருந்து அவருக்கு ஓய்வு அளித்தது பிசிசிஐ.

வருடா வருடம் நடைபெறும் ஐபிஎல் உற்சவம் அரைகுரை அழகிகளின் ஆனந்த நடனத்தோடு சௌக்கியமாக நடந்தேறியது. இம்முறையும் சென்னையில் மாட்சுகள் நடக்காமல் இருக்க காரண காரியத்தை கண்டுபிடிக்க டெபாசிட் இழந்த கட்சி தலைவர்கள், சினிமா சான்ஸ் இல்லாத டைரக்டர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. சமீபத்தில் மஹாத்மா காந்தி தென் ஆப்ரிக்கா சென்ற போது ட்ரெயினில் பிரயாணம் செய்யக்கூடாது என்று அவரை தள்ளிய நாட்டைச் சேர்ந்தவர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடும் அவலத்தை எதிர்த்து போராடலாம் என்று அக்குழு அறிக்கை சமர்பித்தது.

வேலைவெட்டி இல்லாமல் காத்திருந்த வெகுஜன விரும்பிகள் போராட்டத்தில் இறங்கினர். சென்னை மாட்சுகள் காந்தியின் சொந்த ஊரான குஜராத்திற்கு மாற்றப்பட்டன. அதனாலேயோ என்னவோ எந்த கவலையும் பயமும் இல்லாமல் விளையாடி சிஎஸ்கே மீண்டும் கோப்பையை வென்றது. ஒவ்வொரு முறையும் சிஎஸ்கேவே வெற்றி பெறுவதால் அவர்களை மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு போட்டியிலிருந்து விலக்கவேண்டும் என்று மற்ற அணிகள் ஐபிஎல் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தன!

இருக்கும் சேனல்கள் பத்தாது என்று புதியதாக ‘சூப்பர்ஸ்டார் டிவி’ துவக்கப்பட்டது. சேனல் பெயரை கேட்டாலே சும்மா அதிர்ந்தது. சும்மா சொல்லக்கூடாது. தலைவர் சேனலை ஒரு முறை போட்டால் நூறு முறை ஒளிபரப்புகிறது. ஆன்மீக அரசியல் சேனல் என்பதால் நிகழ்ச்சிகளில் விபூதி வாசனை, பஞ்சாமிர்த நெடி. இமய மலை பயண நேரடி ஒளிபரப்பு பிரமாதம் என்று பார்த்தவர்கள் பரவசமடைந்தனர். மகிழ்ச்சி!

இத்தனையும் இதோடு இன்னமும் கூட நடந்து முடிந்த வருடமாய் இருக்கப் போகும் நியூ இயரை இரு கரம் நீட்டி வரவேற்பதே சம்பிரதாயமாம். பைசா பிரயோஜனம் இல்லையென்றாலும் புது வருடத்தை கொண்டாடுவதே ஐதீகமாம். ஆதலினால் அன்பாய் அழைப்போம். பழைய குருடி, 2019 கதவை திறடி!

- satheeshkrishnamurthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x