

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஓராண்டு நிறைவு, இரண்டாம் ஆண்டு நிறைவு என இந்த நிகழ்வை ஒரு சம்பிரதாய சடங்காக அலசி ஆராய வேண்டாம் என்றுதானிருந்தோம். ஆனால், முன்னாள் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ‘மரண அதிர்ச்சி’ என்று குறிப்பிட்ட பிறகு இதை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது என்றாகிவிட்டது.
2016 நவம்பர் 8ம் தேதி, நிதி அமைச்சக வளாகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் தனது அலுவலக அறையில் தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் அறிவிப்பை பார்த்துக் கொண்டிருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அர்விந்த் சுப்ரமணியன் சமீபத்தில் வெளியிட்டுள்ள புத்தகத்தில் விவரிக்கிறார்.
“சமீபகால வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லாத நிலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. பொதுவாக பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது படிப்படியாக எடுக்கப்பட வேண்டும். ஐரோப்பிய மத்திய வங்கி 2016-ம் ஆண்டு 500 யூரோ செல்லாது என்பதை படிப்படியாகத்தான் அமல்படுத்தியது.
மேலும் இதுபோன்ற பண மதிப்பு நீக்க நடவடிக்கைகள் போர் காலங்களில், பண வீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போகும் சூழலில், பண தட்டுப்பாடு, அரசியல் ஸ்திரமற்ற சூழலில்தான் எடுக்கப்படும். ஆனால், மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கையானது இவை எவற்றிலுமே சேராது. இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு அவசியமே இல்லாத நிலையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்கிறார்.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் நவம்பர் 8, 2016 அன்றைய இரவை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? டெமோ என்று சுருக்கமாகவும், டிமானிடைசேஷன் என்று விளக்கமாகவும் அழைக்கப்பட்ட இந்த பண மதிப்பு நீக்க அறிவிப்பு பலரது தூக்கத்தை தொலைக்கச் செய்தது.
மிகப் பெரும் பொருளாதார மாற்றத்துக்கான பங்களிப்புக்காகவும், ஊழல், கருப்புப் பணம், கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காகவும், மக்கள் 50 நாள்கள் சிரமங்களை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
ஆனால், 2 ஆண்டுகளாகியும் நீங்காத இந்த நடவடிக்கையின் பாதிப்புகளை இன்னமும் மக்கள் தாங்கிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். வீழ்ந்தவர்கள் எவரும் இன்னும் மீளவில்லை. அரசின் ஒரு அறிவிப்பு மக்களின் வாழ்க்கையை எந்த அளவுக்கு புரட்டிப் போடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.
பல திருமணங்கள் நின்று போயின. போதிய பணமில்லாத காரணத்தால் முக்கியமான அறுவை சிகிச்சைகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் நடக்காமல் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. பல சிறு வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை மூடிவிட்டு கிராமங்களுக்குத் திரும்பிய நிகழ்வுகளும் நடந்தேறின. வங்கிகளில் பணத்தை மாற்ற காத்திருக்கையில் நூற்றுக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், என்ன காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அது மட்டும் கடைசிவரை நடக்கவேயில்லை.
கருப்புப் பணத்தை பதுக்கியவர்களோ, முறைகேடாகச் சொத்து சேர்த்தவர்களோ பாதிக்கப்படவில்லை. பணப் புழக்கத்தை நிறுத்தினால், கருப்புப் பணம் ஒழிந்து போகும் என்ற ஒற்றை வரி சிந்தனை அர்த்தமில்லாமல் போனது. ஆனால், அன்றாட வாழ்க்கையை நடத்த ரிசர்வ் வங்கி அச்சிட்டு தனது குடிமக்களுக்காகக் கொடுத்த பணத்தை மட்டுமே நம்பியிருந்த கோடிக்கணக்கான ஏழைகள்தான் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் முன்பே கள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிட்டன. கருப்புப் பணம் ஒழியும் என்றார்கள். சமீபத்தில் தெலங்கானாவில் கார் ஒன்றில் ரூ. 7 கோடி கரன்சிகள் பிடிபட்டன. ஜன் தன் கணக்கில் ரூ. 28 கோடி அளவுக்கு வந்த பணம் கருப்புப் பணமாக இருந்தால், அரசு அறிவித்த மிகப்பெரிய தொகைக்கு ஈடான கருப்புப் பணம் எங்கே போனது.
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் புழங்கும் கரன்சிகளைப் பார்த்தால் கருப்புப் பணம் ஒழிந்தது என்பதை, கருப்புப் பணமே நேரில் வந்து, நான் ஒழிந்துவிட்டேன் என்று சொன்னாலும் யாரும் நம்புவது சிரமம் தான்.
இவையெல்லாம் வேலைக்காகவில்லை என்றதும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும். பணப் பரிவர்த்தனை குறையும் என்றார்கள். சொன்னதுபோலவே டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்க ஆரம்பித்தது என்னவோ உண்மைதான்.
பேடிஎம் உள்ளிட்ட வாலட்டுகளும், பேமென்ட் வங்கிகளும் இதனால் நல்ல லாபம் பார்த்தன. ஆனால், எவ்வளவு நாள்தான் ஆன்லைனில் ஆர்டர் செய்து பிட்சாவும், பர்கரும் சாப்பிடமுடியும். அருகில் உள்ள கடையில் அரசி வாங்கவேண்டுமென்றால் ரொக்கம் தானே தேவைப்படுகிறது.
நகரங்களிலேயே இந்த நிலை எனில், கிராமங்களை நினைத்துப் பாருங்கள். இதனால், நாளடைவில் பழையபடியே கரன்சி புழக்கம் அதிகமாகி, பணமில்லா பரிவர்த்தனையின் வளர்ச்சியும் குறையத் தொடங்கியது.
நிதி நிர்வாகம் சுத்தமாகவும், பொருளாதாரம் மேலும் விரிவடையும் என்றனர் ஆட்சியாளர்கள். நிர்வாகமும் சுத்தமாகவில்லை. பொருளாதார வளர்ச்சியும் தொடர்ந்து சரிவையே சந்தித்திருக்கிறது. வங்கிகளை சீரமைக்கிறோம் என்றார்கள். அதுவும் நடைபெறவில்லை. வங்கிகளோடு சேர்ந்து, வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் நலிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் மிச்சம்.
ஆனாலும், இன்னமும் கூட பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நல்லதே நடந்திருக்கிறது என்பது போல் அரசு தனது தவறை நியாயப்படுத்தப் பார்க்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நீண்ட கால பாதிப்புகளால், குறிப்பாக அமைப்பு சாரா தொழிலைச் சேர்ந்த பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டதை கொஞ்சம் கூட அரசு நினைத்துப் பார்க்காததுதான் பெரும் சோகம்.
ஒரு திட்டம் செயல்படுத்தும் முன்பு அதற்குரிய முன்னேற்பாடுகளை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதையும் செய்யவில்லை. கருப்புப் பணம் பதுக்கிய தொழிலதிபர்கள் தங்களது பணியாளர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் விசாரிக்கப்படுவதாகக் கூறுவது வேதனையிலும் வேதனை.
பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கைகள் அமைப்பு சாரா தொழில்கள் சிதிலமடைந்ததை சுட்டிக் காட்டியுள்ளன. விவாசாயத்துக்கு ஏற்பட்ட தொழில் பாதிப்பை சொல்லி மாளாது. தங்களது விலை பொருளை விற்க முடியாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டனர்.
விதைகள் வாங்க முடியாமல், நடவு தேதியை தள்ளிப்போட்ட விவசாயிகள் பலர். ஆனால், அரசு இதுவரை அமைப்பு சாரா தொழிலில் பண மதிப்பு நீக்கம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து ஆராயவும் இல்லை. அதைச் சரிசெய்யும் முயற்சிகளையும் செய்யவில்லை. பண மதிப்பு நீக்கத்தின் தாக்கம் ஹிரோஷிமா, நாகசாகி போன்று 60 ஆண்டுகளைக் கடந்தும் நினைவு கூறும் வகையிலான நிகழ்வாக மாறிவிடுமோ என்பதுதான் பலரது கவலையாக உள்ளது.
பொதுவாக, ஆட்சியாளர்களுக்குச் சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனைகளை வழங்குவதற்குத்தான் அதிகம் படித்த பொருளாதார நிபுணர்கள் உள்ளனர். ஆனால் பதவியில் இருக்கும்போது தனது பதவிக்கு நியாயமாக நடந்துகொள்ளாமல், அரசின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் அமைதி காத்துவிட்டு, பதவியிலிருந்து வெளியேறியபிறகு புத்தகம் வாயிலாக அரசின் நடவடிக்கையை விமர்சிப்பதை என்னவென்று சொல்வது.
இதன் மூலம் ஆதாயம் தேடுகிறார்களா அல்லது தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்களா என்ற குழப்பம்தான் உண்டாகிறது. எதுவாக இருந்தாலும் இதுபோன்ற செயல்கள், அரசு அதிகாரிகள் மீது மக்கள் வைத்துள்ள அபிப்ராயத்தை மேலும் குறைக்கவே செய்யும்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பலன்களை அரசு பட்டியல் போடுவது ஒருபுறம், திட்டமும் சரியில்லை, செயல்படுத்திய விதமும் சரியில்லை என குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள் மறுபுறம். பாதிக்கப்பட்டது என்னவோ பொதுமக்கள்தான்.
கடைசியில், இந்த நடவடிக்கையால் ஒரே ஒரு பலன் மட்டும் கிடைத்தது. சாதாரண பொதுமக்களுக்கும் பொருளாதாரம் குறித்த புரிதல் கிடைத்தது. ஆம், இப்போது பொருளாதார செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றன. மக்களும் என்ன ரிசர்வ் வங்கிக்கும், நிதி அமைச்சகத்துக்கும் மோதல் முற்றுகிறதாமே, என்ன ஆகுமோ என்று புலம்பியபடி பொருளாதார அரசியல் பேசுகின்றனர்.
- ramesh.m@thehindutamil.co.in