

பிரிட்டிஷ் சூப்பர் பைக் உற்பத்தி நிறுவனமான ‘ட்ரயம்ப்’ அடுத்த ஆண்டு ஆறு பைக்குகளைச் சந்தையில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்திய டூவிலர் சந்தையில் நுழைந்து ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ள ‘ட்ரயம்ப்’ தனது விற்பனையை ஒவ்வோராண்டும் 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘ட்ரயம்ப்’ நிறுவனத்தின் விற்பனை நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது.
முக்கியமாக 2ம் நிலை நகரங்களில் நல்ல வரவேற்பு இருப்பதாக ட்ரயம்ப் மோட்டார் இந்தியா பிரிவின் பொது மேலாளர் பரூக் கூறியுள்ளார். ஆறாம் ஆண்டில் அடியெடுத்தும் வைக்கும் ‘ட்ரயம்ப்’ ஆறு புதிய பைக்குகளுடன் சந்தையைக் கலக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது சூப்பர் பைக்குகள் பரவலாக பைக் பிரியர்களைக் கவர்ந்து வருவதால் தங்களது விற்பனை இலக்கை எட்ட முடியும் என்று நம்புகிறது. இதற்காக தங்களது டீலர்ஷிப் எண்ணிக்கையை 16லிருந்து 25 அடுத்த சில வருடங்களில் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
புதிதாக வரவுள்ள மாடல்கள் அனைத்தும் புதிதாகவும், தற்போதுள்ள மாடல்களைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட பேஸ்லிஃப்ட் மாடலாகவும் கலவையாக அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஜூன் மாதம் இந்த பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. தற்போது ‘ட்ரயம்ப்’ நிறுவனம் 13 விதமான சூப்பர் பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை ரூ. 7.7 லட்சம் முதல் ரூ. 22 லட்சம் வரை உள்ளன.