

சூழல் பாதுகாப்பு என்பது அனைத்து துறைக்குமான சவாலாக மாறிவிட்டது. ஆனால், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது ஆட்டோமொபைல் துறையினர்தான். அபரிமிதமாக வளர்ச்சியை எட்டிவரும் இத்துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
சமீபத்தில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான நிதி ஆயோக், ஒரு பரிந்துரையை அரசுக்கு அளித்தது. இந்த பரிந்துரை வெளியானதிலிருந்து இத்துறை அதிர்ந்து போய் உள்ளது. அரசு அந்தப் பரிந்துரையை படித்து அதை பரிசீலிப்பதற்கு முன்பாகவே, அதற்கு பலத்த எதிர்ப்புக் குரல் இத்துறையிலிருந்து கிளம்பியுள்ளது.
சூழலை பாதுகாக்கும் பேட்டரி வாகனங்களுக்கு மானியம் அளிப்பதற்கு தேவையான நிதியை, ஏற்கெனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதல் செஸ் விதித்து பூர்த்தி செய்யலாம் என்பதுதான் நிதி ஆயோக் அளித்த பரிந்துரையாகும். மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி 70 சதவீத அளவுக்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது உள்ளது.
உலகிலேயே இந்த அளவுக்கு அதிக வரி வேறு எந்த நாட்டிலும் விதிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் கூடுதலாக செஸ் விதிப்பது இத்துறையை அழித்துவிடும் என்கின்றனர் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தினர்.
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்கள் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த துறைக்கு மானியம் அளிப்பது வரவேற்கத்தக்கதுதான், அதேசமயம் வளர்ச்சியடைந்த தொழில்துறையை மேலும் மேலும் வரிச் சுமையால் நெருக்குவது எந்த வகையில் நியாயம் என்கின்றனர் இத்துறையினர்.
நார்வேயில் 2007-ம் ஆண்டு கார்பன் வெளியிடும் வாகனங்களுக்கு வரி விதித்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குறைவாக புகை வெளியிடும் வாகனங்களுக்கு சலுகை தர ஆரம்பித்தனர்.
பிரான்சில் 2007-ம் ஆண்டு குறைவாக கரியமில வாயு வெளியிடும் வாகனங்களுக்கு சலுகை அறிவித்தனர். அதேசமயம் அதிக புகை வெளியிடும் வாகனங்களுக்கு கூடுதல் வரியையும் விதித்தனர். கனடா, டென்மார்க், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பேட்டரி வாகனங்களுக்கு சலுகை அளிக்கும் அதே
சமயம், குறைவாக புகை வெளியிடும் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கவில்லை என்று உதாரணங்களுடன் கொந்தளிக்கின்றனர் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள்.
ஏற்கெனவே டீசல் வாகனங்களுக்கு பெட்ரோல் வாகனங்களைவிட கூடுதலாக வரி விதிக்கப்படுகிறது. அதேசமயம் பேட்டரி வாகனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. புகை சோதனையில் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கூடுதல் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் ஆட்டோமொபைல் துறையினர் மீதே தொடர்ந்து கூடுதலாக வரி விதிக்க நினைப்பது இத்துறையை அழித்துவிடும் என்று மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி. பார்கவா சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கெனவே பாரத் புகை விதி 6 நிலையை எட்டுவதற்காக நவீன கருவிகளை வாங்குவது, வாகனங்களில் பொறுத்துவது என அதிக செலவுகளை இத்துறையினர் செய்துள்ளனர். கூடுதல் வரி விதிப்பு இத்துறையை கடுமையாக பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே சுற்றுச் சூழல்பாதுகாப்பு வரியாக மத்திய, மாநில அரசுகள் வசூலிக்கின்றன. இதை பேட்டரி வாகனங்களுக்கு மானியம் அளிக்க பயன்படுத்தலாமே என்றும் ஆலோசனை கூறுகின்றனர்.
பேட்டரி வாகனங்களுக்கு ஜிஎஸ்டியில் வெறும் 12 சதவீதம் மட்டும்தான் விதிக்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 28 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே பேட்டரி வாகனங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை விட இன்னமும் அதிகமாக தரமுடியும் என்று தோன்றவில்லை என்று பார்கவா குறிப்பிட்டுள்ளார்.
2030-ம் ஆண்டிற்குள் 85 சதவீதம் முதல் 87 சதவீத வாகனங்கள் பேட்டரியால் இயங்குபவையாக இருக்கும் என்ற நிலையை எட்டுவதற்கு ஒருங்கிணைந்த அனைவருக்கும் ஏற்புடைய அணுகுமுறை அவசியம் என்று குறிப்பிட்ட பார்கவா, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால், மூன்று வகையான வாகனங்கள்தான் இயங்க முடியும். சிஎன்ஜி மற்றும் பேட்டரி வாகனங்கள் இது தவிர பயோ எரிபொருள் வாகனங்கள் மட்டும்தான் சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவை என்றார். ஆனால் இவற்றை செயல்படுத்துவதற்கு தொழில்நுட்பம் மிகவும் அவசியம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாரத் புகை விதி 6 நிலையை எட்டுவதற்கு பெட்ரோலிய நிறுவனங்களும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ரூ. 1 லட்சம் கோடி வரை முதலீடு செய்துள்ளன. பிஎஸ் புகை நிலை 3-ன் போது டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை அளவைக் காட்டிலும் 90 சதவீதம் குறையும். இத்தகைய சூழலில் பேட்டரி வாகனப் புழக்கமானது மிகக் குறைவாகவே இருக்கும். இது படிப்படியாக அதிகரிக்கும் அதேசமயம் டீசல் வாகனங்களின் புழக்கமும் குறையும் என்று இத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
டெல்லியில் வாகன புகை அதிகரிப்பு காரணமாக ஏறக்குறைய 6 மாதங்களுக்கு புதிய டீசல் வாகன விற்பனையே நிறுத்தப்பட்டது. சூழலை பாதுகாக்க வேண்டும், அதேசமயம் இயங்கி வரும் தொழில் முற்றிலுமாக நசிந்து போகும் வகையில் விதிமுறைகள் இருந்துவிடக் கூடாது என்பதே இத்துறையினரின் எதிர்பார்ப்பாகும். ஆட்டோமொபைல் துறையினருக்கு அடுத்தடுத்து சவால்கள் அனைத்து திசைகளிலும் உருவாகிக் கொண்டேயிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்றனர் இத்துறையினர்.