சபாஷ் சாணக்கியா: வெடிக்கும்... எப்போதென்று தெரியாது!

சபாஷ் சாணக்கியா: வெடிக்கும்...  எப்போதென்று தெரியாது!
Updated on
2 min read

கமலஹாசன் நடித்து 1994-ல் வெளிவந்த மகாநதி திரைப்படம் பார்த்திருப்பீர்கள், மனம் கசிந்திருப்பீர்கள். திருச்சி அருகே  ஓர் அழகிய கிராமத்தில், தன் அத்தை எஸ் என் லட்சுமி, மகள் ஷோபனா, மகன் தினேஷுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவார் கமல்.

அவர்களது நிம்மதியான வாழ்வில் குறுக்கிடுவார் கபடதாரியான ஹனீஃபா. கமலுக்குப் பணக்காரன் ஆகும் ஆசை காட்டி, சென்னையில்  சிட் பண்ட் நிறுவனம் தொடங்கச் செய்து, பணம் செலுத்தியவர்களின் பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார். அப்பாவி கமலை மோசடி செய்தாரென்று சிறையில் அடைத்து விடுவார்கள்!

கமலுக்கு சிறையில் ஆதரவாக இருக்கும்  பூர்ணம் விசுவநாதனும் வேறு ஒருவரால் ஏமாற்றப்பட்டு, செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு வந்தவர்தான். விசுவநாதனின் மகளான செவிலி சுகன்யா கமலின் குடும்பத்தாருக்கு உறுதுணையாக இருப்பார். மோசக்காரனான ஹனீஃபா  சிறுமி ஷோபனாவை தன் தலைவனுக்கு இரையாக்குவதோடு, கல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியான சோனா கஞ்ச் பகுதியில்  விற்றுவிடுவார். தன் நாயின் பின்னால் ஓடும் பச்சிளம் பாலகனான தினேஷை ஒரு தெருக் கூத்தாடிக் குடும்பத்தினர் எடுத்து வளர்ப்பார்கள்.

நடந்த கொடுமைகளை அறிந்து கொள்ளும் கமல், ஹனீஃபாவையும் அவனது தலைவனையும் கொன்று விட்டு மீண்டும் சிறைக்குச் செல்வார். 14  ஆண்டுகள் கழித்து கிராமத்திற்குத்  திரும்பி, மீட்டெடுத்த குழந்தைகளுடனும் மனைவி சுகன்யாவுடனும், கமல் தன் பழைய கிராமிய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதுடன் படம் முடிவடையும்.

காவிரிக்கரையில், நீரோடை போல அமைதியாக  வாழ்ந்து கொண்டிருந்த கமல் குடும்பம், ஒரு தவறான கூட்டாளியினால் சின்னாபின்னமாவதை பார்க்கும் நமக்கு நெஞ்சு கனக்கும். ஹனீபா கமலிடம் மதுவைக் கொடுத்து, மாதுவைக் காட்டி, 50 காசோலைகளில்  கையெழுத்து வாங்கும் பொழுது நம் மனம் பதபதைக்கும்.

‘கபட குணமுள்ளவன்  கூட்டாளியாக இருந்தாலும், அல்லது அவனுடன் தொடர்பு இருந்தாலும் தினம் தினம் செத்துப் பிழைப்பது போலிருக்கும்' என்கிறார் சாணக்கியர்.  தம்பி, அந்த மாதிரி ஆட்களுடன் இருந்தால் அழிவு நிச்சயம். ஆனால், எப்போது என்பது தெரியாது! மேலும் இது அங்கிங்கெனாதபடி எங்கும் நடப்பது!

நண்பர் ஒருவர் புணேவில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். அவரது குழுவில் 10 பேர். அதில் ஒருவர் சரியில்லை. நேரத்திற்கு வரமாட்டார். கொடுத்த வேலையை பொறுப்பாக முடிக்க மாட்டார். கேட்டால் ஒழுங்காகப் பதில் சொல்லவும் மாட்டார். உங்கள் ஊகம் சரி தான். அவருக்குக் குமார் என்றே பெயர் வைத்துக் கொள்ளலாம்!

குமாருக்குத் திறமை  குறைவு; தன் பணியில் ஆர்வமும் குறைவு. கொடுத்த வேலையை குமார் முறையாகச் செய்யாததால், நம் நண்பருக்கும் அவரது குழுவினருக்கும் கெட்ட பெயர். அப்படிப்பட்ட ஆளை கழட்டி விட வேண்டியது தானே என்கிறீர்களா? நம்ம நண்பர் அது பற்றி உயரதிகாரிகளிடம் பேசி இருக்கிறார். அவர்கள், ‘குமாரை பணியிட மாற்றம் செய்து விடுகிறோம், ஆனால் எங்களிடம் குமாரின் இடத்துக்கு மாற்று ஆள் கேட்கக் கூடாது' என நிபந்தனை போட்டிருக்கிறார்கள்.

உடனே நம் நண்பர் பயந்துவிட்டார்.  அடடா, இதென்ன வம்பாகப் போச்சு, ஏதோ அடுத்து நல்ல ஆள் கிடைக்கும் வரை இந்தக் குமாரை வைத்தே ஓட்டிக் கொள்வோம் என இருந்துவிட்டார். இதனால் குமாரின் வால்தனங்கள் அதிகரித்தன. தனது தவறுகளைப் பொறுத்துக் கொள்கிறார்கள் எனத் தெரிந்ததும் இருந்த கொஞ்சநஞ்ச தயக்கமும் அச்சமும் இல்லாமல் போயின. பணவிஷயங்களிலும் தவறாக நடந்துகொள்ளத் தொடங்கினார். நம் நண்பரும்  எப்படியோ தொலைகிறான், இன்னும் இரண்டு மாதங்களில் மாற்று ஆள் கேட்டு வாங்கிவிடுவோம் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.

ஆனால், நண்பருக்கு நிம்மதி போயிற்று. குமார் என்றைக்கு, என்ன மாதிரி தவறு செய்வார் என்று யாராலும் சொல்ல முடியாது. பல பொருட்களின் விலைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதும் பொழுது முன்பின் எழுதி குழப்புபவர்களைப் பார்த்து இருப்பீர்கள். குமாரோ அந்த இடத்தில் வாடிக்கையாளரின் கணக்கு எண்களையே கூட எழுதி  வைத்து விடுவார்! அதை வைத்து முடிவு எடுப்பவர்கள் எப்படி திண்டாடியிருப்பார்கள்?

‘உங்களை நம்பி எந்த வேலையையும் கொடுக்கக் கூடாது; கெடுத்து விடுவீர்கள் எனும் அச்சத்தை உருவாக்கி விட்டால் போதும். அப்புறம் கவலையில்லை. உங்களுக்கு வேலைப் பளுவே இருக்காது' என பால் தெராக்ஸ் எனும் அமெரிக்க நாவலாசிரியர் சொல்வது வேடிக்கையாகத் தெரிந்தாலும், வேதனை தரும் உண்மையல்லவா?

அந்த நித்ய கண்ட  நிலை  நான்கு ஆண்டுகள் தொடர்ந்ததும், குமார் ஒரு பெருந்தவறு செய்து, அதனால் அந்நிறுவனத்திற்கு பல கோடி பெறுமானமுள்ள ஒப்பந்தம் கை நழுவிப் போனதும், குமார் வீட்டிற்கு அனுப்பப் பட்டதும் பின்கதை!

ஐயா, பாம்புடன், நரியுடனெல்லாம் கூட்டு வைத்துக்கொள்ள முடியுமா? கபடமானவர்கள், ஆபத்தானவர்களை வைத்துக் கொண்டு எந்த வேலையையும் செய்யலாமா? சாணக்கியர் சொல்வது போல அவர்களை விலக்கினால் தானே நிம்மதி!

- somaiah.veerappan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in