

இளைஞர்களின் பிரியமான மோட்டார் சைக்கிளாக கேடிஎம் உள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் தற்போது 500 சிசி திறன் கொண்ட இரட்டை சிலிண்டர் மோட்டார் சைக்கிளை உருவாக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தில் பெருமளவு பங்குகளை பஜாஜ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் இந்நிறுவனத் தயாரிப்புகளை பஜாஜ் ஆலையிலேயே தயாரிக்கிறது.
தற்போது பிரீமியம் பிரிவில் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனத்தின் அட்வெஞ்சர் மாடல் பைக் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரட்டை இன்ஜின் கொண்ட 500 சிசி திறன் உள்ள மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்காக உருவாக்கி வருகிறது.
ஏற்கெனவே இந்நிறுவனத்தின் 799 சிசி திறன் கொண்ட டியூக் மற்றும் அட்வெஞ்சர் மாடலில் உள்ளது. புதிய மாடல் 500 சிசி-யில் உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. புத்தாண்டில் 500 சிசி கேடிஎம் பைக்குகள் சாலையில் சீறிப் பாயும் என்று எதிர்பார்க்கலாம்.