அலசல்: ரிசர்வ் வங்கியில் குறுக்கீடுகள் கூடாது

அலசல்: ரிசர்வ் வங்கியில் குறுக்கீடுகள் கூடாது
Updated on
2 min read

இந்திய பொருளாதாரத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு தனித்துவமானது. மத்திய அரசின் கண்காணிப்பில் இருந்தாலும், கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக இயங்குகிறது. ஆட்சிகள் மாறினாலும் அவர்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்காமல் பொருளாதாரத்துக்கு சரியான பங்களிப்பைச் செய்கின்றது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வரலாற்றில் இதுவரை பயன்படுத்தாத 7-வது சட்டப்பிரிவை மத்திய அரசு பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இதன்படி ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தை மத்திய இயக்குநர்கள் குழுவிடம் அரசு ஒப்படைக்கும். ரிசர்வ் வங்கியின் கவர்னர் உட்பட அதிகபட்சம் 4 துணை கவர்னர்களும், மத்திய அரசு நியமிக்கும் 4 இயக்குநர்களும், ஒரு அதிகாரியும் இந்த குழுவில் இருப்பர். இந்த குழு ரிசர்வ் வங்கியைக் கட்டுப்படுத்தும். அதாவது, மறைமுகமாக ரிசர்வ் வங்கியைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் அரசு கொண்டு வர இந்த சட்டப்பிரிவு வழி வகுக்கும்.

ஆனால் இந்த தகவல்கள் வெளிவருவதற்கு முன்னதாகவே, ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா, மத்திய அரசின் நெருக்கடிக்கு ஆளாகிறோம் என வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இதற்குப்  பதிலடி தரும் வகையில் ரிசர்வ் வங்கியைக் குற்றம்சாட்டி நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசினார். 2008-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுவரை வங்கிகள் பாரபட்சமில்லாமல் கடன் வழங்கின. இதைத் தடுக்க ரிசர்வ் வங்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால்தான் இப்போது வாராக்கடன் அதிகரித்துள்ளது என்றார்.

இப்படியான வார்த்தை பனிப்போரின் பின்னணியில்தான் ரிசர்வ் வங்கிச் சட்டம் 7-ஐ பயன்படுத்த உள்ளதாகவும், இதனால் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. நிலைமையை சமாளிக்க மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் உர்ஜித் படேல் இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை.

ரிசர்வ் வங்கியின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவது இப்போது மட்டும் நடப்பதல்ல. என்றாலும், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் பல முக்கிய பிரச்சினைகளில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் முரண்பட்டிருக்கின்றன. வட்டி விகிதம், நீரவ் மோடி விவகாரம், பொதுத் துறை வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் என பல விஷயங்களிலும் கருத்து வேறுபாடு உள்ளன. அரசியல் லாபங்களுக்காக ரிசர்வ் வங்கியின் பொருளாதாரக் கொள்கைகளில் தலையிடுவதுதான் இந்த முரண்பாடுகளுக்குக் காரணம் என சொல்லப்படுகின்றன. எனினும் இந்த முரண்பாடுகளை ஆளும் பாஜக-வின் ஆதரவு சக்திகள் மிகப் பெரிய நெருக்கடிக்குக் கொண்டு செல்கின்றன.

ரிசர்வ் வங்கியின் முந்தைய கவர்னர் ரகுராம் ராஜனுடனான முரண்பாடுகள் வெளியான நிலையில், ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜகவின் முக்கிய தலைவரான சுப்பிரமணிய சுவாமி கூறினார். அதேபோல இப்போதும், அரசுடன் இணக்கமாக இல்லையென்றால் உர்ஜித் படேல் பதவி விலக வேண்டும் என பாஜகவின் ஆதரவு அமைப்பான சுதேசி ஜாக்ரான் மஞ்ச் தலைவர் அஸ்வினி மஹாஜன் கூறுகிறார். இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் பகுதிநேர நியமன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஆளும்கட்சியின் தலையீடுகளால்தான் முரண்பாடுகள் எழுகின்றன என்கிற விமர்சனம் உள்ள நிலையில் ஆளும் தரப்பிலிருந்தே தரப்படும் அழுத்தங்கள் சுதந்திரமான செயல்பாடுகளை முடக்கவே செய்யும். அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்குமான உறவு எப்போதும் சுமூகமானதாக இருக்க வேண்டுமெனில், ஆளும்கட்சியின் இணை அமைப்புகள் அரசு நிர்வாகங்களில் குறுக்கிடுவதை அனுமதிக்கக்கூடாது. ஆசிய அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்கிற அடையாளம் இதுபோன்ற குறுக்கீடுகளால் சிதைந்துவிடக்கூடாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in