ஃபோக்ஸ்வேகன் வின்டேஜ் கார் அணிவகுப்பு

ஃபோக்ஸ்வேகன் வின்டேஜ் கார் அணிவகுப்பு
Updated on
1 min read

கடந்த வாரம் கோவா தலைநகர் பனாஜி சாலைகள் முழுவதும் ஃபோக்ஸ்வேகன் பழைய மாடல் கார்களின் அணி வகுப்பு பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தியது.

இந்தியாவில் உள்ள பழைய மாடல் ஃபோக்ஸ்வேகன் கார்களை  வைத்திருந்த கார் பிரியர்கள் அனைவரும் தங்களது கார்களை அணிவகுப்பில் பங்கேற்கச் செய்தனர்.

நகரின் மிகவும் பிரதான சாலைகளில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு கார் பிரியர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. பாஞ்ஜிம் ஜிம்கானாவிலிருந்து தொடங்கிய இந்த அணி வகுப்பு பனாஜியில் உள்ள அபே ஃபாரியா சிலை, மிராமர் சதுக்கம் வழியாக சுற்றி மீண்டும் ஜிம்கானா கிளப்பை அடைந்தது.

சுமார் 50 ஃபோக்ஸ்வேகன் மாடல் கார்கள் இதில் பங்கேற்றன. ஏறக்குறைய 150 பங்கேற்பாளர்கள் தங்களது மாடல்களை பங்கேற்கச் செய்தனர். பங்கேற்ற கார்களில் மிகவும் அரிதான 5 மாடல் கார்கள் பார்ப்போரை அதிகம் கவர்ந்தது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரியான் பிரிகான்ஸா கூறியது மிகையல்ல.

மிகவும் பழமையான ஸ்பிளிட் விண்டோ உள்ள பீட்டில் மாடல் ஃபோக்ஸ்வேகன் காரும் இதில் பங்கேற்றது. அதேபோல பின்புற கண்ணாடியானது இரண்டு பாகங்களால் இணைக்கப்பட்டிருந்ததும் இதன் சிறப்பம்சமாகும். இதேபோன்று குபேல்வேகன், ஃபோக்ஸ்வேகன் பஸ், ஃபோக்ஸ்வேகன் டெம்போ ஆகியனவும் குறிப்பிடத்தக்க மாடல்களாகும்.

பழமையான கார்களை மிகவும் விருப்பத்துடன் பராமரிக்கும் கார் பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த கார் அணி வகுப்பு இருந்தது. அதேபோல பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவமாக இது இருந்தது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்த ஆண்டிலிருந்து பீட்டில் உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த அணிவகுப்பில் பழமையான பீட்டில் கார்கள் காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.

இரண்டாம் ஆண்டாக இந்த அணி வகுப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in