

கஜா புயலில் டெல்டா மாவட்டங்கள் அடைந்த பாதிப்பை கண்கூடாக காண முடிந்தது. ஆனால் கருப்புப் பணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் அனைத்தும் வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றால் அது நம்பும்படியாகவா இருக்கிறது. இந்தத் தகவலை பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலண்ட் வருமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கவும், பணத்தை போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித்துறை தீவிர நடவடிக்கை எடுத்தது. கரீபிய தீவு நாடுகள் கருப்புப் பண பதுக்கலுக்கு சிறந்த நாடுகளாகக் கருதப்படுகின்றன. 2013-ம் ஆண்டிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் பிவிஐ அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனையும் நடத்தினர்.
அந்த நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பண விவரத்தை அளிக்குமாறு கோரினர். 2013-ம் ஆண்டில் பிரிட்டிஷ் வர்ஜின் ஐலண்டில் 612 இந்தியர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. இவ்விதம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு ரூ.11,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு ஒருவழியாக நடைபெற்று வந்த சமயத்தில் 2016-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் என்ற புலனாய்வு பத்திரிகையில் வெளிநாடுகளில் வருமான வரி செலுத்தாமல் கருப்புப் பணம் பதுக்கியுள்ள 500 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டன. அதேபோல மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனத்தின் ஆவணமும் கசிந்தது.
2017-ம் ஆண்டில் பேரடைஸ் பேப்பர்ஸ் என்ற புலனாய்வு பத்திரிகை 714 இந்தியர்கள் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர்களது பெயருடன் வெளியிட்டது. இதற்கு ஆதாரமாக இரண்டு நிதி நிறுவனங்களின் ஆவணங்கள் கசிந்தன. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் தொடர்பாக 2013, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக அரசு தனது தேர்தல் அறிக்கையிலேயே கருப்புப் பணத்தை கைப்பற்றி இந்தியர்கள் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் போடுவோம் என்றது.
இத்தகைய சூழலில் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பாக வெளியான விவரங்கள் மத்தியஅரசை இந்த விஷயத்தில் தீவிரமாக ஈடுபட வைத்தது.
கருப்புப் பணத்தை பதுக்கி வைக்க ஊக்குவிக்கும் ஐந்து முக்கிய நாடுகளில் இது தொடர்பாக தகவல் அனுப்பி விசாரிக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகளுக்கு 8 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகள் பதில் அனுப்புவர்.
அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவல் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. ஆனால் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்த இந்தியர்கள் குறித்த ஆவணங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக பிரிட்டிஷ் வர்ஜின் ஐலண்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலானது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. உண்மையிலேயே வெள்ளத்தில் ஆவணங்கள் அடித்துச் செல்லப்பட்டனவா அல்லது கருப்புப் பண முதலைகளின் கை வரிசையா என்ற சந்தேகம் எழுவது இயல்பே.