Published : 26 Nov 2018 11:43 AM
Last Updated : 26 Nov 2018 11:43 AM

ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பறிபோகிறதா?

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உரசல் செய்திகள் உலா வந்து வலுப்பெற்று பொதுவெளியில் கசிந்திருப்பது விரும்பத்தகாத ஒன்று. ரிசர்வ் வங்கி தனது சுய அதிகாரத்தில் அரசின் தலையீடு இருப்பதாக நம்பிவரும் நிலையில், மத்திய அரசு தன் கடமையை செய்வதாக செயல்பட்டு வருகிறது. தன்னாட்சியுடன் இயங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும்  அரசுக்கும் இடையில் நடக்கும் பலப்பரீட்சை ஒன்றும் புதிதல்ல.

காலம் காலமாக பனிப்போராக இருந்த ஊடல் தற்போது பொதுத்தளத்திற்கு வந்துள்ளது, அவ்வளவே. ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் சுதந்திர செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுவதாக கடுமையாக சாடினார். இவரது கருத்து ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ கருத்தாக கருதப்பட்டு சர்ச்சை அதிகமானது. இதன் பின்னணி என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன் ரிசர்வ் வங்கியின் கடமை பொறுப்புகள் மற்றும் மத்திய அரசின் அதிகாரம் என்ன என்று தெரிந்துகொள்வது அவசியம்.

ரிசர்வ் வங்கியின் கடமைகள்

பணவியல் கொள்கையை வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல், நிதிசார் துறைகளை முறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடல், வட்டி விகிதம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல்; உற்பத்தித் துறைகளுக்கு போதுமான அளவு கடன் வழங்குவது. அரசுடைமை வங்கிகளை ரிசர்வ் வங்கி நேரடியாகத் தணிக்கை செய்வது, Prompt Corrective Action(PCA) என்று சொல்லக்கூடிய “உரியகால திருத்த நடவடிக்கை”யின்படி வலுவற்ற வங்கிகளைக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவது, ரொக்கத்தை வணிக வங்கிகளுக்குக் கடனாகத் தந்து, அந்த வட்டியிலிருந்து வருமானம் ஈட்டுவது.

அத்துடன், அரசின் கடன் பத்திரங்களை விற்றும் வருவாய் ஈட்டுவது போன்றவை ரிசர்வ் வங்கியின் பொதுவான செயல்பாடுகள். மேலும் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி ரிசர்வ் வங்கியுடையது. அது அச்சிடும் ரூபாய் நோட்டுகளின் மொத்த முகமதிப்பைக் கூட்டி, அதிலிருந்து அச்சுக்கூலி, கரன்சி விநியோகச் செலவு ஆகியவற்றைக் கழித்தால் கிடைக்கும் தொகை ‘உபரி’ வருமானமாகும்.

இந்த உபரி வருமானத்தில் ஒரு பகுதியைத் தனது அவசரத் தேவைகளுக்காகவும், சொத்து வளர்ச்சி செலவுக்காகவும் ரிசர்வ் வங்கி ஒதுக்கிக்கொள்கிறது. எஞ்சிய ‘உபரி’அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணிகளை செய்ய ரிசர்வ் வங்கிக்கு சுய அதிகாரம் உள்ளது.

அரசின் பொறுப்புகள்

மத்திய அரசின் முனைப்பு நிதிக்கொள்கையான நேர்முக மற்றும் மறைமுக வரி மேலாண்மை மூலம் வரும் வருவாயில் பொருளாதார அபிவிருத்தி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்குதல் போன்ற நாட்டின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துதல் அரசின் முக்கிய கடமை. ரிசர்வ் வங்கி துணையுடன் பணவியல் கொள்கையோடு நிதிக்கொள்கையை செயல்படுத்தும் பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது.

மோதல் ஏன்?

21 உறுப்பினர்கள் கொண்ட மத்திய நிர்வாக குழு என்று சொல்லக்கூடிய Basel III norms-படி  ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. உலகளவில் மூலதன ஆதாய விகிதம் 8% ஆக இருந்து வருகிறது. இது வங்கிகளுக்குள் கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட சீர்திருத்த தொகுப்புகளை அறிமுகப்படுத்தியது. கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், வங்கிகள் முறையான அந்நிய செலவினங்களை பராமரிக்கவும் குறைந்தபட்ச மூலதன தேவைகளை பூர்த்தி செய்யவும் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் ஒவ்வொரு வங்கியும் தாங்கள் கொடுத்த கடனின் தன்மையைப் பொறுத்து Weighted Average Risk முறையில் 9% மூலதன ஆதாய விகிதமாக (Capital Adequacy) வைத்திருக்க வேண்டும். இது குறைந்தால் உடனடியாக அரசாங்கம் போதிய அளவு மூலதனத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். இந்தியன் வங்கி சிக்கலுக்குள்ளானபோது அரசாங்கத்தால் மூலதன ஆதாய விகிதம் புதுப்பிக்கப்பட்டு வலுவான நிலைக்குக் கொண்டுவரப்பட்டது ஓர் உதாரணம்.

அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் சிட்டி வங்கியின் விகிதம் குறைந்த போது தனது வெளிநாட்டு சொத்துகளை விற்று உடனடியாக 9% க்கு கொண்டு வந்தது. ஆகையால், இந்த விகிதத்தை 8% ஆக குறைக்க என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. இவ்வாறு குறைக்கப்படும்போது ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் அதிகமான கையிருப்பை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. ரிசர்வ் வங்கி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

பொதுவாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஒரு குடும்பம் போல செயல்படும் கடமைப்பட்டவர்கள். மத்திய அரசின் நிதிக் கொள்கையும் (fiscal policy) ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கையும் (Monetary Policy) நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை மாட்டு வண்டி போல. எனவே ரிசர்வ் வங்கியும் மத்திய அரசாங்கமும் இணக்கமான ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டு செயல்படும்போது தான் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.

ரிசர்வ் வங்கி எதிர்ப்பார்ப்புகள்:

தனது அதிகார எல்லையில் அரசு தலையிடக்கூடாது என எதிர்ப்பார்க்கும் ரிசர்வ் வங்கி, அரசுடைமை வங்கிகளை மேம்படுத்த தமக்கு மேலும் அதிகாரங்கள் தேவை, வருமானத்தில் அதிக அளவு அரசு கேட்கக்கூடாது மற்றும் கடன் வழங்குவதில் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்று எதிர்ப்பார்க்கிறது. ஆனால், அரசோ ரிசர்வ் வங்கிக்கு வரம்புமீறிய சுதந்திரம் அளிக்கப்பட்டுவிட்டதோ என்று நினைக்கிறது.

அரசின் விருப்பங்கள்

அதிகக் கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க முடியாமல் திணறும் வங்கிகள் விஷயத்தில், உடனடித் திருத்த நடவடிக்கை மேற்கொண்டு கடன் வழங்க கட்டுப்பாடுகளை விதிக்கிறது ரிசர்வ் வங்கி. இது நாட்டின் தொழில் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் விதிமுறைகள் கடுமையானதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு தொழில் துறையினர் அமைப்பு சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க நேரிட்டுள்ளது வேதனையான விஷயம்.

எனவே வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு உதவுவதில் ரிசர்வ் வங்கி தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை இயல்பு நிலைக்குத் திரும்ப, கடன் வழங்குவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் அரசு விரும்புகிறது. ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில், வங்கிகளின் மூலதனத்தை உயர்த்தி, அவற்றின் சொத்து மதிப்பை அதிகரித்து, சந்தையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் மத்திய அரசு விரும்புகிறது. 

ரிசர்வ் வங்கி எங்கே கோட்டை விட்டது

ரிசர்வ் வங்கி தேவையான சமயங்களில் வங்கிகளுக்கு ஆலோசனை சொல்லவும், அவ்வப்போது தணிக்கை செய்யவும், தனது சார்பில் ஒவ்வொரு வங்கியிலும் இயக்குநரை நியமனம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. ரூபாய் மதிப்பின் சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சி, ஐஎல் அண்ட் எப்எஸ் பிரச்சினையால், நிதிச் சந்தையில் குறைந்துள்ள பணப்புழக்கம் போன்ற சமீபத்திய பிரச்சினைகளில், ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் மத்திய அரசு உள்ளது.

மேலும், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற பலருக்கு வங்கிகள் கொடுத்த கடனில் வாராக்கடனாக மாறியவை ஆயிரக்கணக்கான கோடிகள். இவற்றையெல்லாம் ஆரம்பம் முதலே ரிசர்வ் வங்கி செவ்வனே கண்காணித்து, நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது.

தும்பை விட்டுவிட்டு தற்போது வாலைப் பிடிப்பது போல, முன்பே கடன் கொடுப்பதையும், வங்கி மோசடிகளையும் கண்காணிக்காமல் விட்டுவிட்டு இப்போது வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து நெருக்கடி ஏற்படுத்துகிறது.

மத்திய அரசும் இதனை முன்பே கவனித்திருந்தால் தற்போதைய இந்த நடவடிக்கைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டிருக்காது. ரிசர்வ் வங்கி தமது இயக்குநர் குழுவின் அறிவுசார் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசின் தலையீடு அதிகம் இருக்குமானால் அதுவும் சரியல்ல! தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதலில் ஊழியர்களது உற்சாகமும் ஆர்வமும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுய அதிகாரம் பெற்றது என்பதை நிதியமைச்சரும் மறுக்கவில்லை. ஆனால் மாடு மேயும் அளவு கட்டப்பட்ட கயிறின் தூரம் வரையறைக்குள் இருக்கவேண்டும் என்று கருதுகிறார். மேலும் பன்னாட்டுச் சந்தையின் போக்கு, கச்சா எண்ணெய் பொருட்களின் விலை போன்றவை ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் அதுகுறித்த சர்ச்சைகளை தவிர்க்கலாம்.

ரிசர்வ் வங்கியின் தன்னிச்சை முடிவுக்கு மாற்றாக முக்கிய முடிவுகளுக்கு இயக்குநர் குழு, தனித்தனிக்குழுக்கள் தற்போது ஏற்படுத்தப்பட்டதன் மூலம் வெளிப்படைத்தன்மை வழிமுறை ஏற்பட்டுள்ளது.

- karthikeyan.auditor@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x