

சாலையில் எங்குப் பார்த்தாலும் ராயல் என்ஃபீல்டு பைக்காகவே தெரிகிறது. அந்த அளவுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் இளைஞர்களைக் கவர்ந்திருக்கிறது. எத்தனையோ ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதற்குப் போட்டியாக பைக்குகளை உருவாக்கிச் சந்தையில் இறக்கினாலும் ராயல் என்ஃபீல்டு கவர்ச்சிகரமான பிராண்டாகவே தொடர்கிறது. இதற்கு இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப தொடர்ந்து புதுப்புது மாற்றங்களுடன் அம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு தனது தயாரிப்புகளைச் சந்தையில் களமிறக்கிவருவது ஒரு முக்கிய காரணம்.
ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் சமீப காலங்களில் கிளாசிக், தண்டர்பேர்டு ஆகியமாடல்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. ஸ்டைலான கம்பீரமான டிரைவிங் அனுபவத்துக்கு கிளாசிக் உத்தரவாதம்அளிக்கிறது. சுகமான நீண்ட தூரப் பயணங்களுக்கு தண்டர்பேர்டு உத்தரவாதம் தருகிறது. ஆனாலும் இவற்றிலும் வாடிக்கையாளர்களுக்குச் சில பிரச்சினைகள் உள்ளன. தண்டர்பேர்டு பைக்குகளில் இருக்கையின் பின்புறம் இருக்கும் தடுப்பு பெரும்பாலானோருக்குப் பிடிப்பதில்லை. மேலும்இவற்றில் வண்ணங்களின் தேர்வும் குறைவு.
எனவேதான் வாடிக்கையாளர்களின் விருப்பப்படியே ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் என்ற வரிசையில் பைக்குகளைக் களமிறக்கியது. இதில் 350 சிசி, 500 சிசி இரண்டு வேரியன்ட்களுமே உள்ளன.
இவற்றின் பெர்மாமென்ஸ் முந்தைய தண்டர்பேர்டு பைக்குகளைப் போலவேஉள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கேற்ப இதன் பின் இருக்கையில் தடுப்பு நீக்கப்பட்டு, பைக்கின் வடிவம் மேலும் அழகாக்கப்பட்டிருக்கிறது.
கூடவே வண்ணங்களிலும் அழகான தேர்வுகள் உள்ளன. சிவப்பு, ஆரஞ்ச், நீலம் மற்றும் வெள்ளை ஆகிய நான்கு வண்ணங்களில் இந்த தண்டர்பேர்டு எக்ஸ் பைக்குகள் கிடைக்கின்றன. இவற்றில்
இன்ஜின் மற்றும் சைலன்சர் ஆகியவற்றுக்கு முழுவதுமாகக் கருப்பு வண்ண கோட்டிங் கொடுக்கப்பட்டிருப்பது ஸ்போர்ட்டி வடிவத்துடன் வாகனத்தின் அழகை மேலும் கூட்டுகிறது.
மேலும் இதுதான் ராயல் என்ஃபீல்டில் முதன்முதலில் ட்யூப்லஸ் டயர் மற்றும் ஸ்டர்டி அல்லாய் கொண்டதாக உள்ளது.
இதன் ஹேண்டில்பாரும் எளிமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் இந்த மாடல்களை வாங்கியுள்ளனர்.
இதுவரை ராயல் என்ஃபீல்டு பைக்குகள் டிஸ்க் பிரேக்குகளுடன் வந்துகொண்டிருந்தன. தற்போது இந்த தண்டர்பேர்டு 350 எக்ஸ் மாடலில் ஏபிஎஸ் பிரேக் அமைப்பைப் பொருத்தி, தண்டர்பேர்டு 350 எக்ஸ் ஏபிஎஸ் என்ற பெயரில் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
125 சிசி திறனுக்கு மேல் இருக்கும் பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்அமைப்பு இருக்க வேண்டும் என்றுபுதிய விதிமுறையை அரசு கொண்டுவந்திருப்பதால் ஏபிஎஸ் பிரேக் அமைப்புடன் இந்த மாடலை வெளியிட்டுள்ளது. இது சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களிடம் இந்த பைக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜாவா 300, 350 என்ற இரண்டு பைக்குகளை நவம்பர் 15ம் தேதி அறிமுகப்படுத்துவதன் மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் தனது சந்தையை நிறுவ உள்ளது. ஜாவா பைக்குகளுக்கான வரவேற்பு அதிகரிக்கும்பட்சத்தில் அது ராயல் என்ஃபீல்டை பாதிக்கும் வாய்ப்புள்ளது.