இனி ஹோண்டா பிரையோ கிடைக்காது

இனி ஹோண்டா பிரையோ கிடைக்காது
Updated on
1 min read

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது சிறிய ரகக் காரான பிரையோ உற்பத்தியை நிறுத்திவிட்டது. இதனால் இனி இந்நிறுவனத்தின் சிறிய ரக கார் சந்தையில் கிடைக்காது.

மக்கள் பெரும்பாலும் செடான் ரக கார்களுக்கு மாறி வருகின்றனர். சிலரது கவனம் எஸ்யுவி ரக கார்கள் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் சிறிய ரக காரான பிரையோ விற்பனை குறைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த கார் உற்பத்தியை இந்நிறுவனம் நிறுத்திவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 120 கார்களும், செப்டம்பரில் 102 கார்களை மட்டுமே இந்த மாடலில் நிறுவனம் உற்பத்தி செய்தது.

இதனால் பிரையோ மாடலின் புதிய தலைமுறை காரை அறிமுகம் செய்யும் திட்டத்தையும் இந்நிறுவனம் கைவிட்டுவிட்டது.

 ஹோண்டா பிரையோ கார்கள் 2011-ம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போதிருந்து இந்த மாடல் கார்கள் மிகச் சிறப்பாக விற்பனையாயின. ஹாட்ச்பேக் மாடலான இந்த கார் விற்பனை படிப்படியாகக் குறைந்தது. கடந்த ஜூலை மாதத்திலிருந்தே இந்த கார் விற்பனை குறைந்தது. ஒருகட்டத்தில் நாட்டிலேயே மிகக் குறைந்த அளவில் விற்பனையாகும் கார் என்ற நிலைக்கு சரிந்தது. இதையடுத்தே இதன் உற்பத்தியை நிறுத்தும் முடிவுக்கு ஹோண்டா நிறுவனம் வந்தது.

இந்த பிரிவில் மாருதி சுஸுகி ஆல்டோ மிகச் சிறந்த விற்பனையை எட்டியுள்ளது. இதனால் பிரையோ விற்பனை சரிந்துவிட்டது. மாதம் 35 ஆயிரம் மாருதி சுஸுகி ஆல்டோ கார்கள் விற்பனையாகின்றன. ஹோண்டா பிரையோ ஏற்றுமதியும் குறைந்து விட்டது. அக்டோபரில் 440 கார்களை மட்டுமே இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

ஒருவேளை ஹோண்டா பிரையோ காரை வாங்கும் உத்தேசம் இருந்தால் இப்போது அருகிலுள்ள விற்பனையகம் சென்று ஸ்டாக் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். இனிமேல் புதிய பிரையோ கிடைக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in