பொருளாதாரத்தில் ஆர்வம் காட்டும் பொள்ளாச்சி அரசு பள்ளி மாணவிகள்

பொருளாதாரத்தில் ஆர்வம் காட்டும் பொள்ளாச்சி அரசு பள்ளி மாணவிகள்
Updated on
2 min read

‘சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சி? நோபல் பரிசு பெற்ற பொருளாதார ஆய்வுகள் சொல்லும் உண்மை’ என்ற தலைப்பில் அக்டோபர் 15.10.18 அன்று வெளியான வணிகவீதியில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அந்தக் கட்டுரையில் நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்ற வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோரின் ஆய்வுகள் சொல்லும் முக்கியமான விஷயங்களை பேராசிரியர்கள் எல். வெங்கடாசலம், எம்.உமாநாத் இருவரும் எழுதியிருந்தனர்.

இந்தக் கட்டுரைக்கு வந்த கடிதங்கள் எங்களை ஆச்சரியப்படுத்தின. அவற்றில் பெரும்பாலானவை பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு ‘இ’ பிரிவு பொருளியல் பாடப்பிரிவு மாணவிகளின் கடிதங்கள். கடிதங்கள் எழுதுவதே குறைந்துவிட்ட காலத்தில் பள்ளி மாணவிகளிடமிருந்து கடிதங்கள் வந்தது சாதாரண விஷயமல்ல என்பதால் பள்ளியைத் தொடர்புகொண்டு விசாரித்தோம்.

“10 ஆண்டுகளாக படிக்காத பாடங்களில் ஒன்றான பொருளியல் பாடத்தை புதிதாகப் படித்து புரிந்து கொள்வது எங்களுக்கு கடினமானதாக இருந்தது. ஆனால், பொருளியல் பாடங்களில் உள்ள கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகள் ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி பகுதியில் வெளியாகின்றன.

இந்த கட்டுரைகள் எங்களை போன்ற பள்ளி மாணவிகளும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய வாக்கிய அமைப்புகளில் இருப்பதால் எங்களுடைய பொருளியல் பாட ஆசிரியர் பா. சம்பத்குமார் வணிகவீதி பகுதியில் வரக்கூடிய கட்டுரைகளை வாசிக்க எங்களை ஊக்கப்படுத்தி வந்தார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சி திட்டங்களே நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என பொருளியல் ஆசிரியர் எங்களிடம் கூறுவார். அதே கருத்தே உடைய கட்டுரை வணிக வீதி பகுதியில் வெளியானது.

அந்த கட்டுரை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சி கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் எல்.வெங்கடாசலம் 11-ம் வகுப்பு பொருளியல் பாடநூல் மேல்ஆய்வாளர் ஆக இருந்துள்ளார்.

இரு பேராசிரியர்களும் நோபல் பரிசு பெற்ற ஆய்வுகளில் சொல்லப்பட்ட அவசியமான விஷயங்களைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தனர். இன்றைய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் கொடுத்து தொழிற்சாலைகளை உருவாக்கி வருகின்றன. மறுபுறம் உலக வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் கூடி விவாதித்து வருகின்றனர்.

இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. வளர்ச்சி எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு சுற்றுச்சூழலின் சமநிலையைப் பாதுகாப்பதும் அவசியம். அதுவே நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சுற்றுச்சூழலை பாதிக்காத பொருளாதார வளர்ச்சி திட்டங்களை வருங்காலங்களில் அனைத்து நாடுகளும் முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரை உணர்த்தியது” என்று அந்த மாணவிகள் கூறினர்.

கடிதங்களில் மாணவிகள் குறிப்பிட்டிருந்த கருத்துகள் சில:

பொருளியலை வெறும் பாடமாக மட்டுமே நினைத்திருந்தேன். பொருளியல் ஆய்வு மனித வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை அறிந்தேன் - வி.எம்.புவனேஸ்வரி

கட்டுரையைப் படிக்கும்போது அவர்களைப் போலவே பொருளாதார அறிஞர்களாக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது - வெ.சத்தியப்பிரியா

சந்தை நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன் - ச. விஜயலட்சுமி

பொருளாதாரத்தில் தெரியாத பல விஷயங்களை இந்தக் கட்டுரை மூலம் தெரிந்துகொண்டேன் - ரா.நிவேதா

புவி வெப்பமடைதலுக்கு பொருளாதாரம் எந்த வகையில் காரணமாக இருக்கிறது. அதற்கு தீர்வு என்ன என்பது தெளிவாக விளக்கப்பட்டிருந்தது - எஸ். நிஷாரா

பொருளாதாரத்தின் முக்கிய நோக்கம் தனிமனிதனின் உரிமையை மேம்படுத்துவதே தவிர, உரிமையைப் பறிப்பது அல்ல என்பதை உணர்த்தியது - அ.ஸ்ரீ தீபா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in