அலசல்: முடிவுக்கு வரும் ராணா கபூரின் பதவி

அலசல்: முடிவுக்கு வரும் ராணா கபூரின் பதவி
Updated on
2 min read

யெஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான ராணா கபூரின் பதவி காலத்தை  நீட்டிக்க முடியாது என ரிசர்வ் வங்கி கறார் காட்டிவிட்டது. பலமுறை  கோரிக்கைகள் வைத்தும், பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து புதிய தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறிவிட்டது. 

இதை வங்கி ஏற்றுக் கொண்டுள்ளதுடன்,   மீதமுள்ள இந்த நாட்களுக்குள் புதியவரை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டது. ராணா கபூரின் சமீபத்திய ட்விட்டர் பதிவில், ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. 

நான் பொறுப்பில் இருந்து சென்றாலும், வங்கியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து எனது பங்களிப்பை வழங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார். யெஸ் வங்கி இயக்குநர் குழுவும், முதலீட்டாளர்களும் விரும்பினாலும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அவரது பதவி நீட்டிப்பை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஆறு மாதங்களில் யெஸ் வங்கியின் பங்குகள் கடகடவென சரிந்துள்ளன.

வங்கியின் செயல்பாடுகள் ஸ்திரமாக இருக்கும் நிலையில், ராணா கபூரை நம்பியே நிர்வாகம் இருப்பதாக நம்புவது முதலீட்டாளர்களின் குழப்பத்துக்கு காரணம். குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தால் முதலீட்டாளர்களுக்கு இந்த இழப்பு வந்திருக்காது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்  யெஸ் வங்கிக்கு மட்டுமல்ல, அனைத்து வங்கிகளுக்கும் பொதுவானது. வங்கிகளில் நடக்கும் ஊழலை தடுக்கும் முயற்சியாக, இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி கடுமையாக நடந்து கொள்கிறது.

ராணா கபூரின் நீண்ட கால திட்டங்களால்தான் வங்கியின் இதுநாள் வரையிலான வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 2004-ம் ஆண்டில் தனது மைத்துனர் அசோக் கபூருடன் இணைந்து வங்கியை தொடங்கியதில் இருந்து அவரது உழைப்பு உள்ளது. ஆனால் அந்த உரிமையே வங்கியின் வளர்ச்சிக்கு எதிராகவும் உள்ளது.

அதேநேரத்தில் தனக்கு பின்னால் பொறுப்புக்கு வருபவர்கள்  நிறுவனத்தின் வளர்ச்சியை தக்கவைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லா நிறுவனர்களுக்கும் இருக்கவே செய்கிறது. அதனால்தான் பதவி நீட்டிப்பை எதிர்பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, டாடா குடும்பத்தின் ரத்தன் டாடா போன்றவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

தங்களது பதவி காலத்துக்குப் பின்னர் புதியவர்களுக்கு வழிவிட்டவர்கள் இவர்கள். அதேநேரத்தில் புதியவர்களை சுதந்திரமாக வேலைபார்க்க விடவில்லை என்கிற விமர்சனத்துக்கும் இவர்களே முன்னுதாரணம். நாராயணமூர்த்தி மீது நிறுவனத்தின் உள் விவகாரங்களில் தலையிடுகிறார் என்கிற கருத்து தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. அதுபோல பாலோன்ஜி குழுமத்தின் சைரஸ் மிஸ்திரியை, டாடா சன்ஸ் தலைவராக்கினார் ரத்தன் டாடா.

ஆனால் அவரை சுதந்திரமாக முடிவெடுக்கவிடவில்லை என சர்ச்சையானது. பின்னர் மிஸ்திரி ஒரேநாளில் வெளியேற்றப்பட்டார். இப்படியாக பதவி காலத்துக்கு பின்னரும் நிறுவனர் தலைவர்களின் ஆதிக்கம் நீடிக்கிறது. நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவதற்கு வெளியிலிருந்து ஆலோசனைகள் அளிக்கலாம். தங்கள் சொல்படி நடப்பவர்கள்தான் நிறுவனத்தை வழிநடத்த வேண்டும் என எதிர்பார்க்கும்போதுதான் குழப்பம் ஏற்படுகிறது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை நம்பி பல ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளனர். இவர்களின் முதலீட்டுக்கு ஓய்வுபெற்றவர்கள் பொறுப்பாக முடியாது. அதேநேரத்தில் திறமையாக செயல்படும் தலைவர்களுக்கு குறுகியகாலகட்டம்  போதுமானதல்ல என்கிற கருத்தும் சந்தையில் உள்ளது.

மூன்றாண்டுகள் பதவி காலத்தில், நிறுவனத்தை புரிந்து கொள்ளவே ஒருவருடம் ஆகிவிடும். கடைசி ஆறு மாதங்களில் எந்த முடிவும் எடுக்க முடியாது. இடைப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில் சிறப்பாக பங்களிப்பை செலுத்த வேண்டிய நெருக்கடி புதிய தலைவர்களுக்கு உள்ளது. இதையும் ரிசர்வ் வங்கி கவனிக்க வேண்டும் என்கிற கருத்து உள்ளது.

அதாவது திறமையாக செயல்படும் தலைமைக்கு கூடுதல் வாய்ப்பு வழங்குவது சரியானதாகவே இருக்கும் என்கின்றனர். இப்போதைக்கு ராணா கபூருக்கு பதவிநீட்டிப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனினும் அவரது தலையீடு இருக்கும் என நம்பலாம். அது யெஸ் வங்கியை வளர்க்குமா? வீழ்த்துமா என்பது இனிவரும் ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in