

சுற்றுச் சூழல் மாசுபாட்டில் வாகன புகை மாசு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வர்த்தக வாகனங்களான லாரிகள் மிக அதிக அளவில் புகையை வெளியிட்டு சுற்றுச் சூழலை பாதிக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகான வாகனங்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான அரசின் பரிந்துரை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இப்புதிய திட்டம் 2020-ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்படி 2000-வது ஆண்டில் தயாரான வாகனங்களை 2020-க்குப் பிறகு சாலைகளில் இயக்க முடியாது.
பழைய வாகனங்களை அழிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு 2020-ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வர உள்ளது. இதன்படி 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு சாலையிலிருந்து ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2000-வது ஆண்டில் பதிவு பெற்ற வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை 7 லட்சமாகும். இவற்றில் 2 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே மானிய உதவி அளித்து புதிய வாகனங்கள் வாங்க சலுகை அளிக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விதம் 2000-வது ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்ட வர்த்தக வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்குவோருக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சலுகை அளிப்பது என்றும் பழைய இரும்புக்கு நியாயமான விலை அளிப்பது என்றும், வாகன உற்பத்தியாளரிடமிருந்து அதிகபட்ச சலுகையை புதிய வாகனம் வாங்குவோருக்கு பெற்றுத் தரவும் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகைய சலுகைகளால் புதிய வாகன விலையில் 15 சதவீத அளவுக்கு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொள்கை முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அப்போதுதான் ஜிஎஸ்டி சலுகை கிடைக்கும். 2016-ம் ஆண்டில் மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகம் இந்த வரைவு கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. அப்போது 15 ஆண்டு பழமையான வாகனங்களை ஓரங்கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. தற்போது 20 ஆண்டு ஆன வாகனங்களுக்கு ஓய்வளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறையில் புதிய வாகனம் வாங்க விரும்புவோர் தங்களது பழைய வாகனம் மற்றும் அதற்குரிய ஆவணங்களை பழைய வாகனங்கள் அழிக்கும் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். அவை பரிசீலிக்கப்பட்டு அந்த வாகனத்துக்கு பழைய இரும்பு விலை குறித்த விவரம் அளிக்கப்படும். அந்த சான்றிதழை கொண்டு புதிய வாகனம் வாங்கும்போது வரிச் சலுகை உள்ளிட்டவற்றை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகன புகை மாசைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் பலமுயற்சிகளில் இந்த முயற்சி ஓரளவு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.