

முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டெய்ம்லர் சீனாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்காக சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சீனாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இதற்கான முயற்சியில் இறங்குகிறது.
சீனாவின் மிகப் பெரிய சந்தையை குறிவைத்து ஜெர்மனியின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டெய்ம்லர் களமிறங்கியுள்ளது. சீனாவை சேர்ந்த பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் குழுமத்துடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான பெய்ஜிங் எலெக்ட்ரிக் வெகிக்கிள் என்கிற நிறுவனத்துடன் எலெக்ட்ரிக் வாகனம் உருவாக்கத்துக்காக கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலம் இரண்டு இருக்கைகள் கொண்ட ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க டெய்ம்லர் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பார்க்கிங் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பு சீனாவிலும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் பார்க்கிங் சிக்கல் இல்லாத சிறிய ரக எலெக்ட்ரிக் கார்கள் சீனாவின் நகர்ப்புற சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் சந்தையில் கணிசமான சந்தையை பிடிக்கும் உத்திகளை வகுத்து வருகிறது. இதற்கான அறிகுறியாக கடந்த மே மாத சீன நிறுவனத்தின் முன்னணி அதிகாரிகளை மாற்றியது. தவிர மார்ச் மாதத்தில் பீஜிங் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளையும் வாங்கியது.
சீனாவில் குறிப்பிடத்தக்க அளவு பங்குகளை வாங்குவதில் இருந்த கட்டுப்பாடுகளில் தற்போது சீன அரசு தளர்வு செய்துள்ளது. குறிப்பாக வாகன உற்பத்தி துறையில் 50 சதவீத பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் வாங்க அனுமதி அளித்துள்ளது. இதனால் டெய்ம்லர் நிறுவனம் புதிய நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது. தற்போதுவரை இந்த ஸ்மார்ட் காருக்கான பெயரை அறிவிக்கவில்லை.
2020-ல் வர்த்தக ரீதியான விற்பனைக்கு வரும் என்கிற எதிரபார்ப்பு உள்ளது. புகை மாசுவுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையை வழிநடத்தும் நாடாகவும் சீனா உருவாகியுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் 70 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை இலக்கு வைத்துள்ளது. இதனால் டெய்ம்லருக்கான சந்தை பிரகாசமாக உள்ளது.