

இஸுசு மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது.
2012-ம் ஆண்டில் தனது தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கியது. ஆனால் 2016-ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் ஆலை அமைத்து உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலை 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ சிட்டி ஆலையில் தற்போது டி மாக்ஸ் வி கிராஸ் எனப்படும் பிக்-அப் வாகனமும் எம்யு-எக்ஸ் என்ற எஸ்யுவி வாகனமும் தயாரிக்கப்படுகின்றன. உற்பத்தி தொடங்கிய முதல் ஆண்டிலேயே நிறுவனம் தயாரித்த அனைத்து வாகனமும் விற்பனையாகிவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் 12 ஆயிரம் வாகனங்களை இந்தியச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இவற்றில் 10 ஆயிரம் வாகனங்கள் ஸ்ரீ சிட்டியில் தயாரானவை என்று நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கென் தகஷிமா தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸை இந்நிறுவனம் விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் வி-கிராஸ் மாடலை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சாகச பயணம், நீண்ட தூர பயணம் மேற்கொள்வோருக்கு ஏற்ற வகையிலான வாகனம் இதுவாகும். இந்தியாவில் தற்போது பிக்-அப் வாகனங்களுக்கான தேவை மற்றும் உபயோகம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய சந்தையில் தங்களது விற்பனை அதிகரிக்க முடியும் என்று இந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது. இதற்கு ஜான்டி ரோட்ஸுடனான விளம்பர ஒப்பந்தம் வழி வகுக்கும் என்று தகஷிமா கூறுகிறார். இந்தியாவில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் முக்கியமான நகரங்களில் 34 விற்பனையகங்களை இந்நிறுவனம் அமைத்துள்ளது.
ஜப்பான் உள்பட 25 நாடுகளில் ஆலை அமைத்து செயல்படுகிறது இஸுசு. இந்நிறுவனத் தயாரிப்புகள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகின்றன. உலகம் முழுவதும் இந்நிறுவன தயாரிப்புகளின் விற்பனை ஆண்டுக்கு 6 லட்சமாகும்.