

இன்று வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பெரிதாகப் பேசப்படுவது Risk Management.
உதாரணமாக, வங்கி கொடுக்கும் கடன்கள் திருப்பிக் கட்டப்படலாம், அல்லது அவற்றில் சில திரும்பக் கட்டப்படாமலேயே போகலாம். இது Credit Risk அல்லது கடன் கொடுப்பதில் உள்ள இடர் அல்லது ஆபத்து எனப்படுகிறது. இந்த இடர்ப்பாடுகளை அடையாளம் காண்பது, வகைப்படுத்துவது என அது ஒரு தனி விஞ்ஞானமாக வளர்ந்து வருகின்றது.
வங்கியில் வாடிக்கையாளருக்குக் கணக்குத் திறப்பதிலும் பணம் பட்டுவாடா செய்வதிலும் கூட சில ஆபத்துகள் இருக்கும் அல்லவா? ஆமாம் மோசடிப் பேர்வழிகளுக்கு, சரியாக விசாரிக்காமல் கணக்குத் திறந்தால், அல்லது பணத்தை கிளைக்கு எடுத்து வரும் பொழுது அது கொள்ளை போனால்..? இந்த வகையான இடர்ப்பாடுகளை, அபாயங்களை operations risk என்கிறார்கள்.
வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தையும் ஆராய்ந்து, அவற்றில் உள்ள வெவ்வேறு அபாயங்களை இனம் கண்டு, அத்தகைய அபாயங்களைக் கூடுமானவரை குறைப்பதற்கும், முடிந்தால் அவற்றை முற்றிலுமாக நீக்கி விடுவதற்கும் (Risk mitigation) ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
நாம் போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையைக் கடப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஓர் அபாயம் இருக்கத் தான் செய்யும். வேகமாகச் செல்லும் வண்டியில் நாம் அடிபடலாம். அது ஓர் அபாயம் (risk). ஆனால் சாலையின் இருபுறமும் பார்த்து வண்டிகள் வராத பொழுது சாலையைக் கடப்பது அதற்கான உபாயம் (risk mitigation).
ஐயா, வங்கிகளிலும் இதே கதை தான். நாம் சாலையைக் கடக்காமல் இருக்க முடியாது. வங்கிகள் கடன் கொடுக்காமல் இருக்க முடியாது. நாம் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து சாலையைக் கடப்பது போல வங்கிகள் விண்ணப்பதாரரின் பின்புலத்தை ஆராய்ந்து, எதிர்காலத்தில் அவரால் கடனைத் திருப்பிக் கட்ட முடியுமா, கட்டுவாரா என ஆராய்ந்து கடன் கொடுக்க வேண்டும்!
நமது தனிமனித வாழ்விலும் இதைப் போலத் தானே? நம்மில் அநேகமாக எல்லோருமே ஆயுள் காப்பீடு எடுத்து இருப்போம்.இது ஒரு விதமான அபாயத் தடுப்பு. அதாவது ஒருவரது இறப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார நட்டங்களுக்கான பாதுகாப்பு. வீட்டுக் கடன் வாங்கியவர்கள் தீ, வெள்ளம் போன்ற பேரிடர்களின் நட்டங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பொதுக் காப்பீடு எடுப்பதும் இதைச் சார்ந்தது தானே.
நிதி சார்ந்த விஷயங்களில் விரிவாகப் பாதுகாப்புத் தேடும் நாம், மற்ற விஷயங்களில் அதைப் போல வரக்கூடிய, வரப்போகும் அபாயங்களை யோசித்துப் பார்ப்பதும் இல்லை.அதற்கான முன்னேற்பாடுகளை முறையாகச் செய்வதும் இல்லை.
தம்பி, குளத்தின் கடைசிப் படிகளில் பாசி நிறைய இருக்கும். வழுக்கும்.எனவே எச்சரிக்கையாய் இறங்கணும்.
‘ஒரு சிக்கலை அது அவசர ஆபத்தாக உருவெடுக்கும் முன்பே அடையாளம் கண்டு கொள்வது தான் தலைமைத் திறனுக்கான அளவுகோல் ' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் ஆர்னால்டு கிளாஸோ.
இதையே நம்ம வள்ளுவர், வருமுன் காவாதான் வாழ்க்கை எரியும் நெருப்பின் முன்னே வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல எரிந்து நாசமாகி விடும் என்கிறார். ஐயா,ஒரு சதுரங்கப் பலகையில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்? 8×8= 64 என்று சொன்னால், சரியல்லவே!
அதில் உள்ள சின்னச் சதுரம் முதல் மிகப் பெரிய சதுரமான அந்த முழுச் சதுரம் வரை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ( 8×8) +(7×7)+ (6×6)+..... +(1×1)=204 சதுரங்கள் அல்லவா இருக்கும்?) நம் அன்றாட வாழ்க்கையிலும் அப்படித் தானே? பிரச்சினைகள் என்று வரும் பொழுது, அதற்கான தீர்வு வெவ்வேறு வகைப்படும்.ஆனால் அவை எல்லோர் கண்ணுக்கும் புலப்படாது. மாத்தி யோசிப்பவர்களுக்குத் தான் அந்த வழிகள் தெரியும். வேறு சில கெட்டிக்காரர்கள், அதாங்க, காரியச் சமர்த்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரக்ககூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே மோப்பம் பிடித்து விடுவார்கள்.
அரசியலில் மட்டுமல்ல அலுவலகங்களிலும் சகஜமப்பா! `பேரழிவு தாக்கும் பொழுது, அதைச் சமாளிக்கும் ஏற்பாடுகளைச் செய்யும் காலம் கடந்து போயிருக்கும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ' என ஸ்டீவன் ஸைரோஸ் சொல்வது சிந்திக்க வேண்டியது.
`எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வும், கூரிய அறிவும் உடையவன் என்றும் மகிழ்ச்சியாக இருப்பான். இதற்கு மாறாக, ஒன்றும் செய்யாமல் நல்ல காலம் வருமென்று காத்திருப்பவன் தன் வாழ்க்கையைத் தானே அழித்துக் கொள்வான் ' என்கிறார் சாணக்கியர்.
உண்மை தானே? நல்லதே நடக்கும் என நம்பலாம். ஆனால் கெட்டது எதுவும் நடந்து விடாமல் தடுக்க, வேண்டியன செய்ய வேண்டுமல்லவா?அப்படி மீறி நடந்து விட்டால் என்ன செய்வது என்பதை முன்னதாகவே யோசித்து இருக்கவும் வேண்டுமில்லையா?
-