

ஆப்பிள் நிறுவனம் 1 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பினை எட்டியுள்ளது. பட்டியலிடப்பட்ட அமெரிக்க நிறுவனங்களில் இந்த இலக்கை எட்டிய முதல் நிறுவனம் ஆப்பிள் என்கிற சாதனை இதன் மூலம் நிகழ்ந்துள்ளது. நியூயார்க் சந்தையில் பட்டியலிட்டுள்ள ஆப்பிள் பங்குகள் 207.39 டாலர் என்கிற அதிகபட்ச விலையை எட்டியது. இதன் மூலம் வரலாற்று சாதனையை ஆப்பிள் எட்டியுள்ளது.
ஜூன் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம் இருந்தது. எனினும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த இலக்கு எளிதாக எட்டப்பட்டதல்ல. சிலிகான்வேலியில் அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்த போட்டியில் உள்ளன என்பதை கவனிக்க வேண்டும்.
முதன் முதலில் ஆப்பிள் நிறுவனம் 2007-ம் ஆண்டில் போன் சந்தையில் நுழைந்தது. அன்று முதல் நாலுகால் பாய்ச்சலில் ஏற்றம்தான். அந்த ஆண்டில் 1,100 சதவீத வளர்ச்சி. அதிலிருந்து மூன்று மடங்கு வளர்ச்சியை கடந்த ஆண்டில் எட்டியுள்ளது. 1980-ம் ஆண்டில் நிறுவனம் பட்டியலிட்ட பிறகு சில ஆண்டுகளில் அதன் வளர்ச்சி ஆச்சர்யமூட்டும் வகையில் இருந்தது. எஸ் அண்ட் பி 500 பட்டியலில் ஆச்சர்யமூட்டும் வகையில் இடம்பெற்றது.
உண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த சாதனைகள் எல்லாம் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் நிகழ்ந்ததில்லை. 1976-ம் ஆண்டு மேக் கணினிக்காக அவர் மேற்கொண்ட உழைப்புதான் ஸ்மார்ட்போன் சந்தைக்கும் பாதையை திறந்தது. 2011-ம் ஆண்டு ஜாப்ஸ் மறைந்த பின்னர் பொறுப்புக்கு வந்தவர் டிம் குக். டிம் நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமல்ல, ஐபோனிலும் அடுத்தடுத்த மாற்றங்களை கொண்டு வந்து நிறுவனத்தின் மரபை தக்க வைத்தார்.
2006-ம் ஆண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 2000 கோடி டாலர்தான். லாபம் 200 கோடி டாலர். 2017-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை 22900 கோடி டாலர். லாபம் மட்டும் 4840 கோடி டாலர். பட்டியலிடப்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் ஆப்பிள்தான். இதற்கு முன்னர் உலக அளவில் 1 லட்சம் டாலர் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம் சீனாவின் பெட்ரோசீனா. ஆனால் இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை சீன அரசு வைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம் அதன் தொழில்நுட்ப பலம். வடிவமைப்பிலும், சமரசம் செய்து கொள்ளாத தொழில்நுட்ப சாத்தியங்களையும் ஆப்பிள் நிகழ்த்துகிறது. இதற்கு ஸ்டீவ் ஆதாரமாக இருந்தார். இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றவர் டிம் குக் என்பதையும் மறுக்க முடியாது.
இதர டெக்னாலஜி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தபோதுகூட ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஐபோன் மீதான எதிர்பார்ப்பினை மக்களிடம் உருவாக்கியதுதான். ஆப்பிள் போன் வெளியாகும் ஒவ்வொரு முறையும் அந்த வெர்ஷனில் உள்ள சிறப்புகள் என்ன என அறிவதற்காக உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. இரண்டாவதாக கணிக்க முடியாத பல கருவிகளையும் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அதன் வருமானம் பல தொழில்நுட்பங்களில் இருந்தும் வருகிறது. செயலிகள் விற்பனை, நினைவக சேமிப்பு போன்றவை மூலம் ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 1000 கோடி டாலர் வருமானம் ஈட்டுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் ஐபோன் புதிய மாடல் வெளியாக உள்ளது. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். எனினும் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ந்து வருகிறது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் வரும் காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் குறையலாம். அதனால் என்ன? இந்த போட்டிகள் எதுவும் ஆப்பிளை ஒன்றும் செய்யாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஆப்பிளின் தயாரிப்புகள் உலகை மாற்றும் தொழில்நுட்பம். இப்போது சந்தை மதிப்பிலும் ஆப்பிள் வரலாற்றினை தொட்டுள்ளது.