பேட்டரி காருக்கு ரூ. 1.4 லட்சம் மானியம்?

பேட்டரி காருக்கு ரூ. 1.4 லட்சம் மானியம்?
Updated on
1 min read

சுற்றுச் சூழலை காக்கும் நோக்கில் பேட்டரியில் இயங்கும் கார்களுக்கு அரசு ரூ. 1.4 லட்சம் வரை மானியம் அளிக்க முன்வந்துள்ளது. இந்த மானியத்தை கார் வாங்கும் வாடிக்கையாளருக்கு அரசே நேரடியாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோக்களுக்கும் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர உயர் விலையிலான கார்களுக்கு ரூ. 4 லட்சம் வரை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  தற்போது பேட்டரியில் இயங்கும் கார்களை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த காரின் விலையில் அதிகபட்சம் 20 சதவீதம் வரை அல்லது ரூ. 1.4 லட்சம் வரை மானியம் அளிக்க முடிவு செய்துள்ளது.

செயலர் ஏ.என். ஜா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரம் மிக்க குழு கூட்டத்தில் இந்த முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டுள்ளது. ஃபேம் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின்படி ஹைபிரிட் கார்கள் மற்றும்பேட்டரியில் இயங்கும் லாரிகளுக்கு இத்தகைய சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் மானியம் அளிப்பதற்கு ரூ. 5,500 கோடியை ஒதுக்கவும் இந்தக் குழுஅரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.  பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு கொண்டு வந்த ஃபேம் 1 திட்டத்துக்கு முன்னர் ரூ. 700கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இதைவிட 8 மடங்கு தொகை கூடுதலாக ஃபேம் 2 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலில் எலெக்ட்ரிக் சார்ஜிங் மையம் அமைக்க முதலீடு செய்வது என்றும், பேட்டரி வாகனங்களுக்கு மானியம் வழங்குவதென்றும் முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அரசு பஸ்களுக்கு மட்டும் மானியம் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோவாட் பேட்டரி வாகனத்துக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் மானியம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது செயல்படும் பேட்டரி கார்கள் 14 கிலோவாட் திறன் கொண்டவை. இதனால் இவற்றுக்கு ரூ. 1.40 லட்சம் மானியம் கிடைக்கும். அரசு நேரடியாக மானியம் அளிப்பதால் பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in