

சில பள்ளிப் பிள்ளைகள் பள்ளிக்கு அணிந்து செல்லும் சீருடைகளைப் பார்த்தால், அவை அவர்களுக்குப் போதவில்லை என்பது தெரியும். காரணம், பிள்ளைகள் வேகமாக வளர்கிறார்கள். அதேநேரம் பெரியோர்களுக்கு வாங்கிய சட்டைகள், ரவிக்கைகள் சில பல ஆண்டுகளுக்குக் கூட அளவு சரியாக இருக்கும். காரணம், அவர்களுடைய உடல் வளர்ச்சி வேகம் குறிப்பிட்ட வயதுக்குப் பின் குறைந்து விடுகிறது. பிள்ளைகள் அளவுக்கு பெரியவர்களின் உயரமும் எடையும் மிக வேகமாக அதிகரிக்காது.
போதாத சட்டைகள் அழகு இல்லை என்பது தவிர, அசவுகர்யமும் கூட. கையை காலைத் தூக்கினால் தையல் பிரிந்து விடும். தையல் வலுவாக இருந்தால் துணி கிழிந்து விடும். வருமானம் என்பது அணியும் ஆடைகளைப் போன்றது. செலவு என்பது வளரும் பிள்ளைகளைப் போன்றது. என் தேவைகளை அப்படியே வைத்திருக்கிறேன் என்று எவராலும் சொல்ல இயலாது.