வணிக வீதி
கூகுள் க்ரோமுக்கு சவால் விடும் தமிழரின் காமெட்
நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் அதுவரை கேள்விப்படாத ஒரு விஷயத்தைச் சொல்கிறார். உடனே, 'எனக்கு அதைப்பத்தி அவ்வளவாகத் தெரியாது. அப்புறமா அதைக் கூகுள் செய்து பார்க்கிறேன்' என்கிறோம். இங்கு ‘கூகுள் செய்தல்' என்பதன் உண்மைப்பொருள், ‘தேடுதல்' என்பதுதான். பழம் என்றாலே வாழைப் பழம் என்பதுபோல், தேடுதல் என்றாலே கூகுள்தான் என்கிற அளவுக்கு நம் இணைய அனுபவத்தில் அந்த நிறுவனம் இரண்டறக் கலந்துவிட்டது.
தேடல் மட்டுமா? வீடியோ என்றால் யூடியூப், வரைபடங்கள் என்றால் கூகுள் மேப்ஸ், இணையத்தில் உலாவுதல் என்றால் கூகுள் க்ரோம், மொபைல் தொலைபேசி என்றால் ஆண்ட்ராய்ட் என்று இணையம், தொழில்நுட்பம் தொடர்பான பலப்பல வேலைகளில் கூகுள் மிகப்பெரிய சந்தைப் பங்கைப் பெற்றுவிட்டது.
