

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் முதல் முறை பதவி வகித்த (2017-2021) காலத்தில் இந்தியாவுடனான உறவு மேலும் வலுவடைந்தது. குறிப்பாக ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி இடையே நெருக்கமான நட்பு இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அப்போது டெக்சாஸ் மாகாணம் ஹுஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' என்ற பெயரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ட்ரம்பும் மோடியும் பங்கேற்றனர். இதுபோல, 2020-ல் ட்ரம்ப் இந்தியா வந்தார். அப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 'நமஸ்தே ட்ரம்ப்' என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மோடியும் ட்ரம்பும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிகளில் பேசிய ட்ரம்ப், இந்தியாவின் 'ஒற்றுமையில் பன்முகத்தன்மை' என்ற கோட்பாடு உலகுக்கு ஊக்கமளிக்கும் என்று புகழ்ந்தார்.
கடந்த ஜனவரி மாதம் ட்ரம்ப் 2-வது முறையாக அதிபரானார். இதனால் அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மோடி எனது சிறந்த நண்பர் என ட்ரம்ப் அடிக்கடி கூறி வந்தார்.