

இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருள்கள் (எப்எம்சிஜி) சந்தையில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மந்த நிலையில் இருந்த இந்தத் துறை சூடு பிடிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. 2023-ம் ஆண்டில் 230.14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இருந்த எப்எம்சிஜி வணிகம், 2030-ம் ஆண்டில் 1288.50 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொடும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் 2024 முதல் 2030 வரை 27.9% என்ற அசாதாரணமான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) எளிதாக எட்டி விடலாம்.
இதற்கு பல அடிப்படை காரணிகள் உள்ளன. வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், வேகமான நகர் மயமாக்கல், அதிகரித்து வரும் செலவழிக்க கூடிய வருமானம் ஆகியவை இதில் முக்கிய பங்கு வைக்கின்றன. உணவுப் பொருட்கள், பானங்கள், தனிப்பட்ட பராமரிப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள், உடல்நலம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.