

இந்திய பங்குச் சந்தையில் சமீப காலமாக நிப்டி இந்தியா டிபென்ஸ் இண்டெக்ஸ் (Nifty India Defence Index) மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. 2025 பிப்ரவரியிலிருந்து இத்துறையின் சந்தை மதிப்பு 50% அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வளர்ச்சி எதிர்பார்ப்பையும் காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை பங்குகள் பல மடங்கு வருமானம் வழங்கியுள்ளன. சில பங்குகள் ஐந்து ஆண்டுகளில் 13 மடங்கு உயர்ந்துள்ளன. இந்நிலையில், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் பாதுகாப்புத் துறையில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உயர்வுக்கான காரணங்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
குறுகிய கால வளர்ச்சிக்கு காரணம்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இத்துறையில் நேர்மறை உணர்வு ஏற்பட்டது. அவசரமாக ரூ.40,000 கோடிமதிப்பில் டிரோன்கள், வெடிகுண்டுகள், ஏவுகணைகள் மற்றும் ராடார்களை வாங்க பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்தது. அவசர கொள்முதல் விதிகளின்படி, ஒப்பந்தங்களை 40 நாட்களில் முடிக்க வேண்டும்; ஓராண்டுக்குள் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் நன்மை பெறுகின்றன.