

சர்வதேச நிதி சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவும் போதெல்லாம் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடாக விளங்குவது அமெரிக்க அரசின் கருவூல பத்திரங்கள் ஆகும். உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர்டொனால்டு ட்ரம்ப் தனது வர்த்தகப் போரை தொடங்கியதற்கு பிறகு அமெரிக்காவின் பங்கு சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியிலிருந்து தங்களது முதலீடுகளை பாதுகாக்க அந்நாட்டு கருவூல பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர் மாறாக முதலீட்டாளர்கள் தங்களிடமிருந்த கருவூல பத்திரங்களை அதிக அளவில் விற்பனை செய்தனர்.
கருவூல பத்திரங்களின் வலிமை: பட்ஜெட் செலவுகளை மேற்கொள்ளவும் அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை மற்றும் கடன்களை சமாளிக்கவும் அமெரிக்க அரசு கருவூலத் துறையின் பத்திரங்களை வெளியிடுகிறது. உலக முதலீட்டாளர்கள் இந்த பத்திரங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு முக்கிய காரணம், இவை டாலர் மதிப்பில் வெளியிடப்படுவதே ஆகும்.