

பணி ஓய்வு பெற்றபிறகு பொருளீட்டும் வாய்ப்புகள் குறைவதால் தனிநபரின் வாழ்வில் பொருளாதார சிக்கல்கள் ஏற்படுவதைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட முக்கியமான சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம்(பிஎப்). ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைத் தொடர்ந்து குறைத்து வருகிறது இபிஎப்ஓ அமைப்பு. 2015-16 ஆண்டு காலத்தில் பிஎப் தொகைக்கு 8.8 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது.
2016-17 காலகட்டத்தில் இது 8.65 சதவீதமாகவும், 2017-18 காலகட்டத்தில் 8.55 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. வட்டி விகிதம் இப்படி ஆண்டுதோறும் குறைந்துகொண்டிருப்பது ஒருபுறமென்றால் சில நிறுவனங்கள் பிஎப் தொகைக்கு கடந்த சில ஆண்டுகளாக வட்டியே அளிப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
வருமான வரி சட்டத்தின்படி குறிப்பிட்ட சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகையை தாங்களே கையாளும் வகையில் பிஎப் அறக்கட்டளையை அமைத்துக்கொள்ள இபிஎப்ஓ அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் சுமார் 3,805 நிறுவனங்களுக்கு இத்தகைய அனுமதியை இபிஎப்ஓ அமைப்பு வழங்கி இருக்கிறது.
இவற்றில் 331 நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக பிஎப் தொகைக்கான வட்டியை தங்களது ஊழியர்களின் கணக்குகளில் சேர்க்கவில்லை என்ற தகவலை தற்பொழுது தொழிலாளர் நலனுக்கான பாராளுமன்ற நிலைக்குழு கண்டறிந்துள்ளது. இதுகுறித்த விசாரிக்குமாறு இபிஎப்ஓ அமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இபிஎப்ஓ அறிவிக்கும் வட்டித் தொகையைவிட அதிகமான வட்டியை இந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பிஎப் தொகைக்கு வழங்கலாம். ஆனால் இவற்றில் 10 நிறுவனங்கள் இபிஎப்ஓ ஆணையம் அறிவித்ததைவிட குறைவான தொகையை தங்களது ஊழியர்களின் பிஎப் தொகைக்கான வட்டியாக நிர்ணயித்துள்ளனர். இவற்றில் 7 நிறுவனங்கள் மேற்கு வங்காளம், சிக்கிம் மற்றும் அந்தமான் நிக்கோபர் பகுதிகளைச் சேர்ந்தவை.
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவில் தலா ஒரு நிறுவனமும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவற்றில் 3 நிறுவனங்கள் தனியாக பிஎஃப் அறக்கட்டளை வைத்துக்கொள்வதற்கு இதுவரை வழங்கிவந்த அனுமதியையும் இபிஎப்ஓ ரத்து செய்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி ஆணையமான இபிஎப்ஓ மொத்தமாக 10 லட்சம் கோடி ரூபாய் தொகையை கையாண்டு வருகிறது. இவற்றில் இந்த 3,805 நிறுவனங்கள் கையாளும் தொகை 2 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 331 நிறுவனங்கள் பிஎப் தொகையை முதலீடாக பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிறுவன தணிக்கை விதிமுறைகளை கடுமையாக்காவிட்டால் எதிர்காலத்தில் உங்கள் பிஎப் தொகைக்கான வட்டி மட்டுமல்ல, பிஎப் தொகையேகூட இந்த நிறுவனங்களால் கபளீகரம் செய்யப்பட்டுவிடலாம்.